பன்னாகம் அழகரட்னம் சிவராஜா கொலை வழக்கில் கண்கண்ட சாட்சியமோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியமோ முன்வைக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தினால் எதிரியாகக் குற்றம் சாட்டப்பட்டவரை, நீதிபதி இளஞ்செழியன் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை நிறைவு பெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி பன்னாகம் என்னும் இடத்தில் அழகரட்னம் சிவராஜா என்பவரை கொலை செய்ததாக, சின்னத்தம்பி சிவபாதம் என்பவர் மீது, குற்றம் சுமத்தி சட்டமா அதிபரினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் அங்கு பணியாற்றிய நீதவான் கஜநிதிபாலன் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டிருந்தது.
இந்த அடையாள அணிவகுப்பின்போது, இரண்டு பேர் சாட்சிகளாக அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவராகிய கிருஸ்ணன் ஜெகேந்திரன் என்ற சாட்சி, எதிரியை அடையாளம் காட்டியிருந்தார். ஆயினும் மற்றுமொரு சாட்சி எதிரியை அடையாளம் காட்டவில்லை.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தியிருந்ததையடுத்து, இந்த அடையாள அணிவகுப்பை நடத்திய மல்லாகம் நீதவான் கஜநிதிபாலன், அவர் நடத்திய அடையாள அணிவகுப்பு அறிக்கையை சான்றாக அடையாளமிட்டு சாட்சியமளிப்பதற்காக முக்கிய சாட்சியாக மேல் நீதிமன்றத்தினால் அழைக்கப்பட்டிருந்தார்.
மேல் நீதிமன்றத்தின் அழைப்பையேற்று மன்றில்
முன்னிலையாகிய நீதவான் கஜநிதிபாலன், அவர் நடத்திய அடையாள அணிவகுப்பு அறிக்கையை இந்த வழக்கின் முக்கிய சான்றாக இலக்கமிட்டு சாட்சியமளித்தார்.
இதனையடுத்து, அடையாள அணிவகுப்பில் எதிரியை அடையாளம் காட்டிய சாட்சியாகிய கிருஸ்ணன் ஜெகேந்திரன் இங்கு சாட்சியமளித்தபோது, எதிரியும் இறந்தவரும் வாய்ச்சண்டை பிடித்ததைக் கண்டதாகவும், ஆனால், இறந்தவருக்கு எப்படி இறப்பு நேர்ந்தது என்பதைக் காணவில்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கில் முன்னிலைப்படுத்தப்பட்ட சிவில் மற்றும் பொலிஸ் சாட்சியங்களில் எதிரிதான் இந்தக் கொலையைச் செய்தார் என்று நேரடியாகக் கண்ட சாட்சியமாகவோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியங்களாகவோ முன் வைக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன், இந்த வழக்கில் சாட்சியமளித்த மல்லாகம் நீதவான் கஜநிதிபாலன் சான்றுப் பொருளாக இலக்கமிட்ட அடையாள அணிவகுப்பு அறிக்கையை மட்டும் வைத்து கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீர்மானிக்க முடியாது என தெரிவித்தார்.
அத்துடன், மல்லாகம் மாவட்ட நீதவான், அடையாள அணிவகுப்பை கடமையின் நிமித்தமே செய்தார். அவர் நேரடியாகக் கொலைச் சம்பவத்தைப் பார்க்கவில்லை. கொலை நடைபெற்றதை நேரடியாகக் கண்ட சாட்சிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை.
எனவே, இந்தக் கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எதிரிதான், இந்தக் கொலையைச் செய்தார் என்பதற்கான சரியான சாட்சியங்கள் எதுவும் முன் வைக்கப்படாதபடியினால், வழக்குத் தொடுனர் இந்த வழக்கில் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் குற்றத்தை நிரூபிப்பதற்குத் தவறிவிட்டார் என கூறிய நீதிபதி இளஞ்செழியன், எதிரியை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இநத வழக்கில் எதிரி தரப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி சிறிகாந்தாவும், அரச தரப்பில் அரச தரப்பு சட்டத்தரணி திருமதி நளினி சுபாகரனும் முன்னிலையாகியிருந்தனர்.