டுவிட்டரில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் அம்சம்!

408

3 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் டுவிட்டரில் “ப்ளூ டிக்” வசதியை கொண்டுவர டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை உலகம் முழுவதும்  உள்ள மக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். டுவிட்டரில் “ப்ளூ டிக்” எனப்படும் “சரிபார்க்கப்பட்ட கணக்கு” ஒரு கௌரவமாக பார்க்கப்படுகிறது.

இந்த “ப்ளூ டிக்” வசதி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஊடகத்தினர், எழுத்தாளர்கள் போன்றோருக்கு வழங்கப்பட்டு வந்தது. இதனால் இதில் பல சர்ச்சைகள் எழுந்தன.

பிரபலங்கள் என்பதற்கு என்ன அளவுகோல்? எதை அடிப்படையாக வைத்து “ப்ளூ டிக்” வசதி கொடுக்கப்படுகிறது? என பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு டுவிட்டர் நிறுவனம் “ப்ளூ டிக்” வசதியை நிறுத்தியது.

இந் நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் “ப்ளூ டிக்” வசதியை கொண்டுவர டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இது மீண்டும் கொண்டு வரப்படும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக புதிய கொள்கையை வெளியிட்டுள்ள டுவிட்டர் நிறுவனம் ஆறு வகையான கணக்குகள் மட்டுமே “ப்ளூ டிக்” வசதியே பெறுவதற்கு தகுதியடையவை என தெரிவித்துள்ளது.

அவை அரசு துறைகள்; நிறுவனங்கள்; பிராண்டுகள்; மற்றும் லாப நோக்கமற்ற நிறுவனங்கள்; செய்தி, பொழுதுபோக்கு, விளையாட்டு துறைகள் மற்றும் பிற செல்வாக்கு மிக்க நபர்களின் கணக்குகள் ஆகும்.

தங்களின் இந்த புதிய கொள்கை குறித்து பயனாளர்கள் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE