நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, யாழ்.மாவட்டத்தில் இன்றுவரை 17 கட்சிகளும் 12 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன. இன்றைய தினம் 11 கட்சிகளும், 9 சுயேட்சை வேட்பாளர்களும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
குறிப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி விக்னராஜாவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதம வேட்பாளராக அங்கஜன் ராமநாதனும், மக்கள் விடுதலை முன்னணி கட்சி சார்பில் சந்திரசேகரனும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
சுயேச்சைக் குழுக்களில் நடேசபிள்ளை வித்தியாதரன், பர்னாந்து ஜோசப் அன்ரனி, தில்லைநாதன் சாந்தராஜ், சுந்தரலிங்கம் சிவதர்சன், முருகன் குமாரவேல், ஆனந்த சங்கரி ஜெயசங்கரி, கறுப்பையா ஜெயக்குமார், ஜெயபால ஜெயசுலக்சன், சின்னதுரை சிவமோகன் ஆகியோர் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று மதியம் 12 மணியளவில் நிறைவுபெற்றதை தொடர்ந்து வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த கட்சிகளில் 2 கட்சிகள் மற்றும் 6 சுயேச்சைக் குழுக்கள் ஆகியவற்றின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.