ஒன்பது ஆண்டு காலத்திற்கு பின்னர் சம்பூர் மக்கள் தமது சொந்த மண்ணுக்கு திரும்பியுள்ளனர். மீண்டும் தமது சொந்த ஊரில் காலடி பதித்தவர்கள் ஆனந்த கண்ணீர் மல்கினர்.

346

 

Sampanthan at Sampur Dec2011
ஒன்பது ஆண்டு காலத்திற்கு பின்னர் சம்பூர் மக்கள் தமது சொந்த மண்ணுக்கு திரும்பியுள்ளனர். மீண்டும் தமது சொந்த ஊரில் காலடி பதித்தவர்கள் ஆனந்த கண்ணீர் மல்கினர்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான், மணல்சேனை, கிளிவெட்டி, பட்டித்திடல் ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த சம்பூர் மக்கள் அனைவரும் நேற்றுக் காலை தமது சொந்த ஊரான சம்பூருக்கு சென்றனர்.

மீண்டும் தமது சொந்த ஊரில் காலடி பதித்தவர்கள் ஆனந்த கண்ணீர் மல்கினர். இம்மக்கள் சம்பூர் பிரதேசத்திற்கு திரும்பிய சற்று நேரத்தில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அவர்களை அவ்விடத்திலிருந்து அகன்று செல்லுமாறு பணித்தனர்.

அதன் போது நீதிமன்றத்தின் அறிவிப்பை பொதுமக்கள் தரப்பினர் சுட்டிக்காட்டிய போதும் தமக்கு உத்தியோக பூர்வமாக எவ்விதமான அறிவிப்பும் கிடைக்கவில்லை. கிடைத்ததன் பின்னரே உங்களை இங்கு பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்க முடியும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இருந்தபோதும் பத்திரிகை செய்தியை பொலிஸாருக்கு காண்பித்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேர வாக்குவாதத்தின் பின்னர் திருமலை மாவட்ட அரசாங்க அதிபரை தொடர்பு கொண்ட பொலிஸார் இவ்விடயத்தை தெரிவித்த போது நீதிமன்ற அறிவிப்பை அவர் சுட்டிக்காட்டியதோடு பொதுமக்கள் தரப்பில் எந்தவிதமான தவறுகளுமில்லை எனவும் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுள்ளனர்.

மீண்டும் தமது சொந்தக் காணிகளுக்கு திரும்பியமை தொடர்பாக கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமின் தலைவர் சோமசுந்தரம் சண்முகநாதன் தெரிவிக்கையில்,

நேற்றுக்காலை நாம் அனைவரும் ஒன்றுபட்டு மீண்டும் எமது சொந்த மண்ணுக்கு திரும்பினோம். அதன்போது பொலிஸார் எமக்கு இடையூறு அளித்தனர். அதன் போது எமது பக்கமுள்ள நியாயங்களையும் நீதிமன்றத்தின் அறிவிப்பைக் கொண்ட பத்திரிகை செய்தியையும் அவர்களிடத்தில் காட்டியிருந்தோம். அவர்கள் அதனை ஏற்க மறுத்ததுடன் எம்மை அகன்று செல்லுமாறு கூறினர். இதனால் அவர்களுக்கும் எங்களுக்குமிடையில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நாம் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு நிலைமையை கூறியபோது பொலிஸாரிடம் தொலைபேசியை கையளிக்குமாறு கோரினார். இருந்தபோதும் இங்கு வருகை தந்திருந்த பொலிஸார் அவருடன் உரையாட மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் அரசாங்க அதிபரை தொடர்பு கொண்ட பொலிஸார் நாம் சட்டவிரோதமாக வந்திருப்பதாக குறிப்பிட்டனர். அதன்போது அரசாங்க அதிபர் அனைத்து விடயங்களையும் எடுத்துக் கூறினார். அதன்பின்னர் பொலிஸார் இவ்விடத்திலிருந்து விலகிச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து கட்டாந்தரைகளாக மாற்றப்பட்டுள்ள எங்களுடைய பூமியில் எமது காணிகளின் அடையாளங்களையும் எல்லைகளையும் கண்டறியும் செயற்பாடுகளை மேற்கொண்டோம். அத்துடன் இங்கு சிறிதாகவுள்ள பற்றைகளை வெட்டி அகற்றி துப்புரவு செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளோம்.

எமது காணிகள் அடுத்தவாரமளவில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் தற்போதைக்கு நாம் அனைத்தையும் துப்புரவு செய்யும் எல்லைகளை அமைக்கும் பணிகளையே மேற்கொள்ளவிருக்கின்றோம். உத்தியோகபூர்வமாக காணிகளை அளித்த பின்னர் மீண்டும் எமது குடிசைகளை அமைக்கும் பணிகளை மேற்கொள்வோம் என்றார்.

முன்னதாக 2006ம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைமைகளால் சம்பூர் பிரதேசத்திலிருந்து வெளியேறிய மக்களில் 1345 குடும்பங்கள் மூதூர் பிரதேசத்திலுள்ள கட்டைபறிச்சான (368குடும்பங்கள்), மணல் சேனை (80குடும்பங்கள்), கிளிவெட்டி(157குடும்பங் கள்), பட்டித்திடல் (108குடும்பங்கள்) என நான்கு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

சுமார் ஒன்பது வருடங்களாக அடிப்படைவசதிகளற்ற நிலையில் சிறிய ஓலைக்குடிசைகளிலும், தகரக்கொட்டில்களிலும் சொல்லெண்ணாத் துயரத்தை அனுபவித்து வந்தனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இம்மக்களிடமிருந்து சுவீகரிகப்பட்டு முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கு வழங்கப்பட்டிருந்த காணிகளை மீண்டும் மக்களிடத்தில் கையளிப்பதை அடிப்படையாகக் கொண்டு முதற்கட்டமாக 818 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 7ம் திகதி விடுத்திருந்தார்.

எனினும் உச்ச நீதிமன்றத்தில் தனியார் நிறுவனமொன்று மீள்குடியேற்றத்தை தடைசெய்ய வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தமையால் கடந்த வியாழக்கிழமை வரையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனால் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த சம்பூர் பிரதேச வாசியான தேவராஜா பிரேம்குமார் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 18ம் திகதி முதல் ஆரம்பித்திருந்ததுடன் அவருக்கு ஆதரவாக இடைத்தங்கல் முகாம் மக்களும் உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மக்கள் மீள்குடியேறுவதற்கான இடைக்கால தடையுத்தரவை நீக்குவதாக உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாம் அறிவித்தது.

 

SHARE