
சூரி, விமல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் அடர்ந்த வனப்பகுதியில் பேரிஜம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வனத்துறையினர் அனுமதி பெற்றுதான் உள்ளே செல்ல வேண்டும். இங்கு கடந்த 17-ந்தேதி நடிகர்கள் விமல், சூரி மற்றும் சினிமா பட இயக்குனர்கள் சிலர் எந்த அனுமதியும் பெறாமல் 3 வாகனங்களில் வந்தனர். இவர்களுக்கு வனத்துறையினர் மற்றும் கொடைக்கானல் நகரை சேர்ந்த பலர் உதவியுள்ளனர். இதனிடையே இ-பாஸ் இல்லாமல் அவர்கள் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு வந்து சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஆர்.டி.ஓ. சிவகுமார் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கொடைக்கானல் போலீசில் கடந்த 24-ந்தேதி ஒரு புகார் மனு அளித்தார். அதில் நடிகர்கள் விமல், சூரி உள்பட அனைவரும் இ-பாஸ் இல்லாமல் கடந்த 15-ந்தேதி கொடைக்கானலுக்கு வந்து தங்கியுள்ளனர். 17-ந்தேதி அவர்கள் வனப்பகுதிக்கு சென்று பேரிஜம் ஏரியில் மீன்பிடித்து பொழுதுபோக்கில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
எனவே அவர்கள் இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு வந்தது குறித்து பேரிடர் மேலாண்மை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், நோய் தொற்றினை பரப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

மேலும் காதர்பாட்சா எவ்வாறு நடிகர்கள், இயக்குனர்களை அழைத்து வந்தார் என்பது குறித்தும், அவர்கள் வந்த 3 வாகனங்கள் யாருடையது என்பது குறித்தும், வெள்ளிநீர்வீழ்ச்சியில் உள்ள சோதனைச்சாவடியை அவர்கள் எவ்வாறு கடந்து வந்தனர்?, அல்லது வேறு ஏதாவது வழியில் வந்தார்களா?, நடிகர் சூரியின் உறவினர் வீட்டில் அவர்கள் தங்கி இருந்தார்களா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் விரைவில் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.