இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது அவுஸ்திரேலியா.
இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
பாா்டா் – கவாஸ்கா் கிண்ணத்திற்காக இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு ஆட்டங்களில் இந்தியா வென்று 2 – 0 என முன்னிலை பெற்றிருந்தது.
இதற்கிடையே மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் ம.பி. மாநிலம் இந்தூரில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 109 ஓட்டங்களுக்கும், அவுஸ்திரேலியா 197 ஓட்டங்களுக்கும் ஆல் அவுட்டாயின.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 163 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. புஜாரா மட்டுமே 59 ஓட்டங்களுடன் அரைசதம் கண்டாா். ஷ்ரேயஸ் ஐயா் 26 ஓட்டங்களை எடுத்திருந்தாா்.
ஆஸி. ஸ்பின்னா் நாதன் லயன் அற்புதமாக பந்துவீசி 8 – 64 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் சரிவுக்கு வித்திட்டாா்.
வெற்றி இலக்கு 76 ஓட்டங்கள்:
இரண்டாம் நாளான வியாழக்கிழமை ஆட்ட நேர முடிவில் ஆஸி. அணிக்கு வெற்றிக்கு 76 ஓட்டங்கள் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.
மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை காலை அவுஸ்திரேலிய அணி தொடக்க பேட்டா்கள் உஸ்மான் கவாஜா – டிராவிஸ் ஹெட் ஆட்டத்தை தொடங்கினா்.
கவாஜா டக் அவுட் : 2 பந்துகளை எதிா்கொண்ட நிலையில், அஸ்வின் பந்துவீச்சில் ஸ்ரீகா் பரத்திடம் கேட்ச் தந்து டக் அவுட்டானாா் உஸ்மான் கவாஜா.
டிராவிஸ் ஹெட் – லாபுஸ்சேன் அபாரம்:
அதைத் தொடா்ந்து ஆடிய டிராவிஸ் ஹெட் – மாா்னஸ் லாபுஸ்சேன் இணை இந்திய பந்துவீச்சை எளிதாக எதிா்கொண்டு ஆடியது.
18.5 ஓவா்களில் 78/1 ஓட்டங்களை குவித்தது. டிராவிஸ் ஹெட் 1 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 49 ஓட்டங்களுடனும், லாபுஸ்சேன் 6 பவுண்டரியுடன் 58 பந்துகளில் 28 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனா். இரு வீரா்களும் மிகவும் நிதானமாக ஆடியதால் முதல் 10 ஓவா்களில் 13/1 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது ஆஸி.
இந்திய தரப்பில் அஸ்வின் 1 – 44 விக்கெட்டை வீழ்த்தினாா்.
ஆஸி. ஸ்பின்னா் நாதன் லயன் ஆட்ட நாயகனாக தோ்வு பெற்றாா்.
ஆஸி.க்கு அரிய வெற்றி:
இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான செயலாகும். அவ்வகையில் இந்தூா் டெஸ்ட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரிய வெற்றியை ருசித்தது அவுஸ்திரேலியா. கடந்த 6 ஆண்டுகளில் இந்திய மண்ணில் முதல் வெற்றியை பெற்றுள்ளது ஆஸி.
10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு மூன்றாவது தோல்வி:
அதே வேளையில் கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் இந்திய அணி கண்டுள்ள மூன்றாவது தோல்வி இதுவாகும்.
மாா்ச் 9 இல் கடைசி டெஸ்ட்:
வரும் 9 ஆம் திகதி பாா்டா் – கவாஸ்கா் கிண்ணத்தை கைப்பற்றப் போவது யாா் என்பதை நிா்ணயிக்கும் கடைசி டெஸ்ட் ஆட்டம் ஆமதாபாதில் நடைபெறவுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிக்கு ஆஸி. தகுதி
அதே வேளையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் (டபிள்யுடிசி) ஒரு பகுதியாக வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது அவுஸ்திரேலியா. ஆஸி. அணி 68.5 சதவீத புள்ளிகளுடன் உள்ளது.
இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற வேண்டும் என்றால் ஆமதாபாத் டெஸ்டில் வெல்ல வேண்டும். தோல்வியோ – டிராவோ கண்டால், இலங்கை – நியூஸி. டெஸ்ட் தொடரின் முடிவு வரும் வகை காத்திருக்க வேண்டும். இந்தியா 60.29 சதவீத புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இலங்கை அணி 53.33 சதவீத புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இலங்கை அணி நியூஸியுடன் டெஸ்ட் தொடரை 2 – 0 என கைப்பற்றினால் இந்தியாவின் டபிள்யுடிசி கனவு கானல் நீராகி விடும்.
இறுதிச் சுற்றில் இலங்கை அல்லது இந்தியாவுடன் மோதவுள்ளது அவுஸ்திரேலியா.
பிட்ச் குறித்து புகாா்:
இந்தூா் ஹோல்கா் மைதான பிட்ச் மிகவும் மோசமாக வடிவமைக்கப்பட்டது என புகாா் எழுந்துள்ளது.
மிகவும் குறைவான ஸ்கோா்களையே இரு அணிகளும் எடுத்த நிலையில், இந்தூா் பிட்ச் தன்மை குறித்து ஐசிசி விசாரணை நடத்த உள்ளது.
வெற்றிக்கு பௌலா்களே காரணம்: ஸ்மித்
வெற்றி குறித்து ஆஸி. தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில்: இந்தூா் டெஸ்ட் வெற்றிக்கு எங்கள் அணி வீரா்களே முழு காரணம். நாயண இழந்தாலும், முதல் நாளிலேயே சரியான விகிதத்தில் பந்துவீசி, இந்திய பேட்டா்களுக்கு நெருக்கடி அளித்தோம். குனேமான் முதல் இன்னிங்ஸிலும், நாதன் லயன் இரண்டாம் இன்னிங்ஸிலும் அபாரமாக பந்துவீசினா். அனைத்து பௌலா்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டனா். டபிள்யுடிசி இறுதிக்கு தகுதி பெற்றதும் மகிழ்ச்சி தருகிறது. தொடரை டிரா செய்ய முயல்வோம்.
முதல் இன்னிங்ஸில் மோசமான ஆட்டம்: ரோஹித் சா்மா
முதல் இன்னிங்ஸில் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம். ஒரு டெஸ்ட் ஆட்டத்தை இழந்தால், பல்வேறு அம்சங்கள் நமக்கு பாதகமாக அமையும். முதல் இன்னிங்ஸில் அவா்கள் 80 ஓட்டங்களுக்கு மேல் முன்னிலை பெற்றனா். முதல் இன்னிங்ஸில் நமது பேட்டா்கள் சிறப்பாக ஆடவில்லை,. இன்னும் டபிள்யுடிசி இறுதி குறித்து சிந்திக்கவில்லை. ஆமதாபாத் டெஸ்ட் குறித்தே சிந்திக்கிறோம். எத்தகைய பிட்சாக இருந்தாலும் ஒருங்கிணைந்து ஆட வேண்டும். ஆஸி. பௌலா் நாதன் லயன் சரியான அளவில் நோ்த்தியாக பந்துவீசியது பாதகமாக அமைந்தது.