தமிழ் அரசியல் தலைவர்கள் விட்ட தவறென்ன? -நெற்றிப்பொறியன்-

343

இலங்கையின் தேசிய சிறுபான்மையினப் பிரச்சினையானது நீண்ட காலமாக இழுபறிப்பட்டு வருவதும், பெருஞ் சாபக்கேடாக விளங்கி வருவதுமான இன்றுங்கூடத் தொடர்கதையாக நீண்டு வருவதற்கு சேர்.பொன்.இராமநாதன் காலத்திலிருந்து இன்றுவரை அம்மக்களுக்குள் இருந்துவந்த அரசியல் தலைவர்களே காரணமானவர்கள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தின் எதிர்வுக் கூற்றுக்கும் இடமில்லை என்பது மிகவும் வலுமிகுந்த நிதர்சனமாகும்.

06
ஆரம்பத்தில் சிங்கள மக்களாளேயே பெரிதும் மதிக்கப்பட்ட சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் அம் மக்கள் அவருக்களித்த பெரு மதிப்பின் பாற்பட்ட தலைக்கேறிய போதையினாலேயே தன்னுடைய கல்விப் புலமையையும், தூரநோக்கையும், தீர்க்க தரிசனத்தையும் இழந்திருந்தார் எனக் கருதுவதற்கு இடமிருக்கின்றது.
ஆரம்பத்தில் சிங்கள மன்னர்கள் முதலில் இலங்கைத் தீவுக்கு வந்த அந்நியர்களான போர்த்துக்கேயரிடம் தாம் ஆண்ட கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம், கரையோர இராச்சியம் ஆகிய இராச்சியங்களை இழந்தமையும் பின்னர் தமிழர் ஆட்சி செய்த இராச்சியங்களான யாழ்ப்பாண இராச்சியம், வன்னி இராச்சியம் ஆகிய இராச்சியங்கள் அவர்களிடம் பறிபோனமையின் அடிப்படைக் காரணிகளைச் சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் சீர்தூக்கிப் பார்த்துப் பிரித்தானியர் இத்தீவின் ஆட்சியிலிருந்து வெளியேறிச் சென்றபோதே தமிழர் ஆட்சிசெய்த இராச்சியங்களைக் கொண்ட தமிழர் தாயகத்தைத் தம்மிடம் ஒப்படைத்துச் செல்லும்படிக் கோரி அன்றே தனிநாட்டைப் பெற்றிருக்கலாந்தானே. இவ்விடயம் தொடர்பில் சேர்.பொன்.இராமநாதன் என்னும் தமிழ்த் தலைவரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தவறு பின்னர் உருவான ஒவ்வொரு தலைமையினாலும் மெருகூட்டப்பட்டுக் கொண்டு வந்தது என்றே கருதவேண்டும்.

07 125px-Chellappah_Suntharalingam 01
இவரைத் தொடர்ந்து வடக்கில் உருவான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் அடங்காத் தமிழர் முன்னணித் தலைவர் சி.சுந்தரலிங்கம் அவர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம அவர்களின் தவறுகளும் இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்கப் படமுடியாத பாரிய அவல நிலைக்கு ஆளாக்கியது. இந்நிலையில் தான் தமிழர் தமது தாயகத்தை ஆயுதப் போராட்டம் ஒன்றின் மூலம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என்னும் மிக உறுதிப்பாடான எண்ணக்கரு ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கான ஆயுதப் போராட்டமும் பிரபாகரன் அவர்கள் தலைமையில் அசாதாரணமான யுத்தக் கட்டுமானங்களையும், போரியல் நடவடிக்கைகளையும் யுத்தத் தந்திரோபாயங்களையும், கொரில்லா யுத்திகளையும் கையாண்டு முன்னெடுக்கப்பட்டுத் தொடர்ந்து முப்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக யுத்தம் நீடிக்கப்பட்டபோதும் கூடத் தமிழர் தாயகத்தை வென்றெடுக்க முடியவில்லை.

அமைதி வழிப் போராட்டங்கள் பயனளிக்காத நிலையில் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் நீண்ட காலமாகத் தமிழர் விடுதலையொன்றையே ஆத்ம தாகமாகக் கொண்டிருந்த கொள்கைவாதிகளும், நல்லெண்ணங் கொண்டோரும் பிரபாகரன் அவர்களே இலங்கைத் தமிழ் மக்களின் அடிமைத்தனத்தை அறுத்து அவர்களுக்குப் பூரண விடுதலையைப் பெற்றுக்கொடுப்பார் என எண்ணி எதிர்நோக்கியிருந்தார்கள் எனினும் அவர்களுடைய அவ்வெதிர்பார்ப்புக்கு மாறாக ஆயுதப்போராட்டமும், இராணுவ இணைவு என்னும் இழிநிலை காரணமாகத் தோல்வியில் முடிவடைந்தது.

இத் தோல்விக்கும் வட்டுக்கோட்டையில் ‘தனித் தமிழ் நாடு’ கோரிக்கையை முன்வைத்து 1977ல் இடம்பெற்ற தேர்விலும் அக்கோரிக்கைக்கு சார்பாக மக்களிடம் ஆணையைப் பெற்ற அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையிலானவர்களின் மிகவும் இழிநிலையின் பாற்பட்ட பெருந்தவறுகளும் காரணிகளாக இருந்தன.
அதற்கு முன்னர் சேர்.பொன்.இராமநாதன் அவர்களின் பின்னரான ஜி.ஜி.பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஆகிய தமிழ்த் தலைவர்களின் தவறுகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தபின் இறுதியில் எல்லோராலும தமிழ் மக்களுக்கான விமோசனத்துக்கான இறுதியான வழியென நம்பப்பட்ட ஆயுதப் போராட்டமும் தோல்வியைத் தழுவிக் கொண்டமைக்கான மூல காரணியாக விளங்கும் அமிர்தலிங்கம் அவர்களின் தவறையும் விமர்சிப்போமாக.

05

முதலில் அகில இலங்கைத தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம அவர்கள் தனது சட்டப்புலமை காரணமாகத் தலைகனத்து தீர்க்கதரிசனமற்ற நிலையிலும் மமதை மேலீட்டாலும் தனது புலமையையும் அதன் பாற்பட்ட தலைவீக்கத்தையும் பறைசாற்றினாரேயொழிய அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழினத்திற்கு நன்மையளிக்கக்கூடிய தமிழ் வெகுஜனத் திரட்சிக்கு பயன்கொடுக்கக் கூடிய விதமாகத் தமது அரசியல் எண்ணோட்டங்களையும், நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. தனிநபர் பெரும்போக்குடன் இயைந்த திமிர்த்தனம் ஜி.ஜி.அவர்களையும் பெருமளவில் ஆட்கொண்டிருந்தமையால் அவருக்கு ஆளுவோரிடம் தமிழ் மக்களின் இழிநிலையில் தானும் ஒருவராகக் கீழிறங்கி ஓரளவுக்காவது அவர்களுடைய இழிநிலைகளை அகற்றி முழுமையான விமோசனத்துக்காகப் படிப்படியாக படியேறிச் செல்வோமென்னும் உணர்வு நிலை இல்லாமலிருந்தது.

இதன்படி மாடிப் படிகளைப் படிப்படியாக பயன்படுத்தும் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களுக்குத் தமிழர் விடியல் தொடர்பாக படிப்படியாகப் படிகளைப் பயன்படுத்தும் பாங்கு சாத்தியமான ஒன்றாக இருக்கவில்லை. இதனால் தமிழர் சார்பில் அவரால் பெரிதாக முன்வைக்கப்பட்ட 50க்கு 50 என்னும் கோரிகையை ஒத்த கோரிக்கைகளையிட்டு அவரும் அவரையொத்த துரைத்;தனத்தாரும் திருப்தியடைந்து இறும் பூய்தி நின்ற போதுங்கூட தமிழ் வெகுஜன திரட்சியானது இவ்வாறான தூரநோக்கற்றதும், தீரக்கதரிசனமற்றதுமான கோரிக்கைகளினால் மேலும் மேலும் பின்னோக்கிச் செல்லவேண்டிய அவலத்தையே எதிர்நோக்கவேண்டிய துரதிட்டவசமான நிலையொன்றும் தோற்றுவிக்கப்பட்டது.
இவர்களில் தமிழ் மக்களுக்குள் செல்வாக்குப் பெற்றவராகத் திகழ்ந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டங்கள், ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் என்பவற்றை முன்னெடுத்தபோதுங்கூட அவர்களுடைய நடவடிக்கைகள் கட்சியின் மீதான மக்கள் அபிமானத்துக்கும் அதன் தக்க வைப்புக்கும் பெரிதும் பயன்பட்டதேயொழிய தமிழ் மக்களின் நலன் தொடர்பில் குறிப்பிடக்கூடியளவுக்குப் எதையும் வழங்கவில்லை.

நாங்கள் ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் நடத்தினோம், நாங்கள் சத்தியக்கிரகம் செய்தோம் எனக் கூறி மக்களிடம் வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தொடர்ந்தும் செல்வதற்கு அவர்களுடைய போராட்டங்கள் வழிவகுத்தனவேயொழிய தமிழர் உரிமை தொடர்பில் ஒரு மைல் கல்லைத்தானும் இப்போராட்டங்களினால் அவர்களால் சென்றடைய முடியவில்லை.

மேலும் 1965ம் ஆண்டு ஆட்சி பீடமேறிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் தலைமையிலான ஆட்சியின் அமைச்சரவiயில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களைத் தலைவராகக் கொண்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியும் பங்குபற்றி அக்கட்சியின் செனட்சபை உறுப்பினரான திருச்செல்வம் என்பவரை அமைச்சர் ஆக்கியும் இருந்தது. 1970ஆம் ஆண்டு திடீர் பல்டி அடித்து ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவையிலிருந்து விலகிய தமிழரசுக்கட்சி தனது வழமையான தேர்தல் நலனையும் கட்டிக்காக்கும் வழமையான தலைமையை இறுகப்பற்றிக் கொள்ளத் தவறவில்லை.

இவ்வாட்சியின்போதே கிழக்கிலங்கையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தமிழரசுக்கட்சியின் எதிர்ப்பில்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. இவ்விடத்தில் தமிழரசுக் கட்சியின் பாணியிலே சேவையாற்றி தமிழ் மக்கள் குடியுரிமை விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீமாவோ காலத்தின் போதான ஒப்பந்தத்தில் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் மலையக மக்கள் நலனுக்கு எதிரான துரோகத்தனத்தை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்விடத்தில் அடங்காத் தமிழர் முன்னணித் தலைவர் சி.சுந்தரலிங்கம் அவர்களின் நிலைப்பாடு தொடர்பில் சிறிது விளக்கமளிப்பதும் பயனுள்ளதே. கணிதத்தில் அசாதாரண புலமையுள்ளவராகத் திகழ்ந்த சி.சுந்தரலிங்கம் அவர்களும் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களைப் போலவே தலைகிறுக்கு மிக்கவராகவும் இயல்புக்கு மாறான தற்பெருமை கொண்டவராகவும் விளங்கினார். இவர் வவுனியாத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அத்தொகுதியைச் சேர்ந்த மக்களின் கல்வி, கலாச்சாரம் தொடர்பிலான சிறுமதியின் பாற்பட்ட ஏளனம் வாய்ந்த கருத்துக்களினால் சீற்றமடைந்த வவுனியா மக்கள் அவரைத் தேர்தலில் தோற்கடித்தமையும் அதன் பின் அவர் காகேசன்துறைக்குச் சென்று தேர்தலில் போட்டியிட்டுத் தொடர்ந்தும் தோல்வியைத் தழுவிக்கொண்டமையும் தெரிந்ததே. இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அம்மன்றுக்குள் தமிழர் உரிமை தொடர்பில் மிகவும் எழுச்சி மிகுந்த தலைவராக விளங்கியமை உண்மையே.

பின்னாளில் காங்கேசன்துறைத் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் எஸ்.ஜே.வி.அவர்களுக்கு எதிராக போட்டியிட்டுத் தோல்வியையே தொடர்ச்சியாகத் தழுவியிருந்தார். ஆரம்பத்திலேயே இலங்கைத் தமிழ் மக்கள் தனி நாடு ஒன்றின் மூலமே விமோசனம்பெற முடியுமென இவர் கருத்துவெளியிட்டமை பாராட்டக்கூடியதாக இருந்ததோடு பின்னாளில் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டு வட்டுக்கோட்டைத் தமிழ் ஈழத் தீர்மானம் முன்வைக்கப்பட்டதனால் ஆரம்பத்திலேயே தனிநாட்டுக் கோரிக்கையை இவர் முன்வைத்தமையால் எஸ்.ஜே.வி அவர்களோடும் அமிர்தலிங்கம் அவர்களோடும் ஈடுபாடுகாட்டத் தொடங்கியிருந்தார்.

எனினும் சமூக விடயங்களில் சுந்தரலிங்கம் அவர்களின் நிலைப்பாடு மிகவும் பிற்போக்குத்தனமாக விளங்கியது. மாவிட்டபுரம் ஆலயப் பிரவேசப் பிரச்சினையில் பிடிவாதமாக நின்று தீண்டாமையைப் பேணிய அன்னாரின் சமூக பிற்போக்குத்தனம் அதுவும் எவ்வளவோ பிற்பட்ட காலத்திலும் மேலோங்கியிருந்தமை மிகவும் வருந்தத்தக்கதே, இவ்விடத்தில் மாவிட்டபுரம் ஆலயப் பிரவேசம் தொடர்பிலும் தீண்டாமை தொடரிலும் எஸ்.ஜே.வி அவர்கள் எமக்குள் ஒரு சாராரை நாம் புறக்கணிப்போமானால் நாம் இன்னொரு சாராரால் புறக்கணிக்கப்படுவது இறைநியதியாக அமைந்துவிடும் எனக்கூறித் தீண்டாமை விடயத்தில் தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தினார்.

இதனால் காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில் இலங்கைக் கம்யூனிஸ்ற் கட்சி (மாஸ்கோ பிரிவு) யின் சார்பாக போட்டியிட்ட திரு.வ.பொன்னம்பலம் அவர்கள் இரண்டாவது இடத்துக்கு வர எஸ்.ஜே.வி அவர்கள் முதலாவது இடத்தையும் பெற்று வெற்றிபெற சி.சுந்தரலிங்கம் அவர்கள் முதுபெரும் அரசியல் தலைவராக விளங்கியபோதுங்கூட தொடர்ந்தும் அத்தொகுதியில் தோல்வியையே தழுவ வேண்டிய நிலைக்காளாகினார்.
இது இவ்வாறிருக்க 1977 ஆம் ஆண்டு தமிழீழத்துக்கான ஆணையை வடக்கு கிழக்கு மக்களிடமிருந்து பெற்று நாடாளுமன்றத்துக்கு முன்னெப்போதையும்விட வலுவான நிலையில் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அவ்வாறக விசுவாசமாகச் செயற்படத் தவறியிருந்தனர். இவ்விடத்தில் சேர்.பொன்.இராமநாதன் தொடக்கம் ஜி.ஜி.பொன்னம்பலம், சி.சுந்தரலிங்கம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஆகியோர்வரை தமிழ்த் தலைவர்கள் இழைத்த தவறுகைளவிட தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர்கள் இழைத்த தவறுகள் அவர்களுடைய காலத்தில் ஆயுதப்போராட்டமும் ஆரம்பமாகியிருந்தமையால் மிகவும் பாரதூரமானவை.

இத்தலைவர்களுள் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமாகவிருந்த அமிர்தலிங்கம் அவர்களும் அவ்வமைப்பின் தலைவராக இருந்த மு.சிவசிதம்பரம் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். 1977ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலின்போது ஜே.ஆர், பிரேமதாசா ஆகியோர் தலைமையிலான ஐ.தே.க.அரசாங்கமானது ஆட்சிபீடமேறியது.

எதிர்பாராதவிதமாக தேர்தலின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குக் கிடைத்த ஆசனங்களை விடக் குறைவான ஆசனங்களே கிடைத்தமையால் தமிழர் விடுதலைக் கூட்டணியே எதிர்க்கட்சியாகவும், அதன் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆகும் வாய்ப்பு அமைந்தது. ‘அமிர்’ அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரானமையும் அசாதாரண பொறுப்பும், தூரநோக்குக் கொண்ட ஆயுதப்போராட்டமே கேள்விக்குறியாகும் விதமாக அவர்கள் தவறுகள் இழைக்க வேண்டிய நிலையையும் தோற்றுவித்தது.

இனி ஆயுதப்போராட்டம் கருக்கட்டிய தமிழ் மக்களுக்கு விடிவுகாலம் பறக்க வேண்டிய ஆரோக்கியத்துடன் அரசியல் கள அமைவு தோற்றுவிக்கப்பட்ட நிலையில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், தொண்டமான், அன்ரன்பாலசிங்கம் ஆகியோர் இழைத்த தவறுகளை நோக்குவோம்.

அமிர்தலிங்கம் அவர்களும் அவரைச் செயலாளர் நாயகமாகக் கொண்ட அமைப்புமான தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவர்களான அவருடைய சகாக்களும் ‘தமிழீழம்’ என்னும் தமிழ் மக்கள் அவர்களுக்கு வழங்கிய ஆணையை வென்றெடுப்பதற்குரிய நேர்மையான மேலத்திட்டங்களை வென்றெடுப்பதற்கு வக்கில்லாதவர்களாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் வழங்கிய போதையினால் தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டத்தைப் ‘பயங்கரவாதம்’ என வர்ணித்த அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்குப் ‘பிரேமதாஷா’ அவர்களுடன் சேர்ந்து தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த அமிர்தலிங்கம் அவர்களையும் யாழ்ப்பாணம் மக்களின் முகத்தில் முழிக்கக்கூட முடியவில்லையென்னும் கருத்தை வெளியிட்ட சிவசிதம்பரம் அவர்கள் பின்னர் உள்ளுராட்சித் தேர்தலில் ஆசனங்களைப் பெறுவதற்காக யாழ்ப்பாணத்துக்கு வந்து டக்ளஸ் தேவானந்த அவர்களின் முகத்தில் முழித்து அவரோடு இணைந்து தான் போட்டியிடுவதற்கான விருப்பத்தைத் தெரிவித்தமையும், ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல் விட்டமையும், அவர் ஏமாற்றத்துடன் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு கொழும்புக்குத் திரும்பிச் சென்றமையும் தெரிந்ததே.

இவர்களை விட விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களைச் சாதகமாகப் பிரரேமதாஷ அவர்களுடன் இணைந்து தமிழர் தொடர்பிலும் தமிழீழம், தமிழ் மக்களின் ஆணை தொடர்பிலும், ஆயுதப்போராட்டத்தின் நகர்வு தொடர்பிலும் களுத்தறுப்பு வேலைகளை மேற்கொண்டிருந்தார். இவருடைய இந்நடவடிக்கையினாலேயே ஆயுததாரிகளில் ஒரு சாரார் இராணுவத்துடன இணையவேண்டிய துரதிட்டவசமான நிலை தோற்றுவிக்கப்பட்டது.

எனவே சேர்.பொன்.இராமநாதன், சி.சுந்தரலிங்கம், ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஆகியோர் மட்டுமல்ல ஆயுதப்போராட்டத்துக்கு ஆலோசகராக விளங்கிய அன்ரன்பலசிங்கம் அவர்களிடமும் தவறு இருந்தமையே தமிழர் பிரச்சினையானது தொடர்ந்தும் இழுபறிப்பட்டுச் செல்வதற்கான பிரதான காரணியாகும்.

 

SHARE