வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆண்டிகுவாவில் மேற்கிந்திய தீவுகள்-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்தது.
முதலில் ஆடிய வங்கதேசம் 103 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் ஷகிப் அல் ஹசன் 51 ஓட்டங்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் சீலெஸ், அல்சாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் 265 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பிராத்வெயிட் 94 ஓட்டங்களும், பிளாக்வுட் 63 ஓட்டங்களும் எடுத்தனர். வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டுகளையும், காலீத் அகமது மற்றும் எபடோட் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து 162 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேசம் களமிறந்தியது. கேமர் ரோச், ஜோசப் பந்துவீச்சில் வங்கதேச அணி தடுமாறியது. அந்த அணியில் ஷகிப் அல் ஹசன், நுருல் ஹசன் இருவர் மட்டுமே அரைசதம் அடித்தனர்.
இறுதியில் வங்கதேசம் 245 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கேமர் ரோச் 5 விக்கெட்டுகளையும், ஜோசப் 3 விக்கெட்டுகளையும், மேயர்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 88 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
வங்கதேச அணியில் காலீத் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கேமர் ரோச் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.