இலங்கைப் போர்க் குற்றம்! போலி அறிக்கை வெளியிட திட்டம்போடும் மஹிந்த!

328
இலங்கை மீதான போர் குற்றச்சாட்டு தொடர்பில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஒப்பான போலி அறிக்கையினை தயாரித்து வெளியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நெருங்கிய குழுவொன்று செயற்பட்டு வருவதாக புலனாய்வுத் துறையினர் அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொதுத் தேர்தல் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளதால் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இந்த அறிக்கையினை வெளியிட இக்குழு தீர்மானித்துள்ளது.

அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட இராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையில் உயர் பதவி வகிக்கும் சுமார் 50 இற்கும் அதிகமானவர்களின் பெயர்களை போர்க் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்படவுள்ள திட்டமும் இதன்மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.சிங்கள பெளத்தர்களை இலக்காக கொண்டு தேர்தல் பிரச்சாரம் நடத்தி வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இனவாதத்தை தூண்டிவிடும் அடிப்படையிலேயே மேற்படி போலி ஆவணங்களை தயாரித்து வருகிறார்.

குருநாகல் மாவட்டத்திலேயே பெருமளவிலான இராணுவ அதிகாரிகள் குடியமர்த்தப்பட்டனர். மேற்படி போலி அறிக்கையை இவர்களுக்கு காட்டுவதன் மூலம் இனவாதத்தை தூண்டி அனுதாபம் மூலம் வாக்குகளை சேகரிப்பதுவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் திட்டமாகுமென் றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தனர்.இதே பாணியில் இக்குழுவினர் தமிழ், முஸ்லிம் இனங்களிடையே எதிர்ப்பை உருவாக்கும் வகையில், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் வலயம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக போலி பிரச்சாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது என கொழும்புச் செய்திகள் தெரிவித்துள்ளன.

SHARE