மயிரிழையில் உயிர்தப்பிய மட்டக்களப்பு மருத்துவ மாணவி

681

நேபாளத்தில் நேற்று நிகழ்ந்த பாரிய நிலநடுக்கத்தில், தலைநகர் காத்மண்டுவில் மருத்துவக் கல்வியை மேற்கொண்டு வரும் மட்டக்களப்பைச் சேர்ந்த மாணவி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பைச் சேர்ந்த நிவரிதா சசிதரன் என்ற மாணவி இதுகுறித்து கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்குத் தகவல் வெளியிடுகையில்,

“நேபாளம் வந்துள்ள சிறிலங்கா பெண்கள் உதைபந்தாட்ட அணியின் உறுப்பினர்கள் சிலரைச் சந்திப்பதற்காக, இன்னொரு இலங்கை மாணவியுடன் கல்லூரி விடுதியை விட்டு புறப்பட்டு, வழியில் சென்று கொண்டிருந்த போதே, நில அதிர்வு ஏற்பட்டது.

உடனடியாக விடுதிக்குத் திரும்பிச் சென்று பார்த்த போது அது பெரும் சேதங்களுக்கு உள்ளாகியிருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

ஆறு ஆண்டுகால மருத்துவப் படிப்பை அண்மையிலேயே பூர்த்தி செய்த  நிவரிதா, மட்டக்களப்பில் உள்ள தமது பெற்றோருடன் தொடர்பு கொண்டு, தாம் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்துள்ளார்.

அதேவேளை,  இன்னும் குறைந்தது இரண்டு வாரங்கள் அங்கு தங்கியிருந்து,  நில அதிர்வினால் காயமடைந்தவர்களுக்கு உதவி விட்டு நாடு திரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

SHARE