ஜனநாயக முறைப்படி, நீதியாகவும் அமைதியாகவும் நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக காரியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கினை பதிவுசெய்த பிரதமர் ரணில், அதனையடுத்து செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சி அறுதி பெரும்பான்மையை பெற்று வெற்றிபெற்று புதிய நாடு ஒன்று உருவாக்கப்படுமென தெரிவித்த ரணில், கடந்த ஜனவரி 8ஆம் திகதி கிடைத்த மக்கள் ஆணையை ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம் என தெரிவித்தார்.
அத்துடன் தேர்தலின்போது சட்டங்களை மீறி செயற்படுவோர் மீது கட்சி பேதமின்றி, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். குறிப்பாக நீதியான தேர்தலை நடத்த பெரும் உதவியளித்த தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் பொலிஸார்இ அரச ஊழியர்கள் அனைவருக்கும் தமது நன்றியையும் தெரிவித்தார்.
இன்று நடைபெறும் இலங்கையின் 15ஆவது நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ரணில் தலைமையில் கூட்டாக அமைக்கப்பட்டுள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கும், எதிர்த்தரப்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் கடும் போட்டி நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் ரணில் வாக்களிக்க வரும்போது, அங்கு பெருமளவான ஆதரவாளர்களும் ஊடகவியலாளர்களும் குழுமியிருந்தமையால் பிரதேசத்தில் சன நெருக்கடியும், வாகன நெருக்கடியும் ஏற்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.