ஆனந்தசங்கரி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பாரம்பரியமிக்க ஜனநாயகக்கட்சி என்பதை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது! தாங்கள் கடந்த சில காலங்களாக உங்களிஷ்டப்படி தன்னிச்சையாக நடந்து கொள்வது கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களான எமக்கு வேதனையையும் விசனத்தையும் அளிக்கிறது!
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்திற்கான வேட்பாளர் தெரிவுக்கு வலம்புரி பத்திரிகையில் விளம்பரம் செய்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்த நீங்கள் அதன்பின் கட்சியின் உறுப்பினர்களோடு ஏதேனும் ஒரு சந்திப்பை நடத்தாமல் உங்கள் இஷ்டப்படி யாழ்ப்பாணத்திற்கு வெளியே, வடக்கு கிழக்கில் வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களிலும் மத்திய மாகாணத்தில் நுவரெலியாவிலும், மேல் மாகாணத்தில் கொழும்பிலும் போட்டியிடுவதற்கு ஆயத்தமாகியதையும், சிலரது அறிவுறுத்தல்களுக்கு அமைய நுவரெலியாவிலும், திகாமடுல்ல மாவட்டத்திலும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யாது ஏனைய மாவட்டங்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததுடன் தாங்கள் கொழும்பில் எமது கட்சியில் சில சிங்களப் பிரமுகர்களையும் போட்டியிட வைத்துள்ளமை எம் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுபற்றி எவரும் தங்களிடம் முறையிடமாட்டார்கள்! ஏனேனில் உங்களிடம் சிலர் கதைப்பதையோ கருத்துச் சொல்வதையோ விரும்பாது தவிர்ப்பது ஒரு காரணம்! சிலர் தங்களுடன் எதிர்வாதம் புரிய தைரியமில்லாமல் மந்தைகளாக தலையாட்டிக்கொண்டு இருப்பது ஒரு காரணம். சிலர் இந்தக் கட்சியில் இருப்பது பலனில்லை என்று வேறு கட்சிகளுடன் இணைந்திருப்பதும் ஒரு காரணம். ஒருசிலர் உங்களுடைய மறைவுக்குப் பின் ஜனநாயகம் ஏற்படுமென்று காத்திருப்பதும் ஒருகாரணம் என பல வகைகளாக காரணங்களைப் பிரிக்கலாம்.
நீங்கள் 2004இல் இருந்து இன்றுவரை தன்னிச்சையாக எமது கட்சியில் பலரை உள்வாங்கிப் பின் அவமானப்பட்டிருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கின்றோம். நீங்கள் உங்களிடம் கட்சியின் கணக்கு விபரங்கள் கேட்கக்கூடாது என்று குறிப்பிட்டதிலிருந்து உங்கள் யோக்கியதை கட்சியினருக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. ஒவ்வொரு தடவையும் தேர்தல்களுக்கு உங்கள் இஷ்டப்படி நியமிக்கப்படுபவர்கள் எல்லாரும் கட்சியை விட்டு விலகி மற்றைய கட்சியில் இணைந்து செயற்படுவதையும் தட்டிக் கேட்க திராணியற்றவராக இருக்கின்றீர்கள்.
இந்தக் கட்சியை ஒரு நம்பிக்கையான குழுவிடம் (Trust) ஒப்படைப்பதாகவும் கருத்து தெரிவித்து வந்தீர்கள்! வவுனியாவில் ஒரு கிளையை உங்களிஷ்டப்படி ஸ்தாபித்து அதன் உறுப்பினர்களால் அவமானப்பட்டீர்கள்!
தற்போது தேர்தலுக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இவற்றுக்கு நீங்கள் பதில்தர மாட்டீர்கள் என்பதும் எமக்குத் தெரியும்! ஆனால் தேர்தல் முடிந்த மறுநாள் நீங்கள் இதற்கு பகிரங்கமாக பதில் தரவேண்டும்.
ஏனெனில் 1994 இல் சுயேட்கையாக குமார் பொன்னம்பலம் தலைமையில் கொழும்பில் பெற்ற வாக்குகள் 9.251. அதேபோல கடந்தமுறை 2010இல் கூட்டணி கொழும்பில் பெற்ற வாக்குகள் வெறும் 834.
கடந்த 2013.ல் மாகாணசபைத் தேர்தலில் வேண்டுமென்றே மல்லுக்கட்டி கிளிநொச்சியில் நீங்கள் 6ஆவதாக தமிழரசுக்கட்சி வேட்பாளர்களிடம் வாங்கிக் கட்டியதைவிட – உங்களின் வேட்பாளர்களிடமே(TULF) நீங்கள் வாங்கிக் கட்டியதை மறந்து இம்முறை எந்த அடிப்படையில் அதுவும் கொழும்பில் தேர்தலில் போட்டியிட முன்வந்தீர்கள்? இடையிலே ஒரு தடவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனக் கருத்தும் நீங்கள் தெரிவித்ததாக ஞாபகம்! அதுவும் நினைவு இருக்கிறதா?
கூட்டணியின் அதிருப்திக் குழு சார்பில்
தங்க. முகுந்தன் ஆகிய என்னால் வெளியிடப்பட்டது!