ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் (வயது 43) இறுதி சடங்கு எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறும்.
அவருடைய பூதவுடல், எத்துகல்பிட்டியவில் உள்ள அன்னாரது வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
தனது நண்பரொருவரினால் கடந்த 26ஆம் திகதி, கோடாரி தாக்குதலுக்கு இலக்கான இவர், இன்று சனிக்கிழமை காலை மரணமடைந்தார். இவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
1972ஆம் ஆண்டு டிசெம்பர் 12ஆம் திகதி, பொலன்னறுவையில் பிறந்த இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடும்பத்தில் இளைய சகோதரராவார்.
பொலன்னறுவை லக்ஷ உயன கனிஷ்ட வித்தியாலத்தில் ஆரம்ப கல்வியை பயின்ற இவர், கம்பஹா உடபில மகா வித்தியாலத்தில் சாதாரண தரம் வரையிலும் பயின்றார்.
அத்துடன் கம்பஹா கலஹிடியாவ மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பொலன்னறுவை நொபாவௌ மகா வித்தியாலயம் ஆகியவற்றியில் உயர் தரம் பயின்றுள்ளார்.
பொலன்னறுவை ரஜரட்ட பில்டர்ஸ் மற்றும் சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ரஜரட்ட ஹால் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளராவார்.
வர்த்ததுறையில் பேசப்படும் ஒருவரான இவர், சமூக சேவையாளர் மட்டுமன்றி ஒரு கொடையாளியாவர்.
அதேவேளை இன்று வெளியான ஜனாதிபதியின் நிகழ்வுகளில் தம்பியின் மரணத்தால் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இதுவரை தெரியவில்லை..
சற்றுமுன் வெளியான ஜனாதிபதியின் நிகழ்சிகளின் படி,
இன்று (சனி) சீனாவில் நடைபெறவுள்ள ஆசியாவின் வருடாந்த போஆ மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட உரையாற்றவுள்ளார்.
ஆசியாவின் அபிவிருத்தி தொடர்பில் அன்னியோன்ய கருத்துக்கள் பரிமாற்றத்தின் மேடையாக கருதப்படும் போஆ மாநாடு சீனாவின் ஹய்னான் பிராந்தியத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் 15 நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மாநாட்டின் தலைவர் முன்னாள் ஜப்பானிய பிரதமரான யஷூவோ புகுடா மாநாட்டை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், பிரதான உரையை சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின் நிகழ்த்தவுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சுவீடன் பிரதமரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.