லீட்ஸ் யுனைடெட்டை வீழ்த்தியது லிவர்பூல்

168

இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் 6 – 1 என்ற கோல் கணக்கில் லீட்ஸ் யுனைடெட் அணியை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. இப்போட்டியில் கடைசியாக கடந்த மார்ச் 5 ஆம் திகதி மான்செஸ்டர் யுனைடெட்ட அணியை 7 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிறகு இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடிய லிவர்பூல், அதில் எதிலுமே வெற்றி காணவில்லை. அவற்றில் 3 தோல்வி, 2 டிராக்களை பதிவு செய்திருந்த லிவர்பூல் அணிக்கு இதுவே முதல் வெற்றியாகும்.

இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக கோடி கப்கோ (35′), முகமது சலா (39′, 64′), டியோகோ ஜோடா (52′, 73′), டார்வின் நுனெஸ் (90′) ஆகியோர் கோலடித்தனர். லீட்ஸ் யுனைடெட்டுக்காக லூயிஸ் சினிஸ்டெரா (47′) ஸ்கோர் செய்தார். புள்ளிகள் பட்டியலில் லிவர்பூல் இத்துடன் 30 ஆட்டங்களில் 13 வெற்றிகளுடன் 8-ஆவது இடத்தில் இருக்க, லீட்ஸ் யுனைடெட் 31 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் 16 ஆவது இடத்தில் உள்ளது. ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் மால்லோர்கா 1 – 0 என்ற கோல் கணக்கில் செல்டா விகோவை வென்றது. அந்த அணிக்காக அமத் டியாயே (21′) ஸ்கோர் செய்தார். புள்ளிகள் பட்டியலில் தற்போது மல்லோர்கா 29 ஆட்டங்களில் 10 வெற்றிகளுடன் 11 ஆவது இடத்திலும், செல்டா விகோ 9 வெற்றிகளுடன் 12 ஆவது இடத்திலும் உள்ளன.

இப்போட்டியில் இதுவரை லிட்ஸ் யுனைடெட்டுக்கு எதிராக விளையாடிய அணிகள் மொத்தமாக 60 கோல்கள் அடித்துள்ளன. வேறெந்த அணிக்கு எதிராகவும் இத்தனை கோல்கள் அடிக்கப்படவில்லை. முந்தைய ஆட்டத்தில் கிரிஸ்டல் பேலஸூடன் 1 – 5 என்ற கோல் கணக்கில் தோற்ற லீட்ஸ் யுனெடெட், இந்த ஆட்டத்தில் 6 – 1 என தோற்றிருக்கிறது. போட்டி வரலாற்றில் இவ்வாறு அடுத்தடுத்த ஆட்டங்களில் 5 கோல்கள் விட்டுக் கொடுத்து அந்த அணி தோல்வி கண்டது இதுவே முதல் முறையாகும். இந்த ஆட்டத்தின் மூலம் பிரீமியர் லீக் போட்டியில் அந்நிய மண்ணில் 250 வெற்றிகளை பதிவு செய்த 4 ஆவது அணியாகியிருக்கிறது லிவர்பூல். அந்த அணி தனது 592 ஆவது ஆட்டத்தில் இந்த மைல் கல்லை எட்டியிருக்கிறது. முன்னதாக மான்செஸ்டர் யுனைடெட் (470 ஆட்டங்கள்), செல்சி (554), ஆர்செனல் (573) அணிகள் அந்த மைல் கல்லை எட்டியுள்ளன.

SHARE