உலக கோப்பை கவுன்ட் டவுண் 24: ‘கடவுளின் கையால்’ கோல்

677

 

maradona, soccer

கால்பந்து போட்டிகளில் கோல்கீப்பர் தவிர, மற்ற வீரர்கள் கையால் பந்தை தொடுவதே தவறு. ஆனால், கையால் கோல் அடித்த அதிசயம் 1986ல் மெக்சிகோவில் நடந்த 13வது உலக கோப்பை தொடரில் அரங்கேறியது. இதில், மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. முதல் சுற்றுப் போட்டிகள் ‘ரவுண்ட்–ராபின்’ முறையில் நடந்தன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில், இத்தாலி அணிகள் சாதிக்கவில்லை.ஜூன் 22ல் நடந்த காலிறுதியில் அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் மோதின. 51வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் மாரடோனா தலையால் முட்டுவது போல, தனது இடது கையால் பந்தை தட்டி தவறாக கோல் அடித்தார். இதனை கவனிக்காத நடுவர் நாசர், கோல் என அறிவித்தார். இதற்கு, இங்கிலாந்து கோல்கீப்பர் பீட்டர் ஷில்டன் மற்றும் சக வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் பலனில்லாமல் போனது. தொடர்ந்து அசத்திய மாரடோனோ, 55வது நிமிடத்தில் நான்கு இங்கிலாந்து வீரர்களை கடந்து ‘சூப்பர்’ கோல் அடித்தார். இது நுாற்றாண்டின் சிறந்த கோலாக போற்றப்பட்டது. இறுதியில் அர்ஜென்டினா 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அப்போது மாரடோனா கூறுகையில்,‘‘எனது தலை மற்றும் ‘கடவுளின் கை’ உதவியுடன் முதல் கோல் அடித்தேன்,’’என, சமாளித்தார்.அரையிறுதியில் அர்ஜென்டினா அணி, பெல்ஜியத்தை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ் அணியை வீழ்த்தி, பைனல் வாய்ப்பை பெற்றது.பைனலில் மாரடோனாவின் துடிப்பான ஆட்டம் கைகொடுக்க, அர்ஜென்டினா அணி, மேற்கு ஜெர்மனியை 3–2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, உலக கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றியது.

‘எக்ஸ்டிரா டைம்’

மெக்சிகோ உலக கோப்பை தொடரில் 6 கோல்கள் அடித்து அசத்திய இங்கிலாந்தின் கேரி லினேகர் ‘கோல்டன் ஷூ’ கைப்பற்றினார். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 கோல்கள் அடித்த  மாரடோனா, ‘கோல்டன் பால்’ விருதை தட்டிச் சென்றார்.

அதிகமான தோல்வி

வடக்கு அமெரிக்க நாடு மெக்சிகோ. கடந்த 1930 முதல் 2010 வரை என, 19 உலக கோப்பை தொடர்களில், 14 ல் பங்கேற்றது. இதில் மொத்தம் விளையாடிய 49 போட்டிகளில், 24ல் தோற்றது. இதையடுத்து, உலக கோப்பை தொடர்களில் அதிகமான தோல்விகள் பெற்ற அணி என்ற வேதனையான சாதனை பெற்றது.

ஐரோப்பா ஆதிக்கம்

இதுவரை மொத்தம் 19 உலக கோப்பை தொடர்கள் நடந்தன. இதில் ஐரோப்பிய அணிகள் 10 முறை, தென் அமெரிக்க அணிகள் 9 முறை கோப்பை வென்றன. மற்ற நான்கு கண்டங்களை (ஆசியா, ஆப்ரிக்கா, ஓசியானா, வடக்கு மத்திய அமெரிக்க, கரீபிய நாடுகள்) சேர்ந்த எந்த அணியும் இதுவரை கோப்பை வென்றதில்லை.

 

இரண்டு வீரர்கள் தான்

1958, 1962, 1966 மற்றும் 1970 என, தொடர்ந்து நான்கு உலக கோப்பை தொடர்களில் பங்கேற்ற வீரர்கள் என்ற பெருமை பிரேசிலின் பீலே, மேற்கு ஜெர்மனியின் உவே சீலெர் பெற்றனர்

SHARE