கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதி போட்டியில் பிரான்சை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது.
அர்ஜென்டினா 3-வது முறையாக உலக கோப்பையை வென்று உள்ளது. இதற்கு முன்பு 1978, 1986-ம் ஆண்டுகளில் சாம்பியன் ஆகி இருந்தது. மரடோனாவுக்கு பிறகு லியோனல் மெஸ்சி அந்நாட்டுக்காக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.
36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா உலக கோப்பையை கைப்பற்றிய தால் அந்நாடே விழாக் கோலம் பூண்டுள்ளது. அணியின் வெற்றியை திருவிழா போல் தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.
உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் நேற்று நாடு திரும்பினர். அவர்களுக்கு மிகவும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்கள் பெரும் திரளாக பங்கேற்று தங்கள் நாட்டு நாயகர்களை வாழ்த்தி கோஷ மிட்டனர். திறந்த பஸ்சில் சென்ற அவர்களுக்கு சாலையின் இரு புறத்தில் இருந்தும் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.
இந்த உற்சாகமான வரவேற்பில் அர்ஜென்டினா கால்பந்து வீரர்கள் திக்கு முக்காடி விட்டனர். நாடு முழுவதும் இந்த வெற்றி கொண்டாட்டம் இருந்தது.
maalaimalar