இந்தியா உடனான உறவை கனடா மிகவும் மதிக்கிறது என கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் கூறியுள்ளார்.
கனடாவில் கொல்லப்பட்ட குருநானக் சீக்கிய குருத்வாரா சாஹிப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்திய அரசின் பங்கு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்.இதைத் தொடர்ந்து கனடா மக்களுக்கு விசா வழங்குவதை இந்தியா அரசாங்கம் நிறுத்தியது.
இது போன்ற விடயங்கள் இரு நாடுகளுக்கு இடையிலான விரிசலை அதிகப்படுத்தியுள்ளது.இந்த சூழலில் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் அளித்த பேட்டியில்,
“இந்தியா உடனான உறவு கனடாவுக்கு மிகவும் முக்கியம். அந்நாட்டுடனான உறவை கனடா மிகவும் மதிக்கிறது.அதேவேளை, சட்டத்தைப் பாதுகாத்து எங்கள் குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களிடம் இருக்கிறது.
ஒரு முழுமையான விசாரணையை நடத்தி உண்மையைப் பெறுவதற்கான கடமை உள்ளது.
குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் அது பெரிய பிரச்சனை தான். ஏனென்றால் கனடா மண்ணில் கனடா குடிமகன் ஒருவரை கொல்வது என்பது எங்கள் இறையாண்மையை மீறும் செயல்” என்று கூறியுள்ளார்.