போரினால் தாய் தந்தை இருவரையும் இழந்து வவுனியா டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தின் பராமரிப்பில் இருந்துவரும் 75 மாணவிகளுக்கு லண்டன் நம்பிக்கைஒளி ஊடாக கணினி, உடுபிடைவைகள் மற்றும் இதர பராமரிப்பு பொருள்களை வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், நம்பிக்கை ஒளியின் இணைப்பாளர் திரு.சுபாஸ்கரன், திரு.காந்தன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
டொன்பொஸ்கோ தலைமை நிர்வாகி அருட்சகோதரி மெற்றில்லா தலைமையில் 29.05.2015 அன்று இந்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
‘பதினெட்டு வயதை பூர்த்திசெய்துள்ள பெண் பிள்ளைகளும் இங்கு தங்கியிருக்கிறார்கள். குறித்த வயதை கடந்துள்ள 20க்கும் மேல்பட்ட பெண் பிள்ளைகளை தொடர்ந்தும் சிறுவர் இல்லத்தின் பராமரிப்பில் வைத்திருப்பதில் நடைமுறை சட்டச்சிக்கல்கள் உள்ளன. அதேவேளை இந்த பெண் பிள்ளைகளை சமுகத்தில் பொறுப்பேற்க பெற்றோர், உறவினர்கள் என்று எவரும் இல்லாததால் அவசியம் இவர்கள் மற்றுமொருவரில் தங்கி வாழ வேண்டிய நிலை உண்டு. எனவே இவர்கள் தொழில்த்துறை, வாழ்க்கைத்துணை உள்ளிட்ட பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். நம்பிக்கையான பாதுகாப்பான திருமண வாழ்க்கையை இவர்களுக்கு அமைத்துக்கொடுப்பதாயின் திருமண செலவுகளுக்காக (ஒரு பெண்பிள்ளைக்கு) குறைந்தபட்சம் ஒரு இலட்சம் ரூபா வரையில் நிதித்தேவை உள்ளது.’ என்று டொன்பொஸ்கோ தலைமை நிர்வாகி அருட்சகோதரி மெற்றில்லா ஆனந்தன் எம்.பியிடம் தெரிவித்தார்.
இவர்களது எதிர்காலம் தொடர்பாக சமுகத்தில் அங்கம் வகிக்கும் நம் ஒவ்வொருவருக்கும் கூட்டு பொறுப்பு இருப்பதால், நாம் ஒவ்வொருவரும் நம் வலுவுக்குட்பட்ட அளவில் முடிந்தவரையான உதவிகளை செய்வோம். டொன்பொஸ்கோ சிறுவர் இல்ல பெண் பிள்ளைகளைப்போன்றே ஏனைய சிறுவர் இல்லங்களின் பெண் பிள்ளைகளும் இவ்வாறான தொழில்த்துறை, வாழ்க்கைத்துணை உள்ளிட்ட பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் ஆனந்தன் எம்.பி தெரிவித்தார்.