தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கத்துக்கு உதவினார் என்று குற்றம்சாட்டப்பட்டு கிளிநொச்சியில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் ஜெயக்குமாரி கடந்த வருடம் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட, அவரது மகளான விபூசிகா நீதிமன்ற உத்தரவுப்படி சிறுவர் இல்லமொன்றில் சேர்க்கப்பட்டார்.
அதன்பின்னர் கடந்த மார்ச் மாதம் ஜெயக்குமாரி பிணையில் விடுவிக்கப்பட்டார். அதையடுத்து அவரது மகளான விபூசிகாவை தன்னுடன் அழைத்துச் செல்வதற்கான அனுமதியையும் அவர் நீதிமன்றூடாகப் பெற்றுக் கொண்டார். இந்தநிலையில் அவர் முன்னர் வசித்த இடத்தை விட்டு விலகி வேறு இடத்தில் வசிப்பதற்கு முற்பட்ட போதும் அச்சம் காரணமாக எவரும் வீடு கொடுப்பதற்கு முன்வர வில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. வசிக்க வீடு கிடைக்காத நிலையில் அவர் குடாநாட்டின் ஆலயம் ஒன்றின் மடத்தின் சம்மதத்துடன் தங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.