உத்தேச 19ஆவது திருத்தச்சட்டத்தின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவதா இல்லையா என்பது உள்ளிட்ட அத்திருத்தின் மீதான நன்மை தீமைகள் குறித்து உயர்நீதிமன்றில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

367

 

 

உத்தேச 19ஆவது திருத்தச்சட்டத்தின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவதா இல்லையா என்பது உள்ளிட்ட அத்திருத்தின் மீதான நன்மை தீமைகள் குறித்து உயர்நீதிமன்றில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

high court 444f

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச 19ஆவது சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையில் நீதிபதிகளான சந்திரா ஏக்கநாயக்க பிரியசத் டெப் ஆகிய மூவரடங்கிய குழாம் முன்னிலையில் அம்மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

முதலாவதாக இந்த நாட்டின் பிரஜைகளினுடைய அடிப்படை உரிமைகளை 19ஆவது திருத்தச்சட்டம் பாதிக்கின்றது என்பதை பிரதானமாக குறிப்பிட்டு சிரேஷ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறியால் தாக்கப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இம்மனு சார்பாக ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறி,விசேடமாக இந்த நாட்டின் பிரஜைகளுடைய அடிப்படைய உரிமைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது.

குறிப்பாக இந்த நாட்டின் பிராஜவுரிமை இல்லாத ஒருவருடைய வெளியீடுகள், கடிதங்கள், ஆவணங்கள் போன்றவற்றை நாட்டினுள் கொண்டுவருதற்கு இடமளிக்கப்பட்டிருக்கின்றமை மிகவும் ஆபத்தானது ஒன்றாகும். அதேநேரம் நிறைவேற்று அதிகாரங்கள் அனைத்தும் ஜனாதிபதியிடம் காணப்பட்டன. ஆனால் இந்த திருத்தத்தின் மூலம் அனைத்து அதிகாரங்களும் பிரதமருக்கு வழங்கப்படவுள்ளது.

அதேபோன்று தனிநபர் உரிமைகளுகள் தொடர்பாக சட்ட ஏற்பாடுகளிலும் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. ஆகவே 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதே சிறந்தாகும். பெரும்பன்மை பெறாதவொரு அரசாங்கம் அமையுமாயின் அந்த அரசு 4வருடங்களும் 6 மாதங்கள் வரையில் ஆட்சியை நடத்தக்கூடிய வகையிலான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. இதுவும் மிகவும் ஆபத்தானதொன்றாகும். இந்த ஆபத்தான விடங்களை தாண்டி பேராபத்தான விடயமொன்று காணப்படுகின்றது. குறிப்பாக 19ஆவது திருத்தச்சட்டமானது வரைபு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும் அவற்றில் வேறுபாடுகள் பல காணப்படுகின்றன. முக்கியமாக கூறுவதானால் நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பன சரத்தில் நான்கு வருடங்கள் 6 மாதங்கள் நிறைவின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என கூறப்படுகின்றது. அவ்வாறு கலைப்பதென்றால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் தேவை என தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ள வரைபில் நான்கு வருடங்கள் 6 மாதங்கள் நிறைவடைந்த பின்னர் பலமிருந்தால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இது முரண்பாடான விடயமாகும். ஆகவே இவ்விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். புதிய அரசு வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் திருத்தச்சட்டத்தை விரைவாக கொண்டு வந்திருக்கின்றது என நினைக்கின்றேன்.

எனினும், உதய கம்மன்பில தலைமையிலான அரசியல் கட்சியைத் தவிர வேறு எந்தவொரு அரசியல் கட்சியும் 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை. அவ்வாறிருக்கையில் எம்மால் தாக்கல் செல்லப்பட்ட மனுக்கள் விரைவாக விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமைகள் முன்னர் காணப்படவில்லை. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. ஆகவே புதிய பிரதம நீதியரருக்கு நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன் என தனது வாதத்தில் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து பிலித்துறு ஹெல உறுமய கட்சித்தலைவர் தலைவரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில மற்றும் பெங்கமுவே நாலக்க தேரர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி மனோகர சில்வா ஆஜரானார். 19ஆவது திருத்தச்சட்டமானது நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாதுள்ளதாக சுட்டிக்காட்டினார். மேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தி பிரதமருக்கு அதிகாரங்களை வழங்குவதானது நியாயமற்றது. அரசியல் அமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் நியமனம் பக்கச்சார்பாக காணப்படுவதுடன் பின்தங்கிய கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது.

அதேநேரம் தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு உள்பட சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் அப்பேரவையின் மூன்று முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் சிறுபான்மை இனத்தவர்கள் நிச்சயம் பாதிப்படைவார்கள் – என குறிப்பிட்டார். அதேநேரம் 19ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பிரதமரின் ஆலோசனையின் பிரகாரமே ஜனாதிபதி செயற்பட வேண்டும் என்ற ஏற்பாடானது அரசமைப்பின் நான்காது உறுப்புரிமையை மீறும் வகையில் காணப்படுகின்றது. அரசமைப்பின் மூன்றாம் நான்காம் உறுப்புரிமை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்ததாக காணப்படுவதால் அத்திருத்தம் மூன்றாவது உறுப்புரிமையையும் மீறுவதாகவே உள்ளது

. அரசமைப்பின் மூன்றாவது உறுப்புரை மீறப்பட்டால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டும். அவ்வாறில்லாது விடின் அது மக்களின் இறைமையைப் பாதிக்கும் விடயமாகும். அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதனடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டியது அவசியமாகும் என தென்னாபிரிக்க அரசியல் யாப்பு உட்படபல்வேறு உதாரணங்களையும் சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக முன்வைத்து வாதிட்டார். அதனைத் தொடர்ந்து 19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதானால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மட்டுமே போதுமானது என்பதை வலியுறுத்தி தனிப்பட்ட முறையில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்த சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தனது வாதத்தை முன்வைத்தார். 19ஆவது திருத்தச்சட்டத்தின் 01, 02, 03, 06,07, 09 மற்றும் 11 ஆகிய சரத்துக்கள் தொடர்பாக அனைவரும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

என சட்டத்தரணி சுமந்திரன் வலியுறுத்தினார். தொடர்ந்து அரசமைப்பின் 3ஆவது உறுப்புரை மீறப்பட்டால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டும். அவ்வாறிருக்கையில் நான்காவது உறுப்புரை மட்டும் மீறப்பட்டால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லத் தேவையில்லை. அவ்வாறிருக்கையில் நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அதை திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு சட்டத்தில் இடமிருக்கின்றது. அதேநேரம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாது விட்டால் மக்களின் இறைமை பாதிக்கப்படும் பறிக்கப்படும் என்பதை ஏற்கமுடியாது. காரணம் இறைமையின் பிரதான அங்கத்துவங்களுக்கிடையில் மாத்திரமே அதிகாரம் மாற்றப்படுகின்றதே தவிர குறைக்கப்படவில்லை. அதேபோன்று அதிகரிக்கப்படவில்லை.

இறைமையின் ஓர் அங்கத்திலிருந்து பிறிதொரு அங்கத்துக்கு அதிகாரம் மாற்றப்படுகின்றது. இதனூடாக இந்த நாட்டின் எந்தவொரு பிரஜைகளினதும் உரிமைகள் மீறப்படவில்லை. அதனால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டிய அவசியமில்லை. மேலும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று மக்கள் ஆணைபெற்ற ஒருவரே ஜனதிபதியாகவுள்ளார். அவரின் கீழே அரசியல் அமைப்பில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாம் வெறெந்த நாட்டின் அரசியல் அமைப்பையும் இங்கு கொண்டுவரவில்லை. வேறு நாடுகளின் விருப்பதிற்கு ஏற்ற திருத்தங்களை மேற்கொள்ளவில்லை. எந்தவொரு அரசசார்பற்ற அமைப்புக்களின் பின்னணியிலும் செயற்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. ஜனநாயக்கட்டமைப்பின் முக்கிய அங்கமான பாராளுமன்றத்திற்கு பதில் கூறும் முறைமையே ஏற்படுத்தப்பட்டள்ளது. தற்போது கூட பாராளுமன்றுக்கு ஜனாதிபதி, அமைச்சரவை தனித்தனியாக பதில் கூறும் பொறுப்பைக் கொண்டுள்ளனர் என்றார்.

இவர்களின் வாதப்பிரதிவாதங்களை பிரதம நிதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான நீதிரசர்கள் குழாம் உன்னிப்பாக அவதானித்ததுடன் உத்தேச 19ஆவது திருத்தச்சட்டம் மீது தக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை இன்றைய தினமும் மேற்கொள்வதென அறிவித்தது. கடந்த 24ஆம் திகதி உத்தேச 19ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்தரணிகளான கொமின் தயாசிறி, தர்சன வீரசேகர, டி.வேந்துருவகே, திஸ்ஸயாப்பா, ஆகியோரும் எல்.பி.ஐ.பெரேரா, உதய கம்மன்பில, பெங்கமுவே நாலக்க தேரர், வணிகசேகர, மாத்தறை ஆனந்த சங்கர தேரர் , சோமவீர சந்திரசிறி, எஸ்.வணிகசேகர, பியல் நாணக்கார, ஜி.என்.எஸ்வீரசிங்க, என்.கொடித்துவக்கு, ஜே.ஏ.ஜெயக்கொட ஆகியோரும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், எம்.ரி.வி, எம்.பி.சி ஆகியன உட்பட 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டள்ளதுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜெப்ரி அழகரட்ணம் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. –

SHARE