
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியால் ஐ.சி.சி. போட்டிகளில் கிண்ணத்தை வெல்ல முடியவில்லை. இந்த தோல்வியால் இந்திய அணி தலைவர் ரோகித் சர்மா கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். 11 பேர் கொண்ட அணியில் அஸ்வினை சேர்க்காதது மற்றும் இந்திய வீரர்கள் செயல்பாடு போன்றவற்றால் அவரும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார்கள்.
இந்திய அணி அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியுடன் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, ஐந்து 20 இருபதுக்கு இருபது ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான பயணத்துக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் தொடரில் அவரது செயல்பாட்டை பொறுத்து அணி தலைவர் பதவி நிர்ணயிக்கப்படும். இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரிய நிர்வாகி தெரிவிக்கையில் – அணி தலைவர் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்படுவார் என்பது ஆதாரமற்றது.
ஐ.சி.சி.யின் 3 வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 ஆம் ஆண்டில் முடிவடையும் போது அவருக்கு கிட்டத்தட்ட 38 வயதாகிவிடும். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2 வருட சுழற்சி முழுவதிலும் ரோகித் சர்மா அணி தலைவர் பதவியில் நீடிப்பாரா? என்பது ஒரு பெரிய கேள்வியாகவே உள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டியில் அவரது துடுப்பாட்டத்தை தேர்வுக் குழு கண்காணிக்கும் என்று நம்புகிறேன். மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும்.
அதன் பிறகு டிசம்பர் இறுதி வரை டெஸ்ட் இல்லை. எனவே தேர்வுக் குழுவினர் ஆலோசித்து முடிவு எடுக்க அவகாசம் உள்ளது. இவ்வாறு அந்த நிர்வாகி கூறியுள்ளார்.
ரோகித் சர்மா 7 டெஸ்டுக்கு அணி தலைவராக இருந்து 4 இல் வெற்றி பெற்றுள்ளார். 2 டெஸ்டில் தோல்வி ஏற்பட்டது. ஒரு டெஸ்ட் சமநிலையானது.
36 வயதாகும் ரோகித் சர்மாவின் துடுப்பாட்டம் மிகவும் மோசமாக இருக்கிறது. அவுஸ்திரேலியாவிடம் எதிரான நாக்பூா் டெஸ்டில் சதம் அடித்த பிறகு அவர் மிகப் பெரிய ஓட்டங்களை எடுக்கவில்லை. அணி தலைவர் பதவியில் 7 டெஸ்டில் 390 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சராசரி 35.45 ஆகும். கடந்த 11 தொடர்களில் அவர் 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தது இல்லை.