பிரபாகரன் தமிழர்களை நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வரணி மத்திய கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்புவிழா நேற்று நடைபெற்றுள்ளது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டார். தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
இந்தப்பாடசாலையின் வரலாற்றில் இந்த தொழில்நுட்ப ஆய்வு கூடத்தின் வரவு ஒரு அத்தியாயமாக வரப்பிரசாதமாக அமைகின்றது. இப்படியான நவீன வளங்கள் கிடைக்கின்றபோது மாணவர்களின் சிந்தனை திறனும் தேடலும் மாற்றத்தக்கு உள்ளாகின்றது.
அதன் மூலம் சாதனைகள் படைக்கப்படுகின்றது. புதிய சிந்தனைகள் படைப்புக்கள் பிறக்கின்றன. இந்த மண்ணிலே எமது தொழில் நுட்ப அறிவை நவீன சிந்தனையை வெளிப்படுத்தக்கூடிய மனிதர்கள் வாழந்துபோயிருக்கின்றார்கள்.
பேராசிரியர் துரைராஜா சிவத்தம்பி போன்ற துறை சார் விற்பன்னர்கள் உலகம் வியக்கும் வண்ணம் வாழ்ந்து வரலாறு ஆகியிருக்கின்றார்கள். இந்த உலகத்தின் வளர்ச்சியுற்ற நாடுகளில் தமிழ் மாணவர்கள் சாதனை படைக்கின்றவர்களாக கண்டுபிடிப்புக்கள் செய்கின்றவர்களாக இருக்கின்றார்கள்.
இது தமிழர்களின் மரபில் ஊறியுள்ள விடயம். அதனால் அந்த ஆற்றல் இந்த சந்ததியிடமும் இருக்கும் அவை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.அதற்கு மாணவர்கள் முன்வரவேண்டும். உலகத்தை நாம் வெல்கின்றவர்களாக மாறவேண்டும்.
அதற்கு உதைப்பு வேண்டும். கோழக்குஞ்சு முட்டையை கொத்தி அந்த உடைத்துத்தான் இந்த உலகத்தை பார்க்கின்றது. எல்லோரும் யாருக்கும் முழுமையாக தந்துவிடமாட்டார்கள். அதில் முயற்சியும் பங்கும் சிந்தனையும் இருக்கவேண்டும்.
முதலையும் உதைத்து உடைத்தே வெளிவருகின்றது. அதன் வல்லமையை உணர்கின்றது. வாழ்கின்றது. வாழ்க்கை இப்படித்தான். வாழக்கையில் நாம் எம்மை இந்த உலகத்தில் அடையாளப்படுத்த வேண்டும். விவேகானந்தர் இளைஞர்களை நோக்கிய தன் சிந்தனையால் அடையாளமானார். அன்னை தெரேசா அன்பால்அரவணைப்பால் அடையாளமானார்.
நெல்சன் மண்டேலா விடுதலைப் போராட்டத்தால் தன்னை அடையாளப்படுத்தினார். பிரபாகரன் தமிழர்களை நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார். எனவே மாணவர்களே! நாமும் இந்த உலகத்தில் சாதனையாளர்களாக மாறவேண்டும்.
அதற்கு போராடித்தான் ஆகவேண்டும். அதற்கு வெற்றியின் மீதான நம்பிக்கைவேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் வெற்றிபெறுகின்றார்கள். எல்லா ஜீவராசிகளும் பேராடித்தான் தினமும் வாழ்கின்றன.
எனவே வாழ்க்கையில் எல்லா துறைகளிலும் நாம் வெற்றி பெற அறிவையும் ஆற்றலையும் வளர்த்து இந்த உலகத்தை நாம் வெல்ல வேண்டும். அதற்கு இந்த தொழில்நுட்ப ஆய்வுகூடமும் ஒரு வாய்ப்பு என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கல்வி உயர் அதிகாரிகள் வடக்கு மகாண சபை உறுப்பினர் சயந்தன் சாவகச்சேரி பிரசேசபைத் தலைவர் துரைராசா உட்பட கல்விச் சமூகத்தினர் வரணி மண்ணின் மைந்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.