வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் மு/ பாண்டியன் குளம் மகா வித்தியாலயத்தில் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலினி வெனிற்றன் தலைமையில் 02.06.2015 அன்று பௌர்ணமி கலை விழா நடைபெற்றது.
மேற்படி விழாவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் மாகாண கல்விப் பணிப்பாளர் திரு செ. உதயகுமார், மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் (அழகியல்;) பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) மற்றும் பிரதேசக் கலைஞர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வு பற்றி கருத்து தெரிவித்த வைத்திய கலாநிதி சி. சிவமோகன் அவர்கள் எமது கலாச்சார விழுமியங்களை பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு அதை எடுத்துச் செல்லும் பொறுப்பு எமக்குரியது.
இன்று மாறி வரும் பேரினவாத அரசுகள் சொல்லில் அடங்காத அடக்குமுறைகளை எமது தமிழர் தேசத்தின்மேல் கட்டவிழ்த்து விட்டுள்ளது. எமது இளைஞர்களை மது போதைக்கும் ஏனைய துர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் மறைமுகமாக தூண்டுகிறார்கள் என வெளிப்படையாக குற்றம் சாட்ட முடியும். ஏன் எனின் இன்றும்கூட மது வியாபாரத்தில் துணை ராணுவ அணியினர் வெளிப்படையாக ஈடுபட்டு வருகின்றனர்.
கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட மது விற்பனை நிலையங்கள் இல்லாததை சாட்டாக வைத்து கிராமங்கள் தோறும் இ,ளைஞர்களுக்கு வயது வேறுபாடு இன்றி வழங்குகிறார்கள். இது ஒரு சமுதாய சீர்கேட்டு நடவடிக்கையாகும்.
முன்னர் ஒரு தடவை கேப்பாப்பிலவு கிராமத்தில் விளையாட்டு போட்டி நடாத்திய ராணுவத்தினர் வெற்றி பெற்ற எமது இளைஞர்களுக்கு பியர் கான்களை பெட்டி பெட்டியாக வழங்கினர்.
எனவே எமது சமுதாயத்தின் தவறான நடவடிக்கைகளுக்கும் கலாச்சார சீர்கேடுகளுக்குமான காரணிகளாக துணை ராணுவ அணிகளே இருக்கின்றன. இன்று பல பத்தாயிரம் சிவில் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இளைஞர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்கியது இந்த நல்லாட்சி அரசு.
நாம் கூறுகிறோம், இவர்கள் யாரும் எமது சமுதாயத்தினுள் வேண்டாம். இவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்கள். ஒழுக்கமுள்ள நீதி நியாயம் உள்ள பொலிசாரை தவிர ராணுவ தலையீடு எதுவும் எமது சமுதாயத்திற்கு தேவையற்றது..
இன்று நாம் கலாச்சார விழுமியங்களை பாதுகாத்து வழங்கவேண்டிய தேவைகள் உள்ளது. அதனடிப்படையில் வடமாகாண சபை மேற்படி பௌர்ணமி விழாவை நடாத்த ஊக்கமளித்துள்ளது. இந்நிகழ்வினது வெற்றி எமது மக்கள் கலாச்சார விழுமியங்கள் மேல் எவ்வளவு பற்று வைத்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக அமைகிறது