போராளிகளில் 3,402 பேர் போரில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள்! – ஜெகத் விஜேதிலக

435

 

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளில், 3,402 பேர், போரில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் என்றும், இவர்களில் 900 பேர், வாழ்நாள் முழுவதும் பராமரிக்க வேண்டியவர்கள் என்றும் சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார்.
1 ltte-20140430-1 ltte-ex-fighters-in-SL-CSD-436x242
வடக்கு, கிழக்கில் உள்ள உடல் உறுப்புகளை இழந்த 3.402 முன்னாள் போராளிகளில், 33 வீதமானவர்களுக்கு சிறப்பு கவனிப்புத் தேவைப்படுகிறது.இவர்களில், மோசமான காயங்களுக்கு உள்ளாகி, உடல் உறுப்புகள் அகற்றப்பட்டவர்கள், முற்றாக பார்வைத்திறன் இழந்தவர்கள், முற்றாக செவித்திறன் இழந்தவர்கள், முழுமையாக உடல் செயற்திறன் இழந்தவர்கள் ஆகியோர் அடங்குகின்றனர்.

இவர்கள் வாழ்வாழ் முழுவதும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வீடுகளில் கவனிக்கும் வசதிகள் இல்லை.

சரியான மருந்துகளைப் பெறுவதற்கு பெரும்பாலானவர்களுக்கு நிதி நெருக்கடிகள் உள்ளன.

போரில் நெருக்கமான உறவுகளை இழந்து விட்ட பலருக்கு வீடுகளில் அவர்களைக் கவனிக்க யாரும் இல்லை.

முன்னாள் போராளிகளுக்கான கவனிப்பு நிலையங்களை அமைப்பதற்கான யோசனை அரசியல் உயர்மட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மோசமாக காயப்பட்ட முன்னாள் போராளிகள், எதிர்காலத்தில் நாட்டுக்கு முக்கியமான சமூகப் பிரச்சினையாக இருக்கும்.

அவர்களைத் தீவிரவாதிகளாக நாம் கருத முடியாது. அவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, மீண்டும் சமூகத்தில் இணைக்கப்பட்டவர்கள்.

அவர்களின் சமூக பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கத்துக்குப் பொறுப்பு இருக்கிறது.

போரில் உடல் உறுப்புகளை இழந்த சிறிலங்கா படையினரைக் கவனிப்பதற்காக அபிமன்சலா நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதுபோல, உடல் உறுப்புகளை இழந்த முன்னாள் போராளிகளைப் பராமரிப்பதற்கான நிலையங்களை வடக்கு, கிழக்கில் அமைப்பதற்கான சாத்திய அறிக்கைகளை தயாரித்து வருகிறோம்.

தேவைக்கு ஏற்ப எத்தனை நிலையங்கள் அமைக்கப்படுவது என்று முடிவு செய்யப்படும்.

அது கிளிநொச்சியில் அமையுமா, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படுமா என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE