இன்று மஹிந்தவின் கேள்வி.

381

தான் உட்பட தனது குடும்பத்தவர்களுக்கு தண்டனை வழங்கும் வேலைத்திட்டமொன்றை இந்த அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்றது என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இவ்வாறு இந்த அரசாங்கம் நடந்துகொள்ளுமளவுக்கு தான் செய்த தவறு என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாத்தளை, புருக்கல ஸ்ரீ தம்மசித்தியாராமய விகாரைக்கு, நேற்று வியாழக்கிழமை (23) சென்ற முன்னாள் ஜனாதிபதி, பசில் ராஜபக்ஷவின் கைது மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘அமைச்சுப் பதவியொன்று வழங்கியமை, இலஞ்சம் வழங்கியதாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஜனாதிபதியாக உள்ள ஒருவரால், அமைச்சுப் பதவியொன்றையாவது வழங்க முடியாதா என்றும் கேள்வி எழப்பினார்.

அத்துடன், இவ்வாறானதொரு நிலையில், நான் ஏதாவதொரு விகாரைக்குச் சென்று ‘சில்’ சமய அனுஷ்டானத்தில் ஈடுபட்டாலும், பௌத்த பிக்குமார்களுக்கு நான் இலஞ்சம் வழங்கினேன் என்றும் இந்த நபர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்’ என்றும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, வென்னப்புவ, தும்மலதெனிய ஸ்ரீ சுமனாராம விகாரைக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை சென்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ, அங்கிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றும் போது, ‘எங்களாலும் பொதுமக்களுக்கு சில தவறுகள் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.

‘மோசடி, ஊழல் மேற்கொண்டு இந்த நாட்டை அழித்ததல்ல நாம் செய்த தவறு. எம்மைச் சுற்றியிருந்தவர்களை பாதுகாத்ததே நாம் செய்த தவறாகும். அவர்களின் தவறுகளைப் பார்த்துக்கொண்டு, அவர்களுக்கு மன்னிப்பளித்தது நாம் செய்த தவறாகும். இனிமேல், இவ்வாறான தவறுகளை நான் செய்யமாட்டேன்’ என்றும் இதன்போது அவர் கூறினார்.

‘கடந்த காலங்களில் நான் இல்லாமல் எதுவும் இல்லை என்று அவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று, அவர்களுக்கு என்னுடைய ஞாபகமே இல்லை’ என்று மஹிந்த ராஜபக்ஷ இதன்போது மேலும் கூறியுள்ளார்.

SHARE