புலம்பெயர்ந்தவர்கள் நாடு திரும்ப வேண்டும்! சென்னை சென்ற யாழ். மாணவர்கள் வேண்டுகோள்

360

 

அரசியல்வாதிகள் அல்லாத, மீனவர்கள் அல்லாத மாணவர்களது வருகை இது! இலங்கை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் விமான நிலையச் செயல்​பாடுகள் குறித்த பயிற்சிக்காக சென்னை சென்றிருந்தனர்.

கல்வியின் அவசியத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கைக்கான இந்தியத் தூதர் நட்ராஜனின் முயற்சியால், 30 பேர் கொண்ட யாழ்ப்பாண மாணவர் குழு தமிழகச் சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்டது.

இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கிரிதரன், யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் அமைய வாய்ப்பிருக்கிறது. இந்தச் சூழலில் விமானத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், விமான நிலைய செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

யாழ்ப்பாணம், வன்னி, வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 மாணவர் – மாணவியர் இந்தச் சுற்றுப் பயணத்தில் பங்குபெற்றுள்ளனர்.  அவர்கள் ஜூனியர் விடன் நிருபரிடம் உரையாடியதில் இருந்து முக்கிய பகுதிகள்:-

சிறீசேன அரசு இலங்கையில் என்னென்ன புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

உள்நாட்டு விமான நிலையங்கள் அனைத்தும் சர்வதேச விமான நிலையங்களாகத் தரம் உயர்த்தப்பட வேண்டும். எங்கள் சொந்த மண்ணிலேயே பணியாற்ற வேண்டும். முக்கியமாக, பட்டதாரி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும்.

இலங்கையால் மட்டுமே இது சாத்தியப்படாது. அண்டை நாடான இந்தியாவும் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். யாழ்ப்பாணம் மட்டுமின்றி, மற்ற பகுதிகளிலும் புதிய கல்வி நிலையங்களை உருவாக்க எங்கள் அரசு முயற்சி எடுக்க வேண்டும். மேலும், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த இலங்கை அரசு முயற்சிகளை எடுக்க வேண்டும்.

போர் முடிந்து ஐந்தரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இலங்கையில் தமிழர்களின் நிலை எப்படி இருக்கிறது?

விலைவாசி அதிகமாகவும் வேலைவாய்ப்புகள் குறைவாகவும் இருக்கின்றன. பணிக்காக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. வட மாகாணம் முழுவதும் இதே நிலைதான். இந்த நிலை மாறவேண்டும்.

இந்திய அரசிடமிருந்து என்ன மாதிரியான உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள்?

போர் முடிந்தவுடன் இந்திய அரசானது பல நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ரயில்வே துறையில் இந்தியாவின் பங்கு அதிகம். இதுமட்டுமின்றி, வீடமைப்புத் திட்டம், வீதியமைப்புத் திட்டம் ஆகிய திட்டங்களை தற்​போது நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இப்போது நிலவக் கூடிய விலைவாசியில் வெளியிலிருந்து வட்டிக்குப் பணம் பெற்றுத்தான் வீடுகளைக் கட்டி முடிக்கும் சூழலில் பலரும் உள்ளனர். ஆக, இந்திய அரசு கொடுக்கும் மானியத்தை உயர்த்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளில் இந்திய அரசு ஈடுபட வேண்டும்.

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தைத் தொடர்ந்து தமிழர்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

காலங்காலமாக இந்தியாவை நம்பித்தான் இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். அது என்றைக்கும் மாறாது. போருக்குப் பிறகு எந்த நாட்டு பிரதமரும் யாழ்ப்பாணத்துக்கு வந்தது இல்லை. பிரதமர் மோடியின் வருகை தமிழர்களுக்கு மேலும் நம்பிக்கை கொடுத்திருக்கிறது. ‘எங்களைப் பற்றி யோசிக்கவும் எங்கள் மீது அக்கறை காட்டவும் ஒரு நாடு இருக்கிறது’ என்ற புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

புலம்பெயர்ந்து வாழும் எங்கள் மக்கள் நாடு திரும்ப வேண்டும். உங்கள் உதவிக்காக இங்கு பலரும் காத்து​க்கொண்டி​ருக்​கிறோம்.

இந்தச் சுற்றுப்​பயணத்​தின் முக்கிய நோக்கங்கள் என்ன? என்ன கற்றுக்​கொண்டீர்கள்?

விமானங்கள், விமான நிலையங்கள் இந்த இரண்டுமே எங்களுக்குப் புதிய விஷயங்கள். இந்தத் துறையில் பணிபுரிவது எங்கள் கனவாக இருந்தது. ஆனால், அதற்கான படிப்புகள் இலங்கைத் தலைநகரான கொழும்பில் மட்டுமே இருந்தன. தற்போது, பல நல்ல உள்ளங்களின் பெரு முயற்சியோடு யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டு அதன் முதல் முயற்சியாக இந்தியாவுக்குக் குழுவாக வந்திருக்கிறோம்.

வகுப்புகளில் விமானங்களைப் பற்றி நிறைய கேட்டிருக்கிறோம். ஆனால், பயணம் செய்ததில்லை. மேலும், எங்கள் பகுதிகளுக்கு அருகே விமான நிலையங்களும் கிடையாததால், வாழ்நாளில் விமானத்தில் ஒருமுறையாவது பயணம் செய்ய மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருந்தோம். இந்த நேரத்தில் இந்திய அரசு எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க நாங்கள் தமிழகம் வந்திருக்கிறோம்.

 

SHARE