வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ்வதே இரு சமூகங்களின் இருப்புக்கும் நல்லது. ஒரு சமூகத்தை பகைத்துக் கொண்டு இன்னொரு சமூகத்தால் வாழ முடியாது என்ற யதார்த்தத்தையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த ஒற்றுமையின் பெயரால் ஒரு இனத்தை இன்னொரு இனம் அழிக்கும் சம்பவங்களைத் தான் கடந்த காலங்களில் காணமுடிகிறது.
மட்டக்களப்பில் ஹிஸ்புல்லா எப்படி தமிழர்களின் காணிகளை சைவக்கோவில்களின் காணிகளை அபகரித்து பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு கொடுத்து அதில் முஸ்லீம்கள் இறைச்சிகடைகளையும் பள்ளிவாசல்களையும் தமக்கான வேறு அலுவலகங்களையும் அமைத்தாரோ அதேபோலத்தான் வடக்கில் அமைச்சராக இருந்த றிசாத் பதியுதீன் தமிழர்களின் காணிகளை அபகரித்து தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வீடமைப்பு திட்டங்கங்களை முஸ்லீம்களுக்கு வழங்கி தமிழ் இனத்தை அழிக்கும் வேலைகளில் ஈடுபட்டார்.
ஹிஸ்புல்லா எவ்வாறு அமைச்சு பதவியை வைத்துக்கொண்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் என்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு தமிழர்களின் காணிகளை பறித்தெடுத்தாரோ சைவக்கோவில்களை இடித்தழித்து அதனை பள்ளிவாசலுக்கு வழங்கினாரோ அதே வேலைகளைத்தான் றிசாத் பதியுதீனும் வடக்கில் செய்தார்.
இவர்கள் இருவரும் தமிழர்களின் வாக்கை பெற்றே நாடாளுமன்ற உறுப்பினர்களானார்கள். இந்த தேர்தலிலும் ஹிஸ்புல்லாவும் றிசாத் பதியுதீனும் தமிழர்களின் வாக்கை பெற்றே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டால் அது ஹிஸ்புல்லாவாகத்தான் இருக்கும். மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டால் கூட அவர்கள் மூவரும் முஸ்லீம்களாகவே இருப்பார்கள். அக்கட்சியில் போட்டியிடும் ஐந்து தமிழர்களும் பெற்றுக்கொடுக்கும் வாக்குகள் மூலம் ஹிஸ்புல்லாவும் அவருடன் சேர்ந்த மேலும் இரு முஸ்லீம்களுமே நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவார்கள். தமிழர்கள் எவரும் தெரிவாவதற்கான வாய்ப்பே இல்லை.
தமிழர்களின் வாக்கைப்பெற்று அதிகாரத்திற்கு வரப்போகும் ஹிஸ்புல்லா அண்மையில் பேசிய பேச்சு ஒன்றின் ஒளிநாடா சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
அந்த ஒளிநாடாவில் ஓட்டமாவடி காளிஅம்மன் ஆலயத்தின் காணியை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி தானே சுவீகரித்து அதனை ஓட்டமாவடி பள்ளிவாசலுக்கு வழங்கியதாகவும் அந்த நிலத்தில் இறைச்சிகடை உட்பட சந்தை கட்டிடத்தை அமைப்பதற்கு தானே நிதியை ஒதுக்கியதாகவும் கூறியிருந்தார். அதேபோல வாழைச்சேனை இந்து மயான காணியை சுவீகரித்து அதில் முஸ்லீம் பிரதேச செயலக கட்டிடத்தை கட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.
1990ஆம் ஆண்டு தமிழ் கிராமங்கள் மீது முஸ்லீம்கள் தாக்குதல்களை நடத்தினர். அக்காலப்பகுதியில் ஓட்டமாவடி பிரதான வீதியில் இருந்த பிரசித்தி பெற்ற காளிஅம்மன் ஆலயத்தையும் இடித்து தரைமட்டமாக்கினர். இந்த நிலத்தை அப்படியே விட்டால் தமிழர்கள் அதில் மீண்டும் தமது ஆலயத்தை கட்டிவிடுவார்கள் என்பதால் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக இருந்த ஹிஸ்புல்லா அந்நிலத்தை சுவீகரித்து ஓட்டமாவடி பள்ளிவாசலுக்கு கொடுத்தார். ஓட்டமாவடி பள்ளிவாசல் நிர்வாகம் ஆலயம் இருந்த இடத்தில் இறைச்சி கடை உட்பட சந்தை கட்டிடத்தை தற்போது அமைத்துள்ளார்கள். அதற்கான நிதியை ஒதுக்கியவரும் ஹிஸ்புல்லாதான்.
இந்த ஆலய காணியை தானே சுவீகரித்து பள்ளிவாசலுக்கு வழங்கியதாக அவர் தன் வாயால் கூறிய விடயம்; இது. தமிழர்களை அழிப்பதற்கும் தமிழ் நிலங்களை அபகரிப்பதற்கும் ஹிஸ்புல்லா மற்றும் அமிர்அலி போன்றவர்கள் இது போன்று செய்த நூற்றுக்கணக்கான சம்பவங்களை குறிப்பிட முடியும்.
கிழக்கு மாகாணத்தில் 40க்கும் மேற்பட்ட தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டு முஸ்லீம் கிராமங்களாக்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் தமிழ் மக்களின் வாக்குகளினால் அதிகாரத்திற்கு வந்த ஹிஸ்புல்லா போன்றவர்களின் கைங்கரியம் தான்.
இதேபோன்றுதான் வன்னி மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்று அமைச்சரான றிசாத் பதியுதீன் வடமாகாணத்தில் உள்ள தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் எண்ணில் அடங்காதவை.
தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து அந்த நிலங்களில் முஸ்லீம்களையும் சிங்களவர்களையும் குடியேற்றியது, தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வீடமைப்பு திட்டம், அரச நியமனங்கள் என அத்தனையையும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பறித்து கொண்டமை, வடமாகாண ஆளுநர் சந்திரசிறியுடன் சேர்ந்து தமிழ் மக்களை எந்த வழிகளில் எல்லாம் அழிக்கலாமோ அடக்கலாமோ அந்த வழிகளை எல்லாம் தேடி தேடி தமிழ் மக்களின் வாழ்வில் மண்ணைப் போட்டார்.
அரச அலுவலகங்களில் மட்டுமல்ல நீதிமன்றத்தின் மீது கூட அச்சுறுத்தல் விடுத்தார். மன்னார் நீதவானை அச்சுறுத்தியதாக இவர் மீது நீதிமன்றில் வழக்கு கூட தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வடக்கில் உள்ள வளங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் பளை அபிவிருத்தி சபையின் அதிகாரத்தை தனது அமைச்சின் கீழ் கொண்டு வந்து திக்கம் வடிசாலையின் அபிவிருத்தி பணிகளை முற்றாக முடக்கி வைத்தார்.
இவரை வெல்ல வைப்பதற்காகதான் தற்போது வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சில தமிழர்களும் போட்டியிடுகின்றனர்.
மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அவர்களுக்கு கொலை அச்சுறுத்தலை விடுத்த அமைச்சர் றிசாத் பதியுதீனின் வெற்றிக்காக மன்னாரில் ஒரு கத்தோலிக்க வணபிதாவும் தேர்தல் பிரசாரம் செய்வதாகவும் சில தமிழ் மக்கள் வேதனைப்படுகின்றனர்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் மன்னார் முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களில் எங்கெல்லாம் காணிகளை அபகரித்தார் என்பதற்கு ஆதாரமாக பின்வரும் விடயங்களை குறிப்பிடலாம்.
• மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களுக்குச் சொந்தமான 18 ஆயிரம் ஏக்கர் காடுகளை சட்டத்தை மீறி வெட்டி அபகரித்துள்ளதாக ரிஷாத் பதியுதீன் மீது, சுற்றுச் சூழல் சங்கங்கள் நான்கினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த காணிகளில் புத்தளத்தை சேர்ந்த முஸ்லீம்களை குடியேற்றி வருகிறார். வன்னி மாவட்டத்தில் முஸ்லீம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக புத்தளம் மாவட்டத்தில் பூர்வீகமாக வசித்து வருபவர்களை வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்ற போர்வையில் அழைத்து வந்து இக்காணிகளில் குடியேற்றி வருகிறார். சுற்றுச் சூழல் நீதிக்கான மையம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை, இலங்கை சுற்றுச் சூழல் காங்கிரஸ், இயற்கைக்கான பௌத்த அமைப்பு ஆகியன ரிஷாத் மீது குற்றம்சாட்டியுள்ளன.
பெரியமடு, கல்லாறு, கருங்காலிபுரம் ஆகிய இடங்களில் காடுகள் அழிக்கப்பட்டதாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை பணிப்பாளர் சஞ்ஜீவ சணிகர சுட்டிக்காட்டினார்.
இந்திய வீட்டு திட்டத்தில் றிசாத்தின் மோசடி
இந்திய வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தது.
பயனாளிகள் தெரிவு நடத்தப்பட்டு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் தலையீட்டினால் பயனாளிகளின் பட்டியல் திருத்தப்பட்டு பல்வேறு குழறுபடிகளை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு குற்றம் சாட்டியிருந்தது.
அமைச்சர் ரிசாத் பதியுதீனின் திட்டத்திற்கு அமைய வனப்பகுதி அழிக்கப்பட்டு வருவதாக சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு அமைச்சு தெரிவித்துள்ளது. மன்னாரில் 1080 ஏக்கர், முல்லைத்தீவில் 983 ஏக்கர், வவுனியாவில் 325 ஏக்கர் வனப்பகுதி முஸ்லீம்களை குடியேற்றுவதற்காக அழிக்கப்பட்டு வருகிறது.
மன்னாரில் மீனவர் பிரச்சினை தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவை மாற்றுமாறு மன்னார் நீதவானை அச்சுறுத்திய வழக்கு ஆளும் கட்சியில் மகிந்த ராசபக்சவின் செல்வாக்கை பயன்படுத்தி மன்னிப்பு கோரி தப்பித்து கொண்டார். நீதிமன்றத்திற்கு கல் எறிந்த வழக்கிலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் குற்றம் சாட்டப்பட்டிந்தார்.
தமிழர்களுக்கு எதிராக அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்த கொடுமைகளில் மற்றொன்று பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களுக்கு இந்தியா வழங்கிய ஒரு தொகுதி படகுகள் இயந்திரங்கள் வலைகளை பறித்தெடுத்ததாகும்.
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு என இந்தியா வன்னி மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு ஒரு தொகுதி படகுகள், இயந்திரங்கள், வலைகளை வழங்கியது. இதில் 175படகுகள், அவைகளுக்குரிய 15குதிரை வலுகொண்ட இயந்திரங்கள், வலைகள் ஆகியன வழங்கப்பட்டன. இவை ஒவ்வொன்றும் 6இலட்சம் பெறுமதியானவையாகும்.
ஒருபடகு இயந்திரம் வலை அடங்கிய தொகுதி இரு மீனவர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் படி 350 மீனவர்களுக்கு இவை வழங்கப்பட்டன. இந்திய தூதரகம் இவற்றை கடற்தொழில் அமைச்சுக்கே வழங்கியது. அவர்களே பயனாளிகளை தெரிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் மற்றும் அமைச்சர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களுக்கு என வழங்கப்பட்ட இந்த உதவியை பறித்தெடுத்து முஸ்லீம்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கினார்.
றிசாத் பதியுதீன் தெரிவு செய்த 350 பயனாளிகளில் 326பேர் முஸ்லீம்கள், 34பேர் மட்டும் தமிழர்கள். தெரிவு செய்யப்பட்ட தமிழர்களும் போரினால் பாதிக்கப்பட்டு தமிழ் தொழில் உபகரணங்களை இழந்தவர்கள் என்ற ரீதியில் தெரிவு செய்யப்படவில்லை. முழுக்க முழுக்க அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு பின்னால் திரிபவர்களே இதில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 175படகுகளில் 17படகுகள் மட்டும் தமிழர்களுக்கு வழங்கப்படுகிறது. மிகுதி 158 படகுகள் மற்றும் இயந்திரங்கள் வலைகள் முஸ்லீம்களுக்கே வழங்கப்படுகிறது.
றிசாத் பதியுதீன் தெரிவு செய்தவர்களில் பல முஸ்லீம்கள் மீன்பிடி தொழில் செய்யாதவர்கள் என மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொற்கேணி, அல் ஜசீரா, அகத்திமுறிவு, மன்னார் மாவட்டத்தில் உள்ள மாங்குளம், ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களும் இதில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மீன்பிடித்தொழிலே செய்வதில்லை. கடந்த காலங்களில் இவர்களிடம் மீன்பிடி படகுகளோ வலைகளோ இருந்ததில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த கால யுத்தத்தால் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் மீனவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். போர் இடம்பெற்ற காலத்தில் தமது படகுகளுடன் வங்காலை, மன்னார் பகுதியை சேர்ந்த தமிழ் மீனவர்கள் தமிழகத்திற்கு சென்றிருந்தனர். இவ்வாறு சென்றவர்களில் சுமார் 300படகுகளை தமிழக கரையோர காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர். மீண்டும் அவர்கள் இலங்கைக்கு திரும்பி செல்லும் போது அவற்றை திருப்பி தருவதாக இராமநாதபுரம், மண்டபம் பகுதி ஆட்சியாளர்கள் கடிதங்களையும் வழங்கியிருந்தனர். ஆனால் மன்னார் பகுதி மீனவர்கள் இலங்கைக்கு திரும்பிய போது அவர்களிடம் படகுகள் ஒப்படைக்கப்படவில்லை. அதனை தமிழக மீனவர்களுக்கு வழங்கிவிட்டோம். அதற்கு பதிலாக நஷ்டஈடு தருவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த 300க்கும் மேற்பட்ட மன்னார் தமிழ் மீனவர்கள் தமிழக அரசிடம் தமது படகுகளை இழந்து விட்டு தொழில் செய்ய வழியின்றி தவிக்கும் போது இந்தியா வழங்கிய படகுகள் பாதிக்கப்படாத முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக மன்னார் மீனவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
2006ஆம் ஆண்டு பேசாலையில் கடற்படை மீது விடுதலைப்புலிகள் தாக்குதலை நடத்தியதை அடுத்து 100க்கு மேற்பட்ட வாடிகளும் படகுகளும் வலைகளும் கடற்படையினரால் தீக்கிரையாக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு கூட இந்தியாவினால் வழங்கப்பட்ட படகுகள் வழங்கப்படவில்லை.
அண்மையில் 10ஆயிரம் சைக்கிள்களை இந்தியா வழங்கியிருந்தது. அதுவும் றிசாத் பதியுதீன், மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் சிபார்சு செய்த சிலருக்கும் வடமாகாண ஆளுநர் சிபார்சு செய்த வெலிஓயா போன்ற இடங்களில் உள்ள சிங்களவர்களுக்குமே வழங்கப்பட்டது.
அது போல முன்றுசக்கர உழவு இயந்திரங்கள் கூட வெலிஓயா மற்றும் வவுனியா தெற்கில் உள்ள சிங்களவர்களுக்கும் இராணுவ தேவைகளுக்குமே வழங்கப்பட்டது.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென வெளிநாடுகளும் சிறிலங்கா அரசாங்கமும் வழங்கும் உதவிகள் 90வீதமானவை வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களை ஊக்குவிப்பதற்கும் முஸ்லீம்களுக்குமே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவினால் வழங்கப்படும் உதவிகளும் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் மட்டுமே கிடைத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்த கொடுமையை செய்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பதை யாரும் மறுக்க முடியாது.
வவுனியா பாரதிபுரம் கிராமம் முழுக்க முழுக்க தமிழர்கள் வாழும் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மக்களை இராணுவத்தினரின் உதவியுடன் வெளியேற்றி விட்டு பாகிஸ்தான் தொழில் அதிபர் ஒருவருக்கு அக்கிராமத்தை வழங்கி அங்கு தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் திட்டமிட்டிருக்கிறார் என்றும் அத்தொழிற்சாலையில் முஸ்லீம்களை குடியேற்றி அங்கு அவர்களை குடியேற்றுவதே அமைச்சர் றிசாத் பதியுதீனின் திட்டமாகும்.
மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பொன்தீவு கண்டல் கிராமத்தில் பாரம்பரியமாக தமிழ் மக்களுக்கு சொந்தமான காணியை முஸ்லீம்களுக்கு பகிர்வது கொடுப்பதற்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தார்.
முள்ளியவளை ஆறாவது மைல்கல் அருகில் 540 ஏக்கர் தேக்கங்காடு உள்ளது. இந்தக் காட்டை முற்றாக அழித்து அந்தப் பகுதியில் தனக்கு ஆதரவான ஆயிரத்து 445 குடும்பங்களைக் குடியேற்றுவதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்.
ஆமைச்சர் றிசாத் பதியுதீன் பற்றி தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் என்ன கருத்தை கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு கடந்த ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமங்க ஆற்றிய உரையை உதாரணமாக கூறலாம். அமைச்சர் றிசாத் பதியுதீனை பார்த்து பின்வருமாறு கூறினார்…..
உங்கள் மதத்துக்கும் உங்கள் மக்களுக்கும் எதிராக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலேயே நான் இங்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் ஓடி ஒளிந்தீர்கள். அவ்வாறு செய்து விட்டு இங்கு வந்து கத்துகிறீர்கள். நியாயத்தின் பக்கமே நான் நிற்பேன். உங்களைப் போன்று நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கவில்லை. என ரணில் கூறினார்.
இலங்கையின் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண மீது கல்கிசை பிரதேசத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
மன்னார் நீதிமன்றத்தை தாக்கி மன்னார் நீதவானை அச்சுறுத்திய அமைச்சர் றிசாத் பதியுதீன் நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளர் மஞ்சுளா திலகரட்னாவை நேரில் சந்தித்து மன்னார் நீதவானை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளர் மஞ்சுளா திலகரத்னா நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசியல்வாதிகள் தலையிட முடியாது என அவரை தனது அலுவலகத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்.
மன்னார் நீதவானுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்தார் என தொடரப்பட்ட வழக்கில் நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளர் மஞ்சுளா திலகரட்னா சமர்ப்பித்திருக்கும் சத்திய கடதாசியும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மன்னார் நீதவானை இடமாற்றுமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் நேரில் வந்து அழுத்தம் கொடுத்தார் என்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் சுதந்திரமான செயற்பாட்டிற்கு இவர் இடையூறு விளைவித்துள்ளார் என்றும் நீதிமன்றிற்கு சமர்ப்பித்துள்ள சத்தியகடதாசியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மஞ்சுளா திலகரட்ணா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலின் பின்னணியில் யார் இருந்திருப்பார்கள் என சொல்லித்தெரியவேண்டியதில்லை. இவ்வாறான ஒருவருக்குதான் இத்தேர்தலில் மன்னாரில் உள்ள தமிழர்கள் ஆதரவு வழங்கி இவரை வெல்ல வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
மட்டக்களப்பில் தமிழர்களின் வாக்குகளை பெற்று தமிழர்களை அழிப்பதற்கு எவ்வாறு ஹிஸ்புல்லா தனது அதிகாரத்தை பயன்படுத்தினாரோ அதேபோல அமைச்சர் றிசாத் பதியுதீனும் வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகள் கொஞ்சம் அல்ல. இதனை தமிழர்கள் சிலர் உணராததேன்?