தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கூட்டமைப்பு என்பதனை மக்கள் நிரூபித்துள்ளனர். தீர்வுக்காக உழைப்போம் – இரா.சம்பந்தன்

330
வட – கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எப்பொழுதும் நாம் காப்பாற்றுவோம். நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளோம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு பெற்றுள்ள வெற்றி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் வடக்கு கிழக்கு மக்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையை மீண்டும் உலகம் அறிய நிரூபித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் கடமைப்பட்டவர்கள். அவர்களின் நம்பிக்கையை எப்பொழுதும் நாம் காப்பாற்றியே தீருவோம்.

வடக்கு கிழக்கில் போட்டியிட்ட மக்கள் செல்வாக்கற்ற சில கட்சிகளின் விஷமத்தனமான பிரசாரத்தினாலும் நடவடிக்கைளினாலும் நாம் அடையவிருந்த இன்னும் பெரிய பாரிய வெற்றி அக்கட்சிகளால் தடைப்பட்டுவிட்டது.

நாம் அக்கட்சிகளை தமிழ் மக்களின் நன்மை கருதி தேர்தலில் இருந்து விலகுமாறு கோரினோம். அவர்கள் அதை செய்யவில்லை. இன்று அவர்கள் எமது மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது.

பெறப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததிலும் பார்க்க சற்று குறைவாக இருந்த போதிலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

தமிழ்க் கூட்டமைப்பை வட – கிழக்கு மக்கள் தங்களுடைய நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக இத்தேர்தலில் தெரிவு செய்திருக்கின்றார்கள். இதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை.

துரதிஷ்ட வசமாக தேர்தலுக்கு முன்பாக சில விஷமத்தனமான பிரசாரங்கள் எம்மீது மேற்கொள்ளப்பட்டன. துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இது எமது வெற்றி வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

எமது செயற்பாட்டைப் பொறுத்தவரை அரசியல் தீர்வு விடயத்தில் கால தாமதம் செய்யாமல் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பது கூட்டமைப்பின் முக்கியமானதும் உறுதியானதுமான நிலைப்பாடாகும்.

இது விடயம் குறித்து எடுக்க வேண்டிய முயற்சிகளை இனி வேகமாக மேற்கொள்வோம்.

எம்மை பொறுத்தவரையில் ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக புதிதாக அமையவிருக்கும் அரசாங்கம் இருக்க வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணையை தொடரும் வகையில் அமையவிருக்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அவ்விதமான நிலைமைக்கு நாங்கள் ஆதரவாக இருப்போமென்று கூற முடியும்.

அமையவிருக்கும் புதிய அரசாங்கமானது தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்க்கமான ஒரு அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கு கடுமையான காத்திரமான முயற்சிகளை காலதாமதம் இன்றி மேற்கொள்ள வேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பாகும்.

யாழ். மாவட்டத்தில் தமிழ்க் கூட்டமைப்பு 5 ஆசனங்களைப் பெற்று பாரிய சாதனை படைத்திருக்கின்ற போதும் 6 ஆசனங்களை பெறுவதற்குரிய வாய்ப்பை மிக மிக சொற்பளவு வாக்கான 6 வாக்குகளால் இழந்துள்ளது என்பது கவலை தருகின்ற விடயமாகும்.

நாம் இவ் விடயம் சம்பந்தமாக தேர்தலுக்கு முன்பே கூறியுள்ளோம். சிறு கட்சிகள் அதாவது ஒரு ஆசனத்தைக் கூட பெற தகுதியற்ற கட்சிகள் மக்களுடைய செல்வாக்கைப் பெறாத கட்சிகள் இவ்வாறானதொரு நிலைக்கு மக்களைத் தள்ளலாமென முன்பே கூறியிருந்தோம்.

இதன் காரணமாக மக்களுடைய உரிமைக்கு பாதகம் ஏற்படுமெனக் கூறினோம். இக்கட்சிகளை தேர்தலில் இருந்து விலகும்படி கோரிக்கை விடுத்தோம். அவர்கள் விலகவில்லை. அடம்பிடித்து போட்டியிட்டார்கள். தற்பொழுது மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் பெற்ற சிறியளவு வாக்குகள் காரணமாக கூட்டமைப்பின் பெரிய வெற்றி பாதிக்கப்பட்டிருக்கிறது.

யாழ். மாவட்டத்தில் 6, ஆசனங்களை பெறுவதற்கு 6 வாக்குகள் தான் போதாமல் இருந்துள்ளன.

இந்நிலைக்கு பொறுப்பானவர்கள் அந்தக் கட்சிகள் மக்களுக்கு பதில் கூற வேண்டும். தமது பொறுப்பை அவர்கள் முழுமையாக ஏற்க வேண்டும்.

 

SHARE