யுத்தத்தில் கைகளை இழந்தவர்களிற்கு ஒரு செய்தி.

384

யுத்தத்தினால் கைகளை இழந்துள்ளவர்களுக்கு செயற்பாட்டுத் திறன் மிக்க செயற்கைக் கைகளை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது.

Wor

யுத்தத்தில் கைகளை இழந்துள்ள முன்னாள் விடுதலைப்புலிகள், பொதுமக்கள் என ஆண்களும் பெண்களுமாக பலர் இந்தத் திட்டத்தின் கீழ் கைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்தனர். நவீனமுறையிலான இந்த கைகள் பயனாளிகளிற்கு கிடைத்த வரப்பிரசாதமென கூறப்படுகிறது.

ஒவ்வொரு கையும் தலா 400 டொலர் வீதம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வகை கைகள் நேற்று 150 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள்.

மேலும், இந்தச் செலவை அவுஸ்திரேலிய ரோட்டரிக் கழகம் முழுமையாக ஏற்று, இங்குள்ள பயனாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இருந்து வந்துள்ள விசேட நிபுணர் குழுவொன்று பயனாளிகளுக்கு இந்தக் கைகளை பொருத்தியதுடன், கைகளைப் பராமரிப்பதற்கான தொழில்நுட்பத்தை இங்குள்ளவர்களுக்குப் பயிற்றுவித்துள்ளது.

தற்போது இலங்கையில் பாவனையில் உள்ள செயற்கை கைகளைவிட, பிளாஸ்டிக்கினால் ஆக்கப்பட்ட செயற்திறன் மிக்க இந்தக்கைகள் இலகுவில் தீப்பிடிக்கக் கூடிய ஆபத்து இருப்பதாகவும், பயனாளிகள் அதில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய ரோட்டரிக் கழகத்தினர் யாழ்ப்பாணம் ரோட்டரிக் கழகத்துடன் இணைந்து இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.

முழங்கைக்குக் கீழ் கைகளை இழந்துள்ளவர்களுக்கு ஸ்பிரிங் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஆகிய இந்தக் கைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

இந்தவகை கைகள் வடமாகாணத்தில் தற்போதுதான் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கை சேர்ந்த 150 பேர் இதன் மூலம் பயனடைந்துள்ளதாக இந்தத் திட்டத்திற்கான தலைவரும், ரோட்டரிக்கழக உறுப்பினருமான சிவமூர்த்தி கிஷோக்குமார் தெரிவித்தார்.

மேலும், இவற்றின் உதவியுடன் கை இல்லாதவர்கள் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களை ஓட்டவும், வாளிகளில் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களைத் தூக்கிச் செல்லவும், பேனா பிடித்து எழுதவும் வசதியாக இருப்பதாக இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றவர்கள் கூறுகின்றார்கள்.

இதுவரை பாவனையில் உள்ள செயற்கை கைகள் மனிதரின் கைபோன்ற வடிவத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும், அதன் எடை கூடுதலாக இருப்பதனால் கைகளில் பொருத்தப்படும் இடங்களில் வலி ஏற்படுவதுடன் வசதி குறைவாகவும், பயன்படுத்த முடியாமல் இருந்ததாகவும், ஆனால் ஸ்பிரிங் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஆன இந்தக் கையானது பாரம் குறைவாகவும் வசதியாக இருப்பதாகவும் பயனாளிகள் கூறியுள்ளனர்.

இந்த செயற்கை வழங்கும் நிகழ்வின் இண்டாம் கட்ட நிகழ்வுகள் நாளை காலை 9 மணிக்கு கிளிநொச்சியில் நடக்கவுள்ளன. கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நடக்கவுள்ளது.

இந்த தகவலை பகிர்ந்தும், உங்களிற்கு தெரிநிதவர்களிற்கு தெரியப்படுத்தியும் கைகளை இழந்தவர்களிற்கு தகவல் சென்றடைய செய்யுங்கள்.

SHARE