யாழ்ப்பாணம் வலி.வடக்கில் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட எட்டு கிராமங்களில் தையிட்டி தெற்கு கிராமத்தை பார்வையிட நில உரிமையாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை.
ஏனைய ஏழு கிராமங்களிலும் 423 ஏக்கர் நிலப்பரப்பையே பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமது காணிகளை விட்டு இடம்பெயர்ந்து வெளி இடங்களில் வாழ்ந்தவர்கள் பெரும் ஆவலோடு தமது காணிகளைப் பார்வையிடச் சென்றபோதும் சில இடங்களுக்கு இராணுவத்தினர் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர் மக்கள். இதன்படி, வலி.வடக்கில் மயிலிட்டி வடக்கு(ஜே-246),வீமன்காமம் வடக்கு(ஜே-236), வீமன்காமம் தெற்கு(ஜே-237), காங்கேசன்துறை தெற்கு(ஜே-235), மயிலணி-(ஜே-240), கட்டுவன்-(ஜே-238), வறுத்தலைவிளான்-(ஜே-241) ஆகிய ஏழு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக சுமார் 423 ஏக்கர் நிலப்பரப்பு மாத்திரமே மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது தையிட்டி தெற்கு(ஜே-250) கிராமத்துக்கும் மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதேபோன்று ஜே.-241 வறுத்தலைவிளான் கிராம அலுவலர் பிரிவிலும் ஒரு பகுதி விடப்பட்டாலும் மக்கள் அதிக நெரிசலாக வாழ்ந்த பிரதேசம் விடுவிக்கப்படவில்லை. இதனால் மக்கள் திரும்பி ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றுள்ளனர். இந்த கிராம அலுவலர் பிரிவில் இராணுவத்தினரின் 11 ஆவது படையணியின் தலைமையகம் அமைந்துள்ளமையால் பல ஏக்கர் காணிகள் இராணுவத்தினால் விடுவிக்கப்படவில்லை ஏன்பது குறிப்பிடத்தக்கது.