‘இறுதிப் போரில் எனக்கு வீரச்சாவு வந்தாலும் அது என் மண்ணில், என் மக்களுடன்தான்’-தலைவர் பிரபாகரன்

881

 

prabakaran

கலங்க வைத்த கடைசி உரை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் தனது தளபதிகளை எப்போதும் மக்களோடு மக்களாக அவர் இருக்கச் செய்திருந்தார்.

தான் சொல்ல விரும்பும் கருத்துகளை, செய்திகளை அந்தத் தளபதிகள் மூலமாக மக்களிடம் உடனுக்குடன் அவர் சேர்த்து வந்தார்.

ஆனால், 2007-ல் நான்காம் கட்ட ஈழப் போர் தொடங்கியபோது… கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு என வரிசையாக வீழ்ச்சி ஏற்பட… புலிகளின் தளபதிகளைக்கூட மக்களால் சரிவர சந்திக்க முடியாத நிலை உண்டானது. இருந்தாலும், பிரபாகரன் தங்களைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில்தான் மொத்த மக்களும் புலிகள் பின்னால் தொடர்ந்து அணிவகுத்திருந்தனர்.

2009 மார்ச் இல் மிகவும் உக்கிரமாக இறுதிக் கட்டப் போர் தொடங்கியபோது, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முள்ளிவாய்க்கால் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் மட்டும் இரண்டரை லட்சம் மக்கள் இருந்தனர். இடைவிடாத போரினால், நம்பிக்கை இழந்திருந்தனர் மக்கள்.  இக்கட்டான அந்தத் தருணத்திலும் – நீண்ட இடைவெளிக்குப் பின் – சில மக்களையும் தளபதிகளையும் சந்தித்திருக்கிறார் பிரபாகரன்.

இலங்கை மண்ணிலிருந்து வெளியேறி வேற்று நாட்டில் அடைக்கலம் புகுந்துவிட்ட விடுதலைப் புலி  உறுப்பினர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு  இந்திய ஊடகம் ஒன்றுக்கு அது தொடர்பில் 2009 இல் பகிர்ந்துகொண்டார் –

”கடந்த ஏப்ரல் மாதக் கடைசியில்  முள்ளிவாய்க்காலை ஒட்டியிருந்த ஒரு மருத்துவமனைப் பக்கம் தேசியத் தலைவர் பிரபாகரன் எங்களைச் சந்திக்கப் போறதா ராத்திரியில வந்து புலிகள் சொன்னாங்க.

விடியுற நேரத்துல தேசியத் தலைவர் தன் மகன் சார்லஸ் ஆன்டனியோட வந்து சந்தித்தார்.

‘இப்படியொரு இக்கட்டான நிலையில் மக்களைத் தவிக்கவிட்டதுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என எடுத்த எடுப்பிலேயே கலங்கினார். ‘இந்தப் போர் இப்போதைக்கு நமக்கு எதிராக முடிவுற்றாலும், அடுத்த 20 வருடங்களுக்கு இயக்கம் செல்ல வேண்டிய பாதை தெளிவாகவே இருக்கு. அதனால், இப்போதிருப்பதைவிடப் பல மடங்கு வேகத்தோடு போராடப் போகிறோம்.  தளபதிகள் நீங்களும் மக்களும் என்னுடன் இருந்தால், இதைவிடப் பெரிய போராட்டங்களை என்னால் நடத்த இயலும்’ என தலைவர் தெரிவித்தார்.

போர் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருந்ததால், அப்ப எங்கள்  மக்களுக்கு சாப்பாடுகூடக் கிடைக்காமலிருந்தது. அதைத் தலைவர் கிட்ட சொன்னதும்,  ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நாளைக்கு ஒரு கிலோ அரிசியும், அரை கிலோ மீனும் தரும்படி தன் தளபதிகளுக்கு உத்தரவு போட்டார்.

இறுதியா கிளம்பும்போது எங்க மக்களில் சிலர, ‘சூழலை மனதில் வைத்து தலைவர் வெளியில் போயிடணும். போரை வேறு வாய்ப்பான தருணத்தில் தொடரலாம்’ என சொன்னாங்க. தலைவர் அதை ஏற்கவில்லை.

‘இறுதிப் போரில் எனக்கு வீரச்சாவு வந்தாலும் அது என் மண்ணில், என் மக்களுடன்தான்’ என உறுதியா சொல்லிவிட்டுக் கிளம்பிட்டார். எங்களது கண்கள் குளமாகின. இப்போது தலைவரைப் பற்றி மாறுபட்ட செய்திகள் வந்துகொண்டிருந்தாலும்… அவருடைய அந்த இறுதி உரை இப்போ நினைத்தாலும் எங்களைக் கலங்கடிக்கிறது…”

SHARE