உலகக் கிண்ணத்துக்கு நேபாளம், ஓமன் அணிகள் தகுதி

113

அடுத்த ஆண்டு ஆண்களுக்கான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேபாளம் மற்றும் ஓமன் அணிகள் வெள்ளிக்கிழமை தகுதி பெற்றன.

ஆசிய தகுதிச்சுற்று போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதன் அடிப்படையில் அவை இந்த முன்னேற்றத்தை சந்தித்துள்ளன. முன்னதாக, அதன் அரையிறுதிகளில், நேபாளம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தையும், ஓமன் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஹ்ரைனையும் வீழ்த்தின.

டி20 உலகக் கிண்ண போட்டிக்கு நேபாளம் தகுதிபெற்றது இது 2 ஆவது முறை; ஓமனுக்கு இது 3 ஆவது முறை. நேபாளம் 2014 எடிஷனிலும், ஓமன் 2016, 2021 எடிஷன்களிலும் அங்கம் வகித்து, தொடக்க சுற்றிலேயே வெளியேறின.

டி20 உலகக் கிண்ண போட்டியின் 9 ஆவது எடிஷன், அடுத்த ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. 20 அணிகள் பங்கேற்கவுள்ள இந்தப் போட்டிக்கு இத்துடன் 18 அணிகள் தோ்வாகியுள்ளன. எஞ்சிய இரு அணிகள், ஆப்பிரிக்க குவாலிஃபயா் மூலம் நவம்பரில் தோ்வாக உள்ளன.

இதுவரை தகுதிபெற்ற அணிகள் : மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து (நடப்பு செம்பியன்), இந்தியா, நெதா்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், அயா்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூகினி, கனடா, நேபாளம், ஓமன்.

SHARE