
ராணுவத்தில் பணிபுரிய வரும் பெண்கள் மட்டுமல்லாமல், ராணுவ அதிகாரிகளை திருமணம் செய்யும் அனைத்து பெண்களும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்படுகின்றனர்.
பெண்களை அவமதிக்கும் மற்றும் அவர்களின் உரிமையை பறிக்கும் இந்தோனேஷிய அரசின் இந்த வழக்கத்தை தடை செய்ய வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (Human Rights Watch) வலியுறுத்தியுள்ளது.
ராணுவ மருத்துவ சர்வதேச குழுவின் (International Committee of Military Medicine) அதிகாரியான Nisha Varia கூறுகையில், இந்தோனேஷிய தேசத்தின் பாதுகாப்பிற்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
பெண்களை சித்ரவதை செய்து, அவர்களை அவமதிக்கும் வகையில் இந்த பரிசோதனையை மேற்கொள்வது பெண்கள் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் அநீதி என்பதை இந்தோனேஷிய அரசு உணர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான இந்த நடைமுறை குறித்து ஆய்வு செய்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பிற்கு பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தோனேஷிய ராணுவத்தில் உள்ள விமானப்படை, தரைப்படை, கப்பற்படை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளில் பணியாற்றும் பெண்களுக்கு இந்த பரிசோதனையை இந்தோனேஷிய அரசு பல ஆண்டுகளாக செய்து வருவது கண்டுபிடிக்கபட்டுள்ளது.
மேலும், பெண்கள் கன்னித்தன்மை உள்ளவர்கள் தான் என மருத்துவ பரிசோதனையின் மூலம் உறுதியாக தெரிந்த பின்னரே அவர்கள் ராணுவ அதிகாரிகளை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது.
இவ்வாறு கன்னித்தன்மை பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 11 பெண்கள் மற்றும் இந்த பரிசோதனையை செய்த ஒரு மருத்துவரிடமும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு விசாரணை செய்துள்ளது.
விசாரணையின்போது மருத்துவர் கூறியதாவது, குழந்தையை பிரசவிக்கும் ஒரு கர்ப்பிணியை படுக்க வைப்பதுபோல், பெண்களை சிறு அறையில் படுக்க வைத்து இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 2008ல் தான் நடத்திய பரிசோதனைக்கு ஒட்டுமொத்த இளம்பெண்களும் மறுப்பு தெரிவித்தனர்.
ஆனால், வேறு வழியின்றி அவர்களை கட்டாயப்படுத்தி கன்னித்தன்மை பரிசோதனை செய்தேன். சோதனையின்போது இளம்பெண்கள் அனுபவித்த நரக வேதனையை பார்த்த பிறகு, அந்த பரிசோதனை செய்வதையே நிறுத்தி விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.
2013ம் ஆண்டு கப்பற்படையில் சேர்ந்த ஒரு பெண் அதிகாரி கூறுகையில், பட்டதாரியான தான் கப்பற்படையில் சேருவதை லட்சியமாக கொண்டு விண்ணப்பம் செய்தேன்.
ஆனால், ஒரு ஆண் மருத்துவரால் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, பெரும் அவமானத்தையும் சித்ரவதையும் சந்தித்ததாக வேதனையுடன் கூறியுள்ளார்.
கன்னித்தன்மை பரிசோதனைக்கு எதிர்ப்புகள் கிளம்பியபோது, ‘கன்னித்தன்மை உள்ள பெண்கள் ராணுவத்தில் பணியாற்றினால் தான் இந்தோனேஷிய தேசத்தின் புனிதத்தை காக்க முடியும் என ஒரு ராணுவ உயர் அதிகாரி விளக்கமளித்தார்.
இதற்கு பதிலளித்த ஓய்வு பெற்ற பெண் அதிகாரி ஒருவர், ‘முதலில் பெண்களாகிய தங்களுடைய புனிதத்தையே பாதுகாக்க முடியாதபோது நாட்டினுடைய புனிதத்தை எவ்வாறு காக்க முடியும்?’ என பதலளித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பிற்கு கிடைத்துள்ள இந்த அதிர்ச்சி தகவல்களை ராணுவ மருத்துவ சர்வதேச குழுவிற்கும் அதில் உறுப்பினர்களாக உள்ள 16 நாடுகளுக்கும் கடிதங்கள் அனுப்பியுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 17 முதல் 22ம் திகதி வரை இந்தோனேஷியாவில் உள்ள பலி (Bali) நகரில் சர்வதேச ராணுவ மருத்துவர்கள் கூட உள்ளனர்.
மேலும், பெண்களை கன்னித்தன்மை பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்தோனேஷிய அதிபரான Joko Widodo-விற்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.