உலகின் உள்ள அனைவருக்கும் நடனம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது மைக்கேல் ஜாக்ஸன் தான். இவரின் நடனம் ஐரோப்பிய நாடுகளை தாண்டி 1985க்கு மேல் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது.
இதை தொடர்ந்து பலரும் இவரை போல் ஆகவேண்டும் என்று முயற்சி செய்து யாராலும் மைக்கேல் ஜாக்ஸன் ஆகமுடியவில்லை. அதே சமயத்தில் இந்திய சினிமாவில் பிரபல நடனக்கலைஞரான சுந்தரம் அவர்களுக்கு ஏப்ரல் 3ம் தேதி 1973ம் ஆண்டு இரண்டாவது மகனாக பிறந்தார் பிரபுதேவா.
இரத்ததிலேயே நடனம் ஊறி இருந்ததால் தான் என்னமோ அவரும் ஒரு நடன கலைஞராகவே வளர்ந்தார். சிறு வயதிலேயே மைக்கல் ஜாக்ஸன் மீது கொண்ட பற்றால், அவரை போலவே பல ஸ்டெப்புக்களை போட்டு இந்திய மக்கள் அனைவரையும் கவர்ந்தார்.
மைக்கல் ஜாக்ஸனின் பிரபல நடன அசைவான மூன் வாக்கை மிக எளிதாக பிரபுதேவா ஆடி அசத்துவார். தன் ரப்பர் போன்ற உடலை வளைத்து, நெளித்து பல புதிய அசைவுகளை நடனத்தில் புகுத்தி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இவர் தன் தந்தையுடன் தன் நடன பணியை ஆரம்பித்து அக்னி நட்சத்திரம் படத்தில் திரையில் தோன்றினாலும், இதயம் படத்தில் ஏப்ரல் மேயிலே பாடல் தான் இவரின் தனித்துவத்தை வெளியே கொண்டு வந்தது.
இதை தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது படமான காதலன் படத்தில் ஹீரோவாக பிரபலமானார். நடனம்+நடிப்பு இது இரண்டிலும் இரட்டை சவாரி போட்டு வெற்றி கொடி நாட்டியவர். இதில் லவ் பேர்ட்ஸ்,வி.ஐ.பி., மிஸ்டர்.ரோமியோ, மின்சார கனவு, காதலா காதலா, பெண்ணின் மனதை தொட்டு, உள்ளம் கொள்ளை போகுதே போன்ற படங்கள் மிகவும் பிரபலம்.
இது மட்டுமில்லாமல் தமிழ் நாட்டில் இருந்து பாலிவுட் சென்று வெற்றி பெற்றவர்களில் பிரபுதேவாவும் ஒருவர். அனில் கபூர், மாதுரி, ஹிரித்திக், ஷாருக் போன்ற முன்னணி கலைஞர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சிறந்த நடன கலைஞருக்காக இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது போக்கிரி, ராமையா வஸ்தாவையா, ஆர்.ராஜ்குமார், ரவுடி ரத்தோர் போன்ற படங்களின் மூலம் கோலிவுட், பாலிவுட் இரண்டிலும் தன்னை ஒரு இயக்குனராகவும் நிலை நிறுத்தி கொண்டார். இப்படி அனைத்து ரூபங்களிலும் புகுந்து விளையாடி இந்திய இளைஞர்கள் பலரின் ரோல் மாடலாக இருக்கும் பிரபுதேவா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதில் சினி உலகம் மகிழ்ச்சியடைகிறது.