மஹிந்த ஆட்சியில் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கிவிட முடியாது என்றும், இதுபற்றி ஆழமாக ஆராயப்படவேண்டும் என்றும் புதிய அரசு அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின்போது, “புலம்பெயர் அமைப்புகள் மீதும், தனிநபர்களுக்கு எதிராகவும் விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பில் பரீசிலிக்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி, அத்தடை எப்போது நீக்கப்படும்” என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேற்படி தடையை உடன் நீக்கிவிட முடியாது. அதுபற்றி ஆராயவேண்டும். தற்போது ஐரோப்பாவில் புலித்தடை நீடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி எவரும் பெரிதாகப் பேசுவதில்லை என்றும் அவர் கூறினார்.