“கைப்பாவை போல் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 நாள் வேலைத்திட்டம் முடிவடைந்த கையோடு பதவியை விட்டு விலகவேண்டும். இல்லாவிடின் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.” – இவ்வாறு பொதுபலசேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுபலசேனாவின் ஊடவியலாளர் மாநாடு நேற்று கிருலப்பனையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “மைத்திரிபால மேடையேறும்போது சிலர் கூக்குரல் இடுகின்றனர்.
இதற்கு முன்னர் இந்த நாட்டில் இருந்த ஜனாதிபதியினருக்கு இவ்வாறு ஏற்பட்டதில்லை. நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியைப் பிடிக்கவில்லை. மைத்திரி அரசின் செயற்பாடு காரணமாகவே மக்கள் விரக்தியடைந்துள்ளனர். மைத்திரிபால ஆட்சிக்கு வரும் முன்னே நாங்கள் கூறினோம் மைத்திரி ஒரு கைபொம்மையென்று. அது இப்போது உண்மையாகியுள்ளது. நாட்டின் உயர் பதவிக்கு நல்ல ஒரு முதுகொழும்புள்ள மனிதர் அவசியம்.
இந்த அரசின் 100 நாள் திட்டம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. புலம்பெயர் அமைப்புகள் தமது செயற்பாட்டுக்கு அமெரிக்காவினூடாக அழுத்தம் கொடுத்து வருகின்றது. எனவே, பிரபாகரனின் கிளைகளைத் தோற்கடிப்பதற்கு மக்கள் அணிதிரள வேண்டும்”