மகிந்த மற்றும் குடும்பத்தினர் விமானப்படைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்திய இராணுவ அதிகாரி

381

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திய விமானப் பயணங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் பாரிய தொகையை இராணுவ அதிகாரி ஒருவர் செலுத்தியுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு விமானப்படையின் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டமை குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நடத்தி வரும் விசாரணைகளின் போது விமானப்படை அதிகாரிகள் இதனை கூறியுள்ளனர்.

இது சம்பந்தமான ட்ரான்ஸ்பரன்சி இண்டர்நஷனல் அமைப்பு தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு ஒன்றை செய்திருந்ததுடன் தேர்தல் ஆணையாளர் அதனை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பியிருந்தார்.

மனித உரிமை ஆணைக்குழு நடத்திய விசாரணைகளில் தேர்தல் ஆணையாளர் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் விமானப்படை தளபதி சார்பில் இரண்டு அதிகாரிகள் கலந்து கொண்டதாக ட்ரான்ஸ்பரன்சி இண்டர்நஷனல் இலங்கை நிறுவனத்தின் செய்தி தொடர்பு பணிப்பாளர் ஷான் விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

செலுத்த வேண்டிய பணத்தில் ஒரு கோடியே 75 லட்சத்து35 ஆயிரம் ரூபா செலுத்தப்பட்டதாகவும் அதனை இராணுவ கோப்ரல் ஒருவர் வந்து செலுத்தியதாகவும் விசாரணைகளில் பங்கேற்ற இரண்டு விமானப்படை அதிகாரிகள் கூறியதாகவும் விஜேதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக விபரமான அறிக்கையை வழங்குமாறு மனித உரிமை ஆணைக்குழு விமானப்படை தளபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் 55 விமானப் பயணங்களை மேற்கொண்டிருந்ததுடன் அவற்றுக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த விமானப் பயணங்களில் 23 பயணங்களை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே மேற்கொண்டார்.

இராணுவ கோப்ரல் செலுத்த வேண்டிய கட்டணத்தில் ஒரு தொகையை செலுத்தியுள்ள நிலையில், மேலும் 90 லட்சத்து 75 ஆயிரம் ரூபா செலுத்தப்பட வேண்டியுள்ளது.

ஹெலிகொப்டர்களை வழங்குமாறு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவே விமானப்படைக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதற்கான கட்டணத்தை செலுத்துமாறு பசில் ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

SHARE