ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகமும், ஆசிய பசுபிக் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திக் குழுத் தலைவரும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட உதவி நிர்வாகியும், ஆசிய பசுபிக் பிராந்தியப் பணியகப் பணிப்பாளருமான யஹாலியங் ஸூ நாளைமறுதினம் 4ஆம் திகதி சனிக்கிழமை இலங்கை வருகின்றார்.
ஸூவின் இலங்கைக்கான இரண்டாவது பயணம் இது. அவர் பல உயர்மட்ட அரச உத்தியோகத்தர்கள், அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து இலங்கையின் புதிய அரசியல் சூழலில் ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றும் ஏனைய ஐ.நா. நிறுவனங்களின் எதிர்கால உதவிகளை உறுதிசெய்வதுடன், குறிப்பாக ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான அபிவிருத்திப் பங்காளராகப் பலப்படுத்துவது குறித்தும் கருத்துப் பரிமாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 10ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், இலங்கையின் அபிவிருத்தி நிலைமை பற்றி முதன்மை சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் கொள்கை மட்டக் கலந்துரையாடலில் ஈடுபடுவார். மேலும் ஸூ வடமத்திய மற்றும் வடமாகாணங்களுக்கான தனது பயணத்தின்போது அரச அதிகாரிகளையும், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளதுடன், மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் மேலதிக உதவிகளின் தேவைகளையும் கண்டறிவார். அவர் இந்த மாகாணங்களில் ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட உதவிகளுடனான வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களையும் மேற்பார்வை செய்வார்.