வீழ்ந்துள்ள இந்நாட்டை மீட்பதற்கு நாட்டிற்கு டொலர்கள் தேவைப்படுவதாகவும், அதற்கு வலுவான நிலையான வேலைத்திட்டம் தேவை எனவும், அரசாங்கத்தில் உள்ள சிலர் டொலர்களை கேட்டு உலகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் அவை கிடைத்தபாடில்லை எனவும், நம்பிக்கையீனமே இதற்கு காரணமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாட்டிற்கு டொலர்களை கொண்டு வரக்கூடிய குழு ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பதாகவும், 74 வருட வரலாற்றில் எந்தவொரு எதிர்க்கட்சியும் நிறைவேற்றாத பணியை ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாகவும், இதன் மூலம் தமக்குள் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற வேட்கை இருப்பது தெளிவாக புலப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வாயாடல்களால் அல்லது விமர்சனங்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர், சில வங்குரோத்து குழுக்கள் பாடசாலைகளுக்குப் பேருந்து வழங்குவதைக் கூட விமர்சிக்கும் கீழ்தரநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இது பாடசாலைக் கல்வியை வலுப்படுத்தி கல்வியை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையொன்றாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
#SriLankaFirst என்ற தொலைநோக்கின் மூலம் எமது நாட்டை உலகில் முதலிடத்திற்கு கொண்டு வருவதே தமது அணியினரின் ஒரே நோக்கமாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வாயாடல்காரர்களின் ஏமாற்று வேலைகளைக் கண்டு ஏமாற வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார்.
´பிரபஞ்சம்´ வேலைத்திட்டத்தின் கீழ் 64 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம் (5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்று மொரவக கீர்த்தி அபேவிக்ரம கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ அவர்களால் (05) அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். – ada derana