அரசியல் தீர்வினை அடுத்த வருடத்திலாவது காணவேண்டும்!

321
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பில் தேர்தல் பிரசாரங்களின் போது தற்போது கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு அடுத்த வருடத்திலாவது தீர்வைக் காண முன்வர வேண்டும்
TNA1

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று முன்தினம் திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் கிளைக் கூட்டத்தில் உரையாற்றும் போதும் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தமிழ் மக்கள் உரிய ஆதரவினை ஒருமித்து வழங்கினால் 2016ம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத் தருவோம். வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பூரண இறைமை பெற்று போதிய சுயாட்சி அதிகாரத்தை பெற்று தாமே தம்மை ஆளும் அதிகாரத்தை உண்டாக்கும் வகையில் இந்தத் தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும் என்று சம்பந்தன் கருத்துக் கூறியுள்ளார்.

நடைபெறவுள்ள தேர்தல் மிக முக்கியமானதாகும். இந்தத் தேர்தல் மூலம் ஏற்படும் விளைவுகள் எதிர்காலத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை எமது அரசியல் பயணத்தில் முக்கியமான மைல் கல்லாக கருதவேண்டும்.

யுத்தம் முடிந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் கிழக்கு மாகாண சபை தேர்தலும் வடக்கு மாகாண சபை தேர்தலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அதேபோன்று இம்முறை பாராளுமன்ற தேர்தலும் எமக்கு முக்கியத்துவமாகவே அமைந்திருக்கின்றது.

எனது கணிப்பின்படி 2016ம் ஆண்டு முடியும் முன் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்தி எமது மக்கள் போதிய சுயாட்சியைப் பெற்று வடக்கு, கிழக்கு பிராந்தியத்தில் தங்கள் ஆட்சியை நடத்தக்கூடிய நிலைமை ஏற்படவேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்துவோம் என்றும் சம்பந்தன் இந்தக் கூட்டத்தின் போது தெரிவித்திருக்கின்றார்.

இவரது கருத்திலிருந்து பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் ஆணை வழங்கினால் அடுத்த வருடம் தீர்வைக் காண முடியும் என்ற நம்பிக்கை கூட்டமைப்பின் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமை புலனாகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்க காலத்தில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பலியிடப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்ததுடன் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல்போயினர். பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். இவ்வாறு தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தனர்.

இவ்வாறு சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த அன்றைய அரசாங்கமானது அரசியல் தீர்வு தொடர்பில் உரிய நடவடிக்கையினை எடுக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டிய நிலை மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களுக்கு ஏற்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரது ஆட்சிக் காலத்தில் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக் காலத்திலும் விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதுடன் சமஷ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கலை நிறுவுவதற்கான ஒஸ்லோ பிரகடனமும் வெளியிடப்பட்டிருந்தது. அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் சமஷ்டி தீர்வுக்கு இணங்கியிருந்தனர்.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையினால் மீண்டும் யுத்த சூழல் ஏற்பட்டு சமாதான முயற்சிகள் மழுங்கடிக்கப்பட்டன. கடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்க காலத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது என்று அரசாங்கத் தரப்பினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

புலிகள் தோற்கடிக்கப்பட்டமையினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இனிமேல் தீர்வு தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே முன்னாள் ஆட்சியாளர்கள் இருந்தனர்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் 2011ம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத் தரப்பினர் சுமார் ஒரு வருடம் பல சுற்றுப்பேச்சுக்களில ஈடுபட்டனர்.

இதன்போது இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றினையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத் தரப்பிடம் வழங்கியிருந்தது. ஆனாலும் இந்த விடயத்துக்குக் கூட பதில் எதுவும் கூறாது 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசாங்கமானது பேச்சுவார்த்தையிலிருந்து விலகியது. இதன் பின்னர் அரசியல் தீர்வு குறித்த பேச்சுக்களே இடம்பெறவில்லை.

ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றது. எதிரணி வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருந்தது.

இந்த ஆதரவு வழங்கும் முடிவு எடுப்பதற்கு முன்னர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை கூட்டமைப்பினர் சந்தித்து பேசியிருந்தனர்.

இதன்போது தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

புதிய ஆட்சி ஏற்பட்டதையடுத்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கிணங்க 100 நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டத்துக்குள் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அமைக்கப்படும் புதிய அரசாங்கம் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசியிருந்தனர்.

இதன்போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் எவ்வாறு கொள்கை வகுப்பது என்பது குறித்து ஆராயப்பட்டதாக கூட்டமைப்புத் தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான ஒரு நிலையில்தான் வடக்கு, கிழக்கில் மக்கள் இந்தத் தேர்தலில் தமக்கு ஆணை வழங்கினால் 2016ம் ஆண்டு முடிவுக்குள் உரிய அரசியல் தீர்வு காணப்படும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார்.

பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அமைக்கப்படுமானால் கூட்டமைப்பின் தலைவர் கூறுவதுபோல் இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமானதாக அமையலாம்.

ஆனால் முடிவுகளில் மாற்றம் ஏற்படுமானால் அரசியல் தீர்வு என்பது கானல்நீராகவே மாறும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பதில் தமிழ் மக்களின் தலைமைகளுக்கிடையில் ஓர் இணக்கப்பாடு ஏற்படவேண்டும்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்திருக்கிறார்.

இவர் அமெரிக்காவில் உரையாற்றும்போது இனப்படுகொலையின் பாதிப்பிலிருந்து மீட்சி பெறுவதற்கான ஒரே வழியாக வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு பரந்துபட்ட சுயாட்சியே தேவைப்படுகின்றது. எமது தனித்துவமான அடையாளம் மற்றும் பாரம்பரிய காணிகளின் அடிப்படையில் நாங்கள் பரந்துபட்ட பிராந்திய அதிகாரங்களை கேட்கிறோம். பிரிக்கப்படாத இலங்கைக்குள் அவை வழங்கப்பட வேண்டும். எமது மிகவும் நியாயபூர்வமான கோரிக்கைகளைக்கூட தெற்கு தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றது என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.

இணைந்த வடக்கு, கிழக்கில் சுயாட்சியே தமிழ் மக்களுக்கு தீர்வாக அமைய வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகவும் உள்ளது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் அதே கருத்தையே வலியுறுத்தியிருந்தார்.

எனவே இந்த விடயத்தில் தமிழ்த் தலைமை கள் ஒன்றுபட்டு அடுத்த வருடத்திலாவது தீர்வைக் காண முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

SHARE