பாகிஸ்தானுக்கு எதிராக கே.எல்.ராகுல் சதம் விளாசிய பிறகும் ஏன் அவரை 4வது வரிசையில் களமிறக்கவில்லை என்று எனக்கு புரியவில்லை என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
கே.எல்.ராகுல் மிரட்டல் ஆட்டம்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் 97 ஓட்டங்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
முன்னதாக அவர் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 4வது வரிசையில் களமிறங்கி 111 ஓட்டங்கள் விளாசியிருந்தார்.
ஆனால் நேற்றைய போட்டியில் 4வது வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். அவர் ஹேசல்வுட் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார்.
யுவராஜ் சிங் குழப்பம்
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் இதுகுறித்து தனது குழப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அணி தங்கள் இன்னிங்ஸை மீண்டும் கட்டமைக்க முயற்சிக்கும்போது, ஷ்ரேயாஸ் ஐயர் இன்னும் நன்றாக சிந்தித்து 4வது துடுப்பாட்ட வீரருக்கான அழுத்தத்தை உள்வாங்க வேண்டும்!
பாகிஸ்தானுக்கு எதிராக (ஆசியக்கோப்பை) 100 ஓட்டங்கள் எடுத்தபோதும் கே.எல்.ராகுல் நான்காவது இடத்தில் ஏன் பேட்டிங் செய்யவில்லை என்று இன்னும் புரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.