இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட முறையில் தமிழர்களினதும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களினதும் உரிமைகளை நசுக்குவதாக சுயாதீன அறிக்கையொன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோனியாவில் உள்ள ஓக்லான்ட் நிறுவகம் மேற்கொண்டுள்ள இலங்கை குறித்த பல மாத ஆய்வின் முடிவிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னரும் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 160,000ற்கும் அதிகமான சிங்கள படையினரின் கடுமையான ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
குறிப்பிட்ட அறிக்கையைத் தயாரிப்பதில் ஈடுபட்ட விசாரணையாளர்கள் யுத்தத்திற்கு பின்னர் தமிழர் எதிர்கொள்ளும் விவகாரங்களை கையாள்வதற்கான அரசியல் உறுதிப்பாடு ஜனாதிபதி சிறிசேனவிடம் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
யுத்தத்தின் நீண்ட நிழல்
யுத்தத்திற்கு பிந்திய இலங்கையில் நீதிக்கான போராட்டம் என்ற இந்த அறிக்கை மூலமாக
1-இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னரும் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 160.000ற்கும் அதிகமான சிங்கள படையினரின் கடுமையான ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2-இராணுவம் பாரிய அளவிலான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஆடம்பர உல்லாச விடுதிகளை நடத்துகின்றது, தமிழ்மக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களில் பாரிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது, அதேவேளை ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு இராணுவத்தின் இந்த வர்த்தக நடவடிக்கைகளுக்கான வேறு வழிகளற்ற சாட்சியங்களாவுள்ளனர்.
3-தமிழர் தாயகப்பகுதிகளில் இராணுவெற்றிகளை குறிக்கும் நினைவுத்தூபிகளை அமைப்பதன் மூலமாகவும்,பௌத்த ஆலயங்களை அமைப்பதன் மூலமாகவும் அரசாங்கம் தமிழ் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை திட்டமிட்ட முறையில் ஒடுக்க, அழிக்க முயல்கின்றது. இவை தமிழர் பகுதிகளில் சிங்களவர்களின் ஆதிக்கத்தை பறைசாற்றுகின்றன, இப்பகுதியில் சிறியளவிலான சிங்களவர்களே வாழ்வது குறிப்பிடத்தக்கது.
4- அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ள போதிலும் யுத்தத்தின்போது காணமற்போன ஆயிரக்கணக்கானவர்களின் நிலை என்னவென்று தெரியாத நிலையே காணப்படுகின்றது. 2012 ம் ஆண்டு வெளியான ஐக்கியநாடுகள் அறிக்கை 70000 பேர் காணமற்போயுள்ளதாக தெரிவிக்கும் அதேவேளை வேறு அறிக்கைகள் இதனைவிட இரண்டு மடங்கு அதிகமானவர்கள் காணமற்போயுள்ளதாக தெரிவிக்கின்றன.
ஜனவரி தேர்தலிற்கு பின்னர் அமைதியான முறையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் குறித்து பல கருத்துக்கள் வெளியாகியுள்ள அதேவேளை குறிப்பிட்ட அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்ட விசாரணையாளர்கள் மேலே குறிப்பிடப்பட்ட விவகாரங்களை கையாள்வதற்கான அரசியல் உறுதிப்பாடு ஜனாதிபதி சிறிசேனவிடம் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த அறிக்கையை வழமைபோல் முன்னைய அரசு செய்ததைப்போன்று இந்த அரசும் மறுதலித்துள்ளது. குறிப்பாக படை உயரதிகாரிகள் மற்றும் முக்கிமான அமைச்சராக கருதப்படும் ராஜீத சேனாரத்தினவும் மறுதலிப்பை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கை இலங்கை அரசைப்போன்று பொறுப்பற்ற முறையில் செய்யப்பட்டிருக்காது என்பதனை ஊகிக்க வேண்டியதில்லை. அது வெளிப்படையாக உணரக்கூடியதாகவிருக்கும் விடயமே என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும் “எப் பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப் பொருள் மெய் பொருள் காண்பது அறிவு” எனச் சொல்லப்பட்டதற்கிணங்க மேலெழுந்த வாரியாக நடமுறையில் உள்ள பனிப்போரில் சிலவற்றை நாம் ஆய்வது நன்மை பயிர்க்கும்.
யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. குறிப்பாக கிழக்கில் அது நிறைவடைந்து 8 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. ஆனாலும் அங்காங்கே மக்களின் உரிமைப்போராட்டம் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. அவ்வாறே தமிழ் மக்கள் மீதான நசுக்கல்கள் முடிவுக்கு வரும் நிலமை பெரும் கல்லில் நாருரிக்கும் விடயமாகவேயுள்ளன என்பதனை கள நிலமைகள் ஆதாரப்படுத்துகின்றன.
கடந்த வாரம் திருகோணமலை மாவட்டத்தின் மூதுார் பிரதேசத்தல் உள்ள மணற்சேனை என்ற கிராமத்தில் கிழக்கு மாகாண விவசாய மற்றும் மீன் பிடி அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் விவசாயிகளின் பிரச்சனைகளை ஆராயும் கூட்டத்தை நடாத்தினார்.
இங்கு மூதுார் தெற்கு பகுதியில் உள்ள பல விவசாய சம்மேனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இங்கு விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சனைகளில் சில மிகவும் கேவலமாகவும் இந்த நாட்டின் ஆட்சியாளர்களின் மறுதலிப்புகளை சாதாரணமாகவும் வெளிப்படையாகவும் நிராகரிக்கின்றன.
இங்குமுன்வைக்கப்பட்ட பிரச்சனைகளில் மூன்று விடயங்கள் மிக கவனத்தில் எடுக்கப்பட்டு தீ்ர்வு காணப்படவேண்டும் இல்லையேல் நல்லாட்சி, நீதி, நல்லிணக்கம் பற்றி பேசி பயனில்லை. அது வெறும் போலியான விடயமாகவே கருதலாம் என்பது விவசாயிகளின் கருத்தாகவுள்ளன.
குறிப்பாக மேன்கமம் எனும் தமிழ் கிராம் தெகிவத்தை எனும் சிங்கள மக்கள் வாழும் கிராமத்திற்கருகில் உள்ள எல்லைக்கிராமமாகவுள்ளது. இங்கு மகாவலி நீர்திட்டம் மூலம் விவசாயிகள் நீரைப் பெற்று தமது வாழ்வாதாரத்தை ஓட்டிவருகின்றனர்.
ஆனால் இங்குள்ள சிங்கள விவசாயிகள் தமிழ் விவசாயிகளுக்கு நீரைசேமித்து வைக்கும் மேன்கமம் குளத்தை பல இடங்களில் அத்துமீறிப்பிடித்து விவசாயம் செய்வதனால் குளம் பல வருடங்களாக துா்ந்த நிலையில் உள்ளது. நீரை சேமிக்கமுடியாது பல விவசாயிகள் சிரமப்படுவதாகவும் சுமார் 600ஏக்கர் விவசாய நிலத்தின் அபிவிருத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக முறையிடுகின்றனர். இவ்விடயம் பற்றி நீர்பாசன பொறியிலாளர், பிரதேச செயலாளர் என பலருக்கும்முறையிட்டபோதும் களத்திற்கு வரும் அதிகாரிகள் அத்துமீறியுள்ளவர்கள் சிங்களவர்கள் என்றவுடன் வந்தவேகத்திலேயே எதாவது சாட்டுப்போக்கை சொல்லி போய்விடுகின்றனர். இதனால் குறித்த அத்துமீறிய சிங்கள விசாயிகளிடம் முறையிட்டவர்கள் எதிரியாவதுதான் மிச்சமாகவுள்ளன எனவும் குறித்த குளத்தை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர். இப்பிரச்சனையை தீர்த்து எமது வாழ்வாதாரத்தை உயர்த்த உதவுங்கள் எனவும் கோரிக்கைவிடுக்கின்றனர்.
இப்படியே இதே பிரதேசத்தில் உள்ள கங்குவேலி கிராமத்திலும் ஒரு குளம் உள்ளது. அதனை கங்குவேலி குளம் என அழைப்பர் இங்கும் சில சிங்கள விவசாயிகள் குளத்திற்குள் அத்துமீறி விவசாயம் செய்வதுடன் தமது விவசாயம் அதிகநீரினால் அழிவடையும் என்பதற்காக குளத்துக் கட்டை வெட்டி நீரை தேங்க விடாமல் வைத்துள்ளனர்.
இவ்வாறே கங்கவேலி முதலைமடு படுகாடு பகுதியிலும் 1970 ஆண்டுகளிலிருந்து தமிழ் மக்களுக்குரித்தான வயல் வெளிகளில் அத்துமீறி ஒருசில சிங்கள குடும்பங்களைச்சார்ந்தவர்கள் செய்கை பண்ணுவது இந்த நாட்டின் பல ஊடகங்களில் வந்த வெளிப்படையான விடயம். இதற்காக மக்கள் கடந்த மாதம் பிரதேச செயலகம் முன்பாக போராட்டங்களையும் நடாத்தினார்கள். இவ்விதமான இனரீதியான ஆக்கிரமிப்பில் ஈடுபடுபவர்களில “பலர் சட்டத்தை மதிக்கவேண்டிய பாதுகாக்கவேண்டிய ஊர்காவலைச்சார்ந்தவர்கள், அல்லது அதிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். இதனால்தான் கடந்த ஆட்சியில் இவர்களுகெதிராக எந்த எதிர்ப்பையும் காட்டமுடியாது மௌனிகளாக தமிழ்மக்கள் இருந்ததாக முறைப்பாடுகளில் பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் அரசதரப்பில் எந்த விதமான நியாயமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
மாறாக மாகினா கமகே பிரேமரட்ன என்ற அப்பகுதியில் உள்ள பௌத்ததுறவியின் சகோதரர்கள் இவ்வத்துமீறல்களில் அவரது பக்கபலத்துடன் ஈடுபடுகின்றனர் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுட்டிக்காட்டியும் எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை. இக்குழுவில் ஒரே குடும்பத்தைச்சார்ந்த மாகினா கமகே சுமணசிறி, மாகினாகமகே சுமணசிறி சஞ்சீவ, உதித்த, பிரதாப், சுஜீவ, நந்தரோகித, முதியான்சலாகே சேனாதீர போன்றவர்களின் பெயர்கள் பொலிஸ்முறைப்பாட்டிலும் உள்ளன. இதேவேளை சில வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் உள்ள வரலாற்று மக்கியத்துவம் வாய்ந்த அகஸ்தியர் சிவன் ஆலய சிவலிங்கம் உடைத்தெறியப்பட்டன. பின்னர் நடந்த இரு சம்பவங்களில் 4 தமிழ் விவசாயிகள் அடித்துன்புறுத்தப்பட்டனர். இவை முறையிடப்பட்டும் பெரிய மட்டங்களுக்கு அறிவித்தும் குற்றவாளிகள் இனம் காணப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். இவை கடந்த ஆட்சியில் நடந்தவை. வழக்கு வைத்தால் எந்த ஆதாரமும் அத்துமீறும் விவசாயிகளிடம் இல்லை என நீதிமன்றங்களிலும் உறுதி செய்யப்படுகின்றன. ஆனால் அத்துமீறியவர்கள் அதனை தொடர்ந்து செய்கின்றனர். ஆனால் வனஇலாக என்ற போர்வையில் மேற்குறித்த கங்குவேலிப்பகுதியில் தமது காணியை துப்பரவு செய்யும் பணியில் இருந்த ஐந்து விவசாயிகள் மீது பொய்யான வழக்கு தொடரப்பட்டதாக பாதிக்க்பட்ட தமிழ் விசாயிகள் முறையிடுகின்றனர் கடந்த 2013.10.09 அன்று இச்சம்பவத்தில் விஸ்வலிங்கம் உதயச்ச்ந்திரன், வேலாயுதன் பிரபு,முத்துக்குமார் கணேசமூர்த்தி, சற்குணம் ஸ்ரீகிருஸ்ணபிள்ளை ,சின்னையா இராசதுரை என்ற விவசாயிகள் இவ்வாறு இன்று வரை மூதுார் நீதிமன்றில் வழக்காடி வருகின்றனர்
வவுணாவில் காட்டில் இவர்கள் காடு வெட்டினார்கள் இது அரச குற்றச்சாட்டு, இல்லை நாம் எமது பேமிற்காணியை முதலைமடு பாரம்பரிய காணியில் தான் துப்பரவு செய்தோம் அதற்கு பேமிற் உள்ளது. இது முற்றிலும் பொய்யான குற்றசாட்டு, எனவே அத்துமீறிய மற்றும் எம்மைத்தாக்கிய சிங்கள விவசாயிகளை கண்டும் காணாமல் அரசு விட்டுள்ளது என பாதிக்கப்பட்ட விவிசாயிகள் முறையிடுகின்றனர். ஆனாலும் ஏழை விவசாயிகள் தமது வாழ்வாரமும் இன்றி ஒவ்வொரு தவணைக்கும் 3ஆயிரம் வீதம் வழக்குக்குச் செலவு செய்யப்படவைக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடகின்றனர்.
கள்ளர்களுக்கு விதானைவேலை
கடந்த மாதம் கங்கு வேலி படுகாடு வயல் பிரச்சனைகளை தீர்க்க கூட்டமொன்றை பிரதேச செயலாளர்கள் நடாத்தினார்கள் முடிவில் அத்துமீறிய சிங்கள விவசாயிகளையும் இணைத்து குழுவொன்றை முன் மொழிந்துள்ளனர். 1970ம்ஆண்டு ஆவணத்துடன் உள்ள விவசாயிகளின் காணியை கடந்த 2009இல் அத்துமீறிய ஒரே குடும்பத்தைச்சார்ந்த 15 விவசாயிகளுக்கு நீதி வழங்க அவர்களையும் சட்டரீதியாக அங்கீகரிக்கும் பணியில் குழுவில் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர் என்று பாதிக்க்பட்ட விவிசாயிகள் விசனிக்கின்றனர்.
தண்டிக்கப்பட வேண்டியவர்களுக்கு விதானை வேலையை அதிகாரிகள் வழங்கியமை அவர்களது அத்துமீறலை நியாயபபடுத்தவும் சண்டித்தனத்தை ஊக்குவிக்கவும் வழிவகுக்காதா? இது இப்பிரச்சனையை மேலும் சிக்கலாக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் எனவும் விமர்சனங்கள் உள்ளன. “சிங்களமக்கள் அரசின் செல்லபிள்ளைகள் தமிழ் மக்கள் எடுப்பார்கைப்பிள்ளைகள்” என்ற காலாகாலமான குற்றச்சாட்டு நியாயப்படுத்தப்படுவதாகவுள்ளனவல்லவா? மறுபுறத்தில் தமிழ் விவசாயிகள் 346பேரின் ஆவணங்கள் விவசாய நடவடிக்கைள், பிரதேச செயலகத்தால் அத்துமீறல்காரர்களுக்காக தடுக்கப்பட்டுள்ளமை அநீதியும் மனித உரிமை மீறலுமாக கொள்ளமுடியும் அடாத்துக்காரருக்கு காணிவேண்டுமென்றால் அரசு வழங்கலாம். ஆனால் அது இன்னொருவரின் உழைப்பால் பராமரிக்கப்பட்டவையாக எப்படி இருக்கமுடியும் அதற்காக நுாற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதார நடவடிக்கையை எப்படிதடுக்க முடியும். இதுதானா நல்லாட்சியின்குணாம்சங்கள் என்றுகேள்வி எழுப்பபட்டுள்ளன.
எனவே கலிபோனியாவில் உள்ள ஓக்லான்ட் நிறுவகம் மேற்கொண்டுள்ள ஆய்வறிக்கையை எவ்வாறு மறுதலிக்கமுடியும். இதற்கிடையில் நல்லாட்சியை ஏற்படுத்தவென திருகோணமலையின் பாராளுமன்ற உறுப்பினரான குணவர்த்தன மைத்திரியுடன் முதலில் வெளியேறினார். அவர்தான் காணி பிரதி அமைச்சர் மத்தியில். மாகாணத்தில் ஆரியவதி கலப்பதி காணி அமைச்சர் இவர்கள் இப்படி இந்த ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தும் தமிழ் மக்களின் வாழ்வாதார உரிமைகளை, காணி உரிமைப்பிரச்சனைகளை தீர்க்கமுடியாமையை என்ன வென்று சொல்வது. இது மகிந்த ஆட்சியா ? அவ்வாறெனில் மக்கள் எப்படி மைத்திரியின் வாக்குறுதிகளை நம்பப்போகின்றனர். இந்த நிலையில் எப்படி மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை நிராகரிக்கப்படுகின்றன. “பழைய குருடி கதவை திறடி” என்ற நிலமையின் அறிகுறியா?
தமிழ்லீடருக்காக
பொன்.சற்சிவானந்தம்….
மூலம்: தமிழ்லீடர்.கொம்