உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறை: “டைம்ட் அவுட்” விக்கெட்டை பறிகொடுத்த இலங்கை வீரர் மேத்யூஸ்

128

 

இலங்கை, வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் அரிதான முறையில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

வரலாற்றில் முதல் முறை
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை, வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

43.2 ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 240 ஓட்டங்கள் இதுவரை குவித்துள்ளது.

ஆனால் இந்த போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் அவுட் ஆகாத முறையில், அதாவது “டைம்ட் அவுட்” அடிப்படையில் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பியுள்ளார்.

ஆட்டத்தின் 24.2 வது ஓவரில் சமர விக்ரமா விக்கெட்டை பறிகொடுத்த பிறகு, அடுத்த ஆட்டக்காரராக மேத்யூஸ் களத்துக்குள் வர வேண்டி இருந்தது.

உடைந்த ஹெல்மட்டை மாற்றி கொண்டு மைதானத்திற்குள் வர ஏஞ்சலோ மேத்யூஸ் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால், வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் நடுவர்களிடம் முறையீடு செய்தார்.

இதையடுத்து டைம்ட் அவுட் அடிப்படையில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டம் இழந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி 3 நிமிடத்திற்குள் அடுத்த பேட்ஸ்மேன் களத்துக்குள் இருக்க வேண்டும், இதனை செய்ய தவறியதால் மேத்யூஸ் டைம்ட் அவுட் விதிப்படி விக்கெட்டை பறிகொடுத்தார்.

SHARE