முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருகை தருவதை தடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மகிந்த ராஜபக்சவிடம் சென்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை பாராளுமன்ற வளாகத்தில் கட்சி தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சபாநாயகர் இதனை அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தனக்கு தகவல் வழங்கியதாக சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்திற்குள் முன்னெடுத்து வந்த எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைப்பதற்கு அதிகாரம் உள்ளதாக நீதியமைச்சர் ஏற்கனவே வெளியிட்டிருந்த கருத்து வாபஸ் பெறப்பட்டதை சபாநாயகர் அறிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர் இருக்கும் இடத்திற்குச் சென்று, வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
தமது கோரிக்கைக்கு நியாயமான பதில் கிடைத்துள்ளதால், நேற்று முற்பகல் முதல் மேற்கொண்டுவந்த எதிர்ப்பு நடவடிக்கையை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிவுக்கு கொண்டு வருவதாகவும் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டார்
அத்தோடு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக, 116 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பிரேரணையொன்றை சமர்ப்பிக்க கிடைத்துள்ளமை எதிர்க்கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியெனவும் அவர் கூறினார்.