அன்பு இல்லம் என்ற பெயரில் 5 பேருக்கு வீடு கட்டி கொடுத்த ரசிகர்கள்

145

நடிகர் ரஜினிகாந்த் 47 ஆண்டாக கலைத்துறையில் சேவையாற்றி தமிழக மக்களை மகிழ்வித்து வருவதற்காகவும், இந்திய அரசின் திரைத்துறை சார்ந்த உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காகவும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சென்னை, நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் மாதம் 26-ந் திகதி பாராட்டு விழாவும், நலிந்த ரசிகர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையும் நடத்த திட்டமிட்டு அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நிகழ்ச்சி திடீரென தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் செயலாளருமான சோளிங்கர் என்.ரவி அப்போது வெளியிட்ட அறிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் அவர்களிடத்தில் நேரில் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

அதனடிப்படையில் ரசிகர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளுள் ரஜினிகாந்த் அன்பு இல்லம் எனும் பெயரில் கான்கிரீட் தளத்துடன் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 5 பேருக்கு இந்த வீடு வழங்கப்பட்டுள்ளது. நேற்று கிரகப்பிரவேஷம் செய்து அதற்கான சாவியை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தவர்களுக்கு பங்க் அமைத்து கொடுத்துள்ளனர்.

கணவனால் கைவிடப்பட்டு வருவாய் இன்றி தவித்து வந்த பெண்களுக்கு வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்ட ஊதுவத்தி தயாரிக்கும் எந்திரம், 2 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இட்லி மாவு அரைக்கும் எந்திரம், தையல் எந்திரம் 5 பேருக்கும், மேற்படிப்பு படிக்க இயலாமல் தவித்து வந்த 15 மாணவர்களுக்கு முழு கல்விக்கான நிதியும், உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியும், ஏழ்மையில் தவித்து வந்த குடும்ப தலைவிகளுக்கு குடிசை தொழில் தொடங்க நிதியும், மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு 3 சக்கர மோட்டார் வாகனங்களும் வழங்கப்பட்டது.

2 பேருக்கு கறவை மாடுகள் வழங்கினர். நலத்திட்ட உதவிகள் பெற்றுக்கொண்ட பயனாளிகள் நடிகர் ரஜினிகாந்த்துக்கு நன்றியை தெரிவித்து ஒருமுறையாவது தங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்குமாறு மிகுந்த உருக்கத்துடன் கேட்டுக் கொண்டனர்.

maalaimalar

 

SHARE