முல்லைத்தீவில் ஆழிப்பேரலை நினைவாலயம் அமைக்க வடமாகாணசபை சிறப்பு நிதி ஒதுக்கீடு

351
முல்லைத்தீவில் ஆழிப்பேரலை நினைவாலயம் அமைப்பதற்கு வடமாகாணசபையால் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். நினைவாலயம் அமைக்கப்பட இருக்கும் இடம் அண்மையில் கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2004 ஆழிப்பேரலை பேரழிவின் போது உயிரிழந்த ஆயிரக்கணக்கிலான எங்கள் உறவுகளின் உடல்கள், முள்ளியவளை மாமூலை-நெடுங்கேணி பாதையில் கயட்டை என்கிற இடத்தில் விதைக்கப்பட்டிருந்தது. கடல்கோள் பேரழிவு நடந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவ்விடத்தில் ஒரு நினைவாலயம் இன்னும் அமைக்கப்பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் நினைவு நாளுக்கு முன்னதாக மக்கள் அங்கே சென்று அவ்விடத்தை துப்பரவு செய்தே உறவுகளை நினைவு கூர்ந்து வந்தனர்.
இந்நிலையில்,ஒரு சிறப்பு ஒதுக்கீட்டின் ஊடாக ,அவ்விடம் புனரமிக்கப்பட்டு நினைவிடம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று இவ்வாண்டு தொடக்கத்தில் கௌரவ முதலமைச்சரிடம் எழுத்து மூல கோரிக்கை விட்டிருந்தேன்.
அத்துடன் மாகாண நிதி ஒதுக்கீட்டுக் கூட்டத்திலும் இதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தியிருந்தேன்.
இதையடுத்து வட மாகாணசபையால் சிறப்பு ஒதுக்கீடாக ,2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 mullai 2
அண்மையில் குறித்த இடத்திற்கு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக தொழில்நுட்ப அலுவலரை அழைத்துச் சென்று நேரில் காண்பித்தேன்.
உறவுகள் விதைக்கப்பட்ட 7 இடங்களை தனித்தனியாக அடையாளப்படுத்தல் ,நினைவுத் தூபி அமைத்தல் மற்றும் சுற்றுமதில் அமைத்தல் உள்ளிட்ட விடயங்களின் அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
இவ்விடத்தில் நினைவாலயம் அமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் வைத்த கோரிக்கைநிறைவேற்றப்பட உள்ளமை மனநிறைவைத் தருகிறது. என்று தெரிவித்தார். mullai 3
SHARE