மலையகத்தமிழரின் இன்றைய நிலை மாற்றம்பெறுமா?

275

இலங்கையில் வதியும் சிங்களவர், தமிழர், இஸ்லாமியர், பறங்கியர், மலையாளிகள் என்னும் ஐந்து இனத்தவர்களில் தமிழர் என்னும் இனத்தவர்களுக்குள் மட்டுந்தான் வித்தியாசப்பட்ட பிரச்சினைகளின் பாற்பட்ட ‘மலையகத் தமிழர்’ என்னும் தனிப்பட்ட மக்கள் குழுமம் அடையாளப்படுத்தப்படுகின்றது. இவ்வடையாளப்படுத்தலுக்கு அவ் வினத்தின் வரலாற்றுப் பின்னணியும் அதன் சீவனோபாய நெறிமுறைகளுமே காரணமாக அமைந்துள்ளனவெனலாம்.

Tea-gardens-in-Assam-660x400

இலங்கையையும், இந்தியாவையும் பிரித்தானியர் ஆட்சி செய்தபோது, அவர்கள் தமிழகத்தில் மிகவும் பின் தங்கிய பொருளாதார நிலை யிலும் தீண்டாமையின் பாற்பட்டும் வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் குழுமத்தினரை இலங்கைக்குக் கொண்டு சென்றால் அவர்களுக்கு மிகக் குறைந்தளவு சம்பளத்துடன் வதிவிட வசதி உட்பட ஏனைய வசதிகளை யும் மிகவும் குறைந்த பெறுமதியுடன் செய்துகொடுத்துப் பெருந்தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தினால் தாம் அதி உச்ச இலாபத்தை ஈட்டலாமெனச் சிந்திக்கத் தலைப்பட்டனர். இச் சிந்தனையின் பெறு பேறாகவே அவர்கள் இம்மக்களை இலங்கைக்கு அழைத்துச் செல்லத் தீர்மானித்தார்கள்.

அன்றாடச்சாப்பாட்டிற்கே அல்லற்பட்டுக்கொண்டும், வதிவிட வசதியைப்பொறுத்து ஏதிலிகளா கவும் வாழ்ந்து கொண்டிருந்த, புறக்கணிக்கப்பட்ட, தீண்டாமைக்கு இலக்கான, மிகவும் நலிவடைந்த மக்களுக்குப் பிரித்தானியரின் இத்திட்டம் மிக வரப்பிரசாதமாக அமைந்ததையிட்டு ஆச்சரியப்படமுடியாது.

இதனால் இம்மக்கள் வாழ்ந்த கிராமங்களைச் சேர்ந்த ஓரளவு வசதி படைத்தவர்களையும், முதனிலை வகித்தவர்களையும் பிரித்தானியர் அழைத்துத் தமது இத்திட்டத்தை அவர்களுக்கும் கூறி அவர்கள் மூலமாக அம்மக்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காகத் திரட்டினார்கள். பின்னர் கங்காணிகள் என அழைக்கப்பட்ட இவர்களுக்கும் பிரித்தானியர் பணத்தைக் கொடுத்து அம் மக்களை இலங்கைக்குக் கொண்டுசெல்வதற்காக இலாவகமாகத் திரட்டினர். பின்னாளில் ‘கங்காணிமார்’ என விளிக்கப்பட்ட இவர்கள் பிரித்தானியர் கொடுத்த பணத்தில் ஒரு சிறிதளவை இம் மக்களுக்கு வழங்கி ஆசைகாட்டிக் கப்பலேற்றி இவர்களை இலங்கைக்கு அழைத்து வந்தார்கள்.

2014_01_20_02_0011

இலங்கைக்கு இம்மக்களை அழைத்து வந்த ‘கங்காணிமார்’ எனப்பட்ட இந்நபர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் பெருந்தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்ட இம் மக்களுக்குள், பெண்களில் பெரும்பாலானோர் தேயி லைக் கொழுந்து பறிக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். ஆண்கள் பெருந்தோட்டங்களில் ஏனைய சகல உடல் உழைப்புக்களையும் வழங்கியதோடு இறப்பர்த் தோட்டங்களில் பால் வெட்டும் பணியிலும் பெருமள வானோர் அமர்த்தப்பட்டிருந்தார்கள். இத்தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கித் தேசத்துக்கு மிகப் பெருமளவில் வருமானத்தை ஈட்டிக்கொடுத்தபோதும் கூட அவர்களுடைய வருமானம் மிகக்குறைந்தளவிலேயே இருந்தது. இதற்கு அவர்கள் தமிழகத்தில் வாழ்ந்த வாழ்க்கைப் பின்னணியே பிரதான காரணியாக விளங்கியது. பிரித்தானியர் இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளையும் ஆண்டு கொண்டிருந்தமையால் இந்தியாவின் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருந்த அவர்களுடைய ஏதிலி வாழ்க்கையை அறிந்து வைத்திருந்து இங்கே அவர்களை அழைத்து வந்தமையால் தமது உச்ச இலாபத்தைக் கருத்திற்கொண்டு போதும் போதுமென்றளவுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். இவர்களை ஆங்கிலேயர் அழைத்துவந்தபோது ஒவ்வொரு குழுவுக்கும் தலைமை வகித்தவர்கள் மட்டும் பெருந்தோட்டங்களின் பிரித்தானிய நிர்வாகத்தினரால் தொழிலாளர்களை மேற்பார்வை செய்யும் கங்காணிமாராகவும், கணக்குப்பிள்ளைகளாகவும் நிய மிக்கப்பட்டார்கள். இப்பாட்டாளி மக்களின் இழிநிலைகண்டு கொதித்தெழுந்த அச்சமூகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் ஒன்று சேர்ந்து அத் தமிழ்த் தொழிலாளர்களின் நலன் கருதித் தொழிற்சங்கங்களை அமைக்கும் பணி யில் மிகவும் தீவிரத்துடன் ஈடுபட்டார்கள்.

இம்மக்களின் துயர்துடைக்க மிகத் துணிச்சலுடனும் அபாரமான கருணைப் பார்வையுடனும் தொழிற்சங்கத்தை ஆரம்பித்த மூலவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆவார். அன்னார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்னும் தொழிற்சங்கத்தை மலையகத் தமிழ்ப்பாட்டாளி மக்களின் விடி யலைக்கருதி ஆரம்பித்தார். இத் தொழிற்சங்கம் பின்னாளில் அரசியல் கட்சியாகவும் பதிவு செய்யப்பட்டது. தொண்டமான் அவர்களோடு மலை யகத் தமிழ் மக்களின் விடியலுக்காக உழைத்த உத்தமர்களுள் ‘செல்லச்சாமி’ அவர்கள் பாராட்டப்பட வேண்டியவராக விளங்கினார். இத்தொழிற்சங்கம் சார்ந்த அரசியல் கட்சி பிற்காலத்தில் முதலாளித்துவ ஏகாதிபத்திய நலன்பேணும் துரதிட்டவசமான நிலைக்குத் தள்ளப்பட்டபோதும், ஆரம்பத்தில் காந்திய நெறிசார்ந்த நிலை யில் வர்க்கக் கண்ணோட்டமற்று மலை யகத் தமிழ் மக்களின் நலனுக்காகவும், அவர்களின் மனிதத்துக்காகவும், சுயமரியாதைக்காகவும் மிகவும் விசுவாசத்தோடு வேலை செய்தார்கள். ஆரம்பகாலத்தில் இவர்களுக்கு மலை யகத் தமிழ் மக்கள் மீதிருந்த வாஞ்சை அப்பிரதேசத்திலுள்ள தமிழ் இடதுசாரிப் பிரமுகர்களுக்குக் கூட இருந்ததில்லையெனக் கூறலாம். மலை யகத் தமிழ் மக்கள் அன்று தமது இழி நிலையை வெளிப்படுத்தும் முகமாக ஒரு சில மைல்களுக்குக் கூட ஊர்வலங்களை நடத்த முடியாத நிலையிலிருந்தனர். தமது வாழ்வாதாரங்களுக்காக ஆர்ப்பாட்ட ஊர்வலங்களைக் கூட நடத்த முடியாத கீழ் நிலைப்பட்ட நிலை யில் அவர்கள் இருந்தார்கள்.

அதனால் தனிப்படட ஊர்வலம் நடத்தும் உரி மையைக் கூடப் போராடி, உயிர்த்தியாகம் செய்து பெறவேண்டிய நிலை அம்மக்களுக்கு ஆரம்பகாலத்திலிருந்தது. இவ்வுரிமையைப் பெறும் போராட்டத்தில் ஐயாவு, பிரான்சிஸ் என்னும் இரு மலையகத் தமிழ் இளைஞர்கள் காவற்றுறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலியானார்கள். ஆனால் அவர்கள் இன்றோ மலையகத்திலிருந்து கொழும்பு வரை வாகன பவனியாக வந்து ஆர்ப்பாட்டப் போராட்டங்களை முன்னெடுக்கக் கூடியளவுக்கு முன்னேறியுள்ளார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக மஹிந்த அரசின் இடைப்பட்ட காலத்தின்போது மலையகத் தமிழ் மக்களைக் ‘கள்ளத்தோணிகள்’ எனப் பொருளற்ற விதமாகத் தூஷித்த அமைச்சர் ஒருவருடைய கூற்றுக்கு அதிருப்தி வெளியிடும் முகமாக மலையகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் தமது அரசியல் பேதங்களுக்கும், தனி நபர் குரோதங்களுக்கும் அப்பாற்பட்டு மலையகத்திலிருந்து பெருவாரியான வாகனங்களில் தமது கட்சிக் கொடி களுடனும், தொழிற்சங்கப் பதாகைக ளுடனும் கொழும்புக் கோட்டை வரை வந்து தம்முடைய மிகவும் வலுவான அதிருப்தியை வெளியிட்டார்கள். இதன் விளைவாகக் ‘கள்ளத்தோணிகள்’ எனத் தூஷித்த அமைச்சரின் தவறுக்காக மனம் வருந்தி அரசின் வேறொரு முக்கியஸ்தர் மன்னிப்புக் கோரியதும் தெரிந்ததே.

இந்நிகழ்வுகளிலிருந்து நாம் இரு விடயங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும். முதலாவது மலையகத்தின் தமிழ் அரசியல் தலைவர்கள் மேற்கொண்டதீரமிகு போராட்டத்தினாலும் அப்பிரதேச மக்கள் தமது இழிநிலையிலிருந்து விடுபட்டமையும், இரண்டாவது இவ்விழிநிலையிலிருந்து விடுபட்டாலும் கூட மீண்டும் இழிநிலைகளுக்கு ஆளா காதவாறு வாழ்வதற்குரிய போதி யளவு வலுவற்றவர்களாக தாம் வாழ்ந்து கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டமையும் ஆகிய இரு விடயங்களுமே நாம் கற்றுக் கொள்ளவேண்டியவையாகும். மலை யக மக்கள் தமது கீழ்நிலை தொடர்பில் தமக்கு இன்னமும் விழிப்புணர்வு மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து நிற்பதே அமைச்சர் ஒருவரின் தூச ணைக்கெதிராக மலையகம் தொடக்கம் கொழும்பு கோட்டை வரை இடம்பெற்ற பிரமாண்டமான ஐக்கியப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலமாகும். இந்தளவுக்கு மலையகத் தமிழ் மக்களை தலைநிமிர வைத்தவர்கள் தொண்டமான், செல்லச்சாமி போன்ற அரசியல் பிரமுகர்கள் ஆவார்கள் என்பதே நடுநிலையாளர்களின் தீர்ப்பாகவிருக்கமுடியும். எனினும் மலை யகத் தமிழர்கள் இத்தீவின் பூர்விகப் பிரஜைகள் இல்லையென்னும் நிலையும் பெருந்தோட்டங்களில் மிகவும் மலிவான நிலையில் வேலைசெய்வதற்காக அழைத்துவரப்பட்ட தென்னிந்திய ஏதிலிகள் என்ற அமைவுமே இன்றும் கூட மலையகத் தமிழர்களின் அடிப்படை நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. போரட்ட உணர்வுகளும், அவர்களுடைய உயர்வுக்கான ஆக்ரோசமான கருத்துக்களும் மிகவும் வீச்சோடு கட்டவிழ்த்துவிடப்படுகின்ற போதிலும், அவர்களின் அடிப்படைச் சுயமரியாதை மனிதம் என்பவை இன்றும் பெரும் கேள்விக்குறிகளாகவே உள்ளன.

இதனால் தான் வடக்கை விடவே ‘தமிழ் ஈழம்’ தொடர்பில் அங்குள்ள அரசியல்வாதிகளும், மக்களும் இளை யோரும் மிகுந்த அக்கறையும், ஆர்வமும் மிக்கவர்களாக விளங்கினார்கள். வடக்கு-கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் தனிநாடாக மலர வேண்டுமென்ற ஆத்மதுடிப்பு வடக்குக் கிழக்கின் மக்களுக்கும், இளையோருக்கும் இருந்தமையைவிட அங்குள்ள மக்களுக்கும், இளையோருக்கும் அதிகளவில் இடம்பெற்றமையிலிருந்தே அவர்களுடைய உண்மை நிலையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும். இ.தொ.கா என்னும் தொண்டமானின் அமைப்பு மலையகத் தமிழ் பாட்டாளிகள் என்னும் தனித்துவமான குறியீட்டுடன் அம் மக்களின் இழிநிலைகளை அகற்றுவதற்கு முன்னின்று அயராது உழைத்தமையின் பெறுபேறாக விளைந்த பயன் அவர்களின் இழிநிலையின் பாற்பட்டுச் சீர்தூக்கிப் பார்ப்பின் மிகப் பெரியதெனவே கூறவேண்டும். அத்தோடு அப்பகுதியில் இடதுசாரி அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் தமது கட்சிகளின் சகல இனங்களினதும் தொழிலாளர் ஐக்கியம் தொடர்பான சோசலிஷ அரசு என்னும் அரசியல் எண்ணோட்டத்தைப் பின்னணியாக வைத்து அம்மக்களின் விமோசனத்துக்காக வேலை செய்தார்கள். இவ்வரசியல் நடவடிக்கைகளில் மலையகத்தைச் சேர்ந்த சிங்கள இடதுசாரிகளும் ஈடுபட்டார்கள். எனவே மலையகத்தைச் சேர்ந்த தேர்தல் தொகுதிகளில் ஆரம்பத்தில் சிங்கள, மலையகத் தமிழ் மக்களின் இணைந்த வாக்களிப்பினால் இடதுசாரி அரசியல்வாதிகள் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாத் தெரிவு செய்யப்பட்டார்கள். எனினும் தமிழர் தனித்துவமான குறியீடுகளுடன் விளங்கிய இ.தொ.கா போன்ற அமைப்புகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால், உள்ளூர் ஆட்சி உறுப்பினர்களால் இம்மக்களின் நலன் தொடர்பில் செயற்பட்டதைப் போன்று இவர்களால் செயற்படமுடியாமல் போய்விட்டமையையும் இவ்விடத்தில் ஆழ்ந்து நோக்கவேண்டும்.

எது எப்படியிருந்த போதும் காலப்போக்கில் இ.தொ.கா பிரமுகர்கள் உட்பட மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் இம்மக்களின் விமோசனத்துக்காக ஆரம்பத்தில் செயற்பட்டதைப் போன்று அக்கறையுடனும், விசுவாசத்துடனும் செயற்படாமல் அம்மக்களினால் தாமும் மிகக்குறைந்த தொகை யினரும் அரசியல்ரீதியாக இம் மக்களினால் வளர்க்கப்பட்டு பிரபல்யங் களானமையையும், பணம் சொத்துச் சுகங்கள் சேர்த்தமையையும் இம்மக்களுக்குள் இருந்து நில உடமையாளர்களாகவும், முதலாளிகளா கவும், கல்வியாளர்களாகவும், அரச அதி காரிகளாகவும் மிகக் குறைந்த தொகையி னர் உருவானதையும் ஏது நிலைகளாகக் கொண்டு இம் மக்களின் முழுமையான விமோசனம் தொடர்பில் தமக்கு ஆரம்பத்திலிருந்த அக்கறையையும், காருண்யத்தோடு இயைந்திருந்த உள்ளீர்ப்பையும் காலப்போக்கில் படிப்படியாகத் தளரவிட்டுத் தமது சுயமேம்பாட்டையும் அம்மக்களுக்குள் இருந்து உருவான மிகக் குறைந்தளவான சொத்துரிமையாளர்களையும் உயர் கல்வியினால் உயர்பதவிகளை பெற்றுக் கொண்டவர்களை மட்டும் பிரதான மாகக் கருத்துக்கெடுத்துத் தங்களையும் இச் சிறு தொகையினரையும் பெரும ளவில் வளர்த்தெடுப்பதற்காக பயன்பட்ட மலையக வெகுஜனத் திரட்சியைக் கைவிட்டார்கள் எனத் தான் கூறவேண்டும். இதன்பின்; இந்நபர்களினதும் தமதும் நலன்களுக்காகவும், சுகபோக வாழ்க்கைக்காகவும் மலையக வெகுஜனத் திரட்சியைப் பகடைக்காயாக பயன்படுத்தும் தன்மை தான் இவ்வரசியல் பிரமுகர்களை அதிகளவில் ஆட்கொண்டு இன்றுவரை அது நீடித்துக் கொண்டே இருக்கின்றது.

மேலும் வடக்குத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும், எமது பிரச்சினைகளுக்கும் வேறுபாடுகள் உள்ளன எனக்கூறி இலங்கையில் ஆட்சி அமைப்போர் எவராகவிருந்தாலும் அவர்களுடைய அரசாங்கங்களில் அமைச்சர்ப் பதவிகளையும், பிரதி அமைச்சர்ப்; பதவிகளையும் முன்னெப்போதையும் விட அதிகளவில் பெற்றுவிடுகின்றார்கள். இவர்களுடைய இத்தன்மையை ஆளுவோர் மலையக எழுச்சியை மேலெழாதவாறு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.

அமைச்சர்ப்பதவிகளையும், பிரதியமைச்சர்ப் பதவிகளையும் அபாரமாக அலங்கரிக்கும் இம்மலையக அரசியல்வாதிகள் மலை யக வெகுஜனநலனைப் பின்னிறுத்தித் தமது நலனை முன்னிறுத்திச் சந்தர்ப்பவாதிகளாகத் தமது அரசியலை முன்னெடுப்பதோடு ஆட்சிமாற்றம் உருவாகும் சாத்தியம் தென்படும்போது திடீரென்று யாரும் எதிர்பாராத வண்ணம் ஆட்சிக்கு வரக்கூடிய கட்சியொன்று என்னும் உள்ளீர்ப்பின் பாற்பட்டு இணைந்து புதிய ஆட்சியிலும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுவிடுகின்றார்கள்.

இன்று முற்போக்கு முகமூடி அணிந்து வடக்குக் கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் நலனுக்காக என மூன்று மலை யகத் தமிழ் அரசியல்வாதிகளைத் தலைவர்களாகக் கொண்ட கட்சிகளினால் முக்கூட்டணியொன்று தமிழர் முன் வைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு உண்மையில் இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றும் இருதரப்பினரில் ஒரு தரப்பினருக்கு தமிழர் வாக்குகளைச் சேகரித்துக் கொடுக்கும் அறப்பணிக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்றே கருதவேண்டும்.
எனவே மலையகத் தமிழர்களின் இன்றைய நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமாயின் இன்றைய அம்மக்கள் சார்ந்த தமிழ் தலைமையி னாலோ அல்லது இடதுசாரித் தலை மையினாலோ முடியாது. தமிழர் அடை யாளமாக இருந்தாலும் சரி, தொழிலா ளர் குறியீடாக இருந்தாலும் சரி புதிய தலைமையொன்றினால் மட்டும் தான் இது சாத்தியமாகும்.

-இரணியன்-

 

 

SHARE