பொதுத்தேர்தலில் வெற்றிவாகை சூடியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தனது தேசியப் பட்டியலுக்கான உறுப்பினர்கள் பெயர் விவரத்தை நேற்று அறிவித்தது. அதில் தேசியப் பட்டியல் தமிழ் வேட்பாளர்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. ஐ.தே.க. தேசியப் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்படும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் வேலாயுதம், ராம் ஆகியோருக்கு கடைசிநேரத்தில் கதவடைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆறு ஆசனங்களை வென்ற தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியாவது வழங்கப்படவில்லை. வழமைபோல் இம்முறையும் சுவாமிநாதனுக்கே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹஸன் அலி, பஷீ சேகுதாவூத், அ.இ.ம.க. தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஜெமீல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஐ.தே.க. ஏற்கனவே தனது 29 தேசியப் பட்டியல் உறுப்பினர்களது பெயர் விவரங்களைத் தேர்தலுக்கு முன்னரே அறிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் அதில் சில திருத்தங்களுடன் 13 பேரின் விவரங்களை வெளியிட்டிருந்தது.
அதில் மலிக் சமரவிக்கிரம, கரு ஜயசூரிய, டீ.எம்.சுவாமிநாதன், அத்துரலியே ரத்தன தேரர் (ஹெல உறுமய), ஜயம்பதி விக்ரமரத்ன, திலக்க மாரப்பனே, சீ.ஏ.மாரசிங்க, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, எம்.எச்.எம்.நவாவி (அ.இ.ம.கா.), எம்.எஸ்.சல்மான் (மு.கா.), ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் (மு.கா.), அனோமா கமகே, சிறிநால் டி மெல் ஆகியோர் அதில் உள்ளடங்குகின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்டிருந்த கட்சிப் பொதுச் செயலாளர் ஹஸன் அலிக்கு மற்றும் பUர் சேகுதாவூத் ஆகியோருக்குப் பதிலாக அமைச்சர் ஹக்கீமின் சகோதரர் டாக்டர். ஹாபீஸ் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான் ஆகியோரது பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
அது தவிர, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியப் பட்டியல் உறுப்பினராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீலே நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், இம்முறை ஐ.தே.க. சார்பில் புத்தளத்தில் போட்டியிட்ட – ஒருசில வாக்குகளால் தோல்வியடைந்த எம்.எச்.எம்.நவாவிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிட்ட ஜாதிக ஹெல உறுமய ஓர் ஆசனமே வெற்றிகொண்டிருந்தது. எனினும், அக்கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினர் வழங்கப்பட்டிருந்ததுடன், அ.இ.ம.க. 5 ஆசனங்களை வெற்றிகொண்டிருந்ததுடன் அக்கட்சிக்கும் ஓர் ஆசனமும் வழங்கப்பட்டுள்ளது. ஆறு ஆசனங்களே வெற்றிகொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இரு தேசியப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிட்டு ஆறு ஆசனங்களை வெற்றிகொண்டு தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு எந்தவித ஆசனங்களும் வழங்கப்படவில்லை. பதுளையில் போட்டியிடவிருந்த இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் மற்றும் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவிருந்த அஸாத் சாலி ஆகியோருக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்குவதாக வாக்குறுதி வழங்கிய ஐ.தே.க., இறுதிநேரத்தில் அவர்களுக்கு வழங்காது ஏமாற்றியுள்ளது. இதேவேளை, அவர்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்று இலகுவாக நாடாளுமன்றம் வந்திருப்பார்கள். அது மட்டுமல்லாது, திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள தயா கமகேயின் மனைவி அனோமா கமகேவுக்கும் தேசியப் பட்டியல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்கனவே கடந்த முறையும் தேசியப் பட்டியல் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐ.தே.க. தேசியப் பட்டியலில் பெண் பிரதிநிதித்துவம் அவசியம் எனக் கருதப்படுமாயின் அனோமாவுக்குப் பதிலாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ரோஸி சேனாநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.