மஹிந்த நாட்டை மட்டுமல்லசு.கவையும் நாசமாக்கியுள்ளார்!- அநுரகுமார திசாநாயக்க

368
நாட்டை மாத்திரமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் நாசமாக்கியுள்ள  மஹிந்த ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தவறிவிட்டதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
anura

ஜனவரி 8ம் திகதி மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அரசாங்கத்தை அமைத்த போதும் மஹந்த ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கத் தவறியிருப்பதாக அவர் கூறினார்.

கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இருவரின் வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கடந்த ஆறு மாத காலத்துக்குள் மஹிந்த ராஜபக்ச அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலின் போதும், அதன் பின்னரும் மஹிந்த தெரிவித்த கருத்துக்கள் முற்று முழுதாக இனவாதத்தைத் தூண்டுவதாக அமைந்தது.

நாட்டில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் சந்தேகத்தை அதிகரிக்கச் செய்யும் நிலைப்பாடே காணப்பட்டது. இதனைத் தோற்கடிப்பதற்கு ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ பங்களிப்புச் செய்யத் தவறிவிட்டார்கள் என்றும் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டை தீர்க்கமாக முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்திருந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்பொழுது முகங்கொடுத்திருக்கும் பிரச்சினையை எதிர்கொண்டிருக்க நேரிட்டிருக்காது.

மஹிந்த ராஜபக்ச, அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த நிதி மோசடி, கொலை உள்ளிட்ட குற்றச் சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுத்திருந்தால் மஹிந்த அரசியலுக்கு வந்திருக்க மாட்டார்.

மஹிந்த ராஜபக்சவுக்கு ஐ.ம.சு.முவில் தேர்தலில் போட்டியிட அனுமதித்திருப்பது ஜனவரி 8ம் திகதி மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகும்.

இருந்தபோதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்திருக்கும் தீர்மானம், குறிப்பாக மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படாது மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும் போன்ற அறிவிப்புக்களுக்கு மதிப்பளிப்பதுடன், அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாகவும் ஜே.வி.பியின் தலைவர் குறிப்பிட்டார்.

மஹந்த ராஜபக்ச நாட்டை மாத்திரமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் நாசமாக்கியுள்ளார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் பண்டாரநாயக்க கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு எடுத்த முயற்சிகள் இன்னமும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களால் பாராட்டப்படுகிறது. எனினும், போதைப்பொருள் வியாபாரிகள் உள்ளிட்ட மோசடிக்காரர்களுக்கு இடமளித்து கட்சியை மஹிந்த ராஜபக்ச நாசமாக்கிவிட்டார்.

மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுப்பது அந்தக் கட்சியின் உறுப்பினர்களின் கடமையாகும்.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவை இந்தத் தேர்தலில் தோற்கடிப்பதன் மூலமே இதனைச் செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE