கைதி படுகொலை: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

83

 

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சக கைதிகளால் ஆண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொலை தொடர்பில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே, சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 27ம் திகதிவரைக்கும் விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா என்பவரே தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.

நீதிமன்றில் முன்னிலை
கசிப்பு தொடர்பான வழக்கு ஒன்றின் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவிற்கு அமைய கடந்த நவம்பர் 22 ம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் துரைராஜா கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை 23 ம் திகதி களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை பிணை எடுப்பதற்கு எவரும் இல்லாத நிலையில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

இந்த நிலையில் அவர் மீது கடந்த 27 ம் திகதி சக கைதிகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்டதாகவும் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட நீதவான் பீற்றர் போல் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

SHARE